கார்ப்பரேட் நிறுவனங்கள் என நாம் அழைத்தாலும் இந்தியாவில் புரொஃபஷனல்களால் நடத்தப்படும் நிறுவனங்கள் என்பது மிகமிகக் குறைவு. குடும்ப நிறுவனங் களே அடுத்த தலைமுறையில் கார்ப்பரேட் நிறுவனங்களாகக் காலத்துக்கேற்ப மாறி வருகின்றன. இருந்தாலும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்குச் செல்லும்போது, தொழில் வளர்ச்சியைவிட தனிப்பட்ட முறையில் அந்தத் தொழில் யாருக்குச் செல்வது என்னும் சர்ச்சை எழுகிறது.

ரிலையன்ஸ் குழுமத்தில் சகோதரர் களுக்குள் பிரச்னை ஏற்பட்டு, அந்த கம்பெனி இரண்டாக உடைந்தது ஊரறிந்த வரலாறு. இதைவிட டாடா குழுமத்தில் உள்ள அதிகாரப் போட்டி நான்கு ஆண்டுகளுக்கு மேல் பொது வெளியில் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதுபோன்ற குடும்பச் சிக்கல்களைத் தவிர்க்கும் நடவடிக்கையைத் தமிழகத்தைச் சேர்ந்த டி.வி.எஸ் குழுமம் எடுத்திருக்கிறது. 109 ஆண்டுகளாகச் செயல்பட்டுவரும் டி.வி.எஸ் குடும்ப நிறுவனங்களை, தற்போது நடத்தி வரும் குடும்பமே அந்தந்த நிறுவனத்தை தொடர்ந்து முழுமையாக நடத்தலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. உதாரணத்துக்கு, டி.வி.எஸ் மோட்டார் நிறுவனத்தை நடத்தி வருகிறார் வேணு ஸ்ரீனிவாசன். இனி அவரின் குடும்பமே அந்த நிறுவனத்தை நிர்வாகம் செய்யலாம். இதுபோல தற்போதைய நிர்வாகமே அந்தந்த டி.வி.எஸ் நிறுவனங்களிலும் நிர்வாகம் செய்யலாம் என முடிவாகி உள்ளது.

ஏ.கே.பிரபாகர்

ஏ.கே.பிரபாகர்

இது மட்டுமல்லாமல் வேறு சில முக்கியமான முடிவுகளையும் டி.வி.எஸ் எடுத்திருக்கிறது. முதலா வதாக, ஹோல்டிங் கம்பெனி என்னும் அமைப்பை நீக்க முடிவெடுக்கப்பட்டு உள்ளது. அதேபோல, கிராஸ் ஹோல்டிங் என்பதையும் நீக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஒரு குடும்பம் மற்ற குடும்ப நிறுவனங்களில் வைத்திருக்கும் பங்கு முதலீடு மீண்டும் திரும்ப வாங்கப்படும். ஆனால், புரமோட்டர் ஹோல்டிங்கில் ஏற்படும் மாற்றம் குறித்து அதிகாரப் பூர்வமாக எதுவும் அறிவிக்கப்பட வில்லை. அதேபோல, டி.வி.எஸ் என்னும் பெயரை குடும்ப உறுப்பினர்கள் பயன்படுத்துவதற்கு எந்தத் தடையும் இல்லை. ராயல்டி இல்லாமல் நீண்ட காலத்துக்கு டி.வி.எஸ் என்னும் பெயரை குடும்ப உறுப்பினர்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

‘‘தற்போது நான்காவது தலைமுறை டி.வி.எஸ் நிறுவனத்தை நிர்வாகம் செய்து வருகிறது. ஒவ்வொரு குடும்பமும் டி.வி.எஸ் குழுமத்தில் மற்ற பல குடும்ப நிறுவனங்களில் பங்குகளை வைத்திருப்பதால், காலப்போக்கில் நிறுவனத்தை நடத்துவதில் சிக்கல் