‘வென்ச்சர் கேபிடல் நிதி கிடைத்திருந்தால் தோல்வி கூட அடைந்திருக்கலாம்’
இதுவரை நான் முறையாக படித்ததெல்லாம் வீண். அதனால் பெரிதும் படிக்க வில்லை என்றாலும் தகுதியான நபர்களை எடுத்து நாங்கள் தயார்படுத்திக்கொள்கிறோம் என்று சொல்பவர் சென்னையில் உள்ள ஸ்ரீதர் வேம்பு. ஜோஹோ (zoho) நிறுவனத்தின் நிறுவனர்களுள் ஒருவர்.
மென்பொருள் துறையில் இருக்கும் நிறுவனங்களை சேவை நிறுவனங்கள் புராடக்ட் நிறுவனங்கள் என இருவகையாக பிரிக்கலாம். இந்த நிறுவனம் சாப்ட்வேர் புராடக்ட்களில் இருக்கிறது. கடந்த வாரம் 3 புதிய புராடக்ட்களை (product) அறிமுகம் செய்த பிறகு 27 புராடக்ட்கள் சந்தையில் உள்ளன. அறிமுக நிகழ்ச்சியில் அவருடன் விவாதித்தோம். அந்த நேர்காணலில் இருந்து…
அப்பா உயர்நீதிமன்றத்தில் பணிபுரிந்தவர். தாம்பரத்தில் பள்ளிக்கல்வி, சென்னை ஐஐடி யில் இசிஇ, பிரின்ஸன் பல்கலை கழகத்தில் எலெக்ட்ரிக்கல் இன்ஜினீ யரிங்கில் பிஹெச்டி முடித்த பிறகு qualcomm நிறுவனத்தில் 2 வருடங்கள் பணிபுரிந்தார்.
அதன் பிறகு இந்தியாவில் ஏதாவது தொடங்க வேண்டும் என்று முடிவு செய்து தொழில்முனைவு வாழ்க்கையை 1995-ம் ஆண்டு ஆரம்பித்தவர்.
எலெக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங் துறையில் பிஹெச்டி முடித்த நீங்கள் மென்பொருள் துறைக்கு வந்தது எப்படி? உங்களுக்கு மென்பொருள் பற்றி அப்போது தெரியுமா?
எனக்கு எதுவும் தெரியாது. இந்தியாவில் பிஸினஸ் தொடங்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டோம். ஆனால் முதலீடு செய்ய எங்களுக்கு பணம் கிடையாது. இப்போது போல அப்போது வென்ச்சர் கேபிடல் முதலீடு கிடையாது. பணம் இல்லாமல் சாப்ட்வேர் துறையில்தான் தொழில் தொடங்க முடியும்.
உங்களுக்கு சாப்ட்வேரும் தெரியாது. தொழில் அனுபவமும் கிடையாது ஒரே நேரத்தில் எப்படி இரண்டு ரிஸ்க் எடுத்தீர்கள்?
எனக்கு தெரியாது என்றாலும். என்னுடைய சகோதரர் குமாருக்கு தெரியும். அவர் என்னுடன் குவால்காம் நிறுவனத்தில் பணிபுரிந்தார் என்பதால் அது ஒரு ரிஸ்க்காக தெரியவில்லை. பணம் இல்லாமல் தொழில் தொடங்குகிறோம். அதனால் நஷ்டம் வரப்போவதில்லை. ஒரே நஷ்டம் மாதாமாதம் சம்பளம் வராது. அதற்கு முன்பு இருந்த சேமிப்பு, தவிர சிக்கனமான வாழ்க்கை முறை ஆகியவை எனக்கு கைகொடுத்தது. தொழில் கற்றுக்கொள்ள வேண்டும் என்றுதான் தொழில் ஆரம்பித்தோம். இரு வருடத்துக்கு பிறகுதான் பாதுகாப்பான நிலைமைக்கு வந்தோம்.
நீங்கள் வென்ச்சர் கேபிடல் மூலம் நிதி திரட்டவில்லை. சிலர் முதலீடு செய்ய வந்தபோதும் வேண்டாம் என்று மறுத்துவிட்டீர்கள். ஒரு வேளை வென்ச்சர் கேபிடல் மூலம் முதலீடு வாங்கி இருந்தால் தற்போது இருப்பதை விட பெரிய நிறுவனமான வளர்ந்திருக்கலாம் என்று தோன்றியதுண்டா?
அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. பல நிறுவனங்கள் நிதி திரட்ட முயன்றாலும் சில நிறுவனங்களுக்கே நிதி கிடைக்கிறது. அதிலும் 10-ல் இரண்டு நிறுவனங்கள்தான் வெற்றி அடைகின்றன. எட்டு நிறுவனங்கள் தோல்வியடைகின்றன. ஒரு வேளை நாங்கள் நிதி திரட்டி இருந்தால் தோல்வி கூட அடைந்திருக்கலாம்.
நான் வென்ச்சர் கேபிடலே வேண்டாம் என்று சொல்லவில்லை. உங்களுக்கு தேவையா என்பதை முடிவு செய்யுங்கள் என்றுதான் சொல்கிறேன்.
இவ்வளவு கவனமாக வென்ச்சர் கேபிடல் நிறுவனங்களைத் தவிர்க்க என்ன காரணம்?
அவர்களிடம் முதலீடு வாங்கிய பிறகு, அவர்களுக்கு லாபம் கொடுக்கிற மாதிரி நிறுவனத்தை நடத்த வேண்டும். நிறுவனத்தின் கலாச்சாரமே மாறுபடும். வென்ச்சர் கேபிடல் முதலீடு வாங்கிய நிறுவனங்கள் இரண்டாவதாக ஒரு புராடக்ட் ஐடியாவை கண்டுபிடிப்பது கடினம். வென்ச்சர் கேபிடல் முதலீடு வாங்கிய பிறகு விற்பனை மற்றும் மார்கெட்டிங்குக்கு அதிகம் செலவு செய்ய வேண்டியதாக இருக்கும். ஆராய்ச்சிக்கு செலவு செய்ய முடியாது. எட்டு வருடங்களுக்குள் அவர்கள் வெளியேறுவதற்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். அப்போது அதை நோக்கியே அனைத்து முடிவுகளும் இருக்குமே தவிர நம்முடைய இலக்குகளை அடைய முடியாது.
வென்ச்சர் கேபிடல் முதலீடு வேண்டாம் என்பதற்கான காரணம் புரிந்துகொள்ள கூடியது. ஏன் ஐபிஓ கூட வெளியிடவில்லை.? ஐபிஓ வெளியிட்டிருந்தால் பொதுமக்களிடம் பிரபலமான நிறுவனமாக இருக்கலாமே?
பண்ணலாம். இப்போதைக்கு பணம் தேவை இல்லை. 10 வருடம் வரை திட்டம் இல்லை. ஐபிஓ வெளியிட்டுதான் ஆக வேண்டும் என்பதில்லை. நாங்கள் இதுவரை விளம்பரங்களுக்கு செலவு செய்யவில்லை. அதன் மூலம் இந்த பிரச்சினையைத் தீர்க்க முடியும்.
நீங்கள் வென்ச்சர் கேபிடல் முதலீடு வாங்கவில்லை. ஆனால் கிழக்கு பதிப்பகத்தில் முதலீடு செய்திருக்கிறீர்களே?
வென்ச்சர் கேபிடல் முதலீடு என்பது பல பேருடைய பணத்தை சேர்த்து முதலீடு செய்வது. அவர்களுக்கு லாபம் ஈட்ட வேண்டும், வெளியேற வேண்டும் என்ற கட்டாயம் இருக்கும். வாரன் பபெட் முதலீடு செய்கிறார். ஆனால் அவர் வென்ச்சர் கேபிடலிஸ்ட் கிடையாது. அது போல நான் என்னுடைய சொந்த பணத்தை முதலீடு செய்திருக்கிறேன். குறிப்பிட்ட காலத்தில் வெளியேற வேண்டும் என்ற கட்டாயம் இல்லையே! மேலும் நானாக சென்று அவர்களிடத்தில் எந்த ஆலோசனையும் சொல்வது கிடையாது. நான் என் வேலையை பார்க்கிறேன். அவர்கள் அவர்களுடைய வேலையை பார்க்கிறார்கள்.
ஜோஹோவின் அனைத்து புராடக்ட்களும் பிஸினஸ் டு பிஸினஸாக இருக்கிறது. வாடிக்கையாளர்களை சென்றடையும் திட்டம் இல்லையா?
எங்களுடைய சில புராடக்ட் களை இப்போது வாடிக்கை யாளர்களும் பயன்படுத்தலாம். இதை தொழில் நிறுவனங்கள் மட்டுமே பயன்படுத்தி வந்தாலும், வாடிக்கையாளர்களும் பயன்படுத்துவதற்கு திட்டங்கள் இல்லை. ஆனால் வருங்காலத்தில் அதைப்பற்றி யோசிப்போம்.
சந்தையில் இருக்கும் பிரபலமாக இருக்கும் ஏதேனும் ஒரு புராட்க்டின் மேம்பட்ட வடிவம்தான் உங்களுடையது என்று கூறினால் அதற்கு உங்கள் பதில் என்ன?
புதுமைகள் எப்போதும் அப்படிதான் வரும். ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோனை மேலும் ஒரு போன் என்று சொல்லலாம். ஆனால் அதனுடைய அம்சங்கள் முற்றிலும் வேறு.
நன்றி : தி இந்து
Recent Comments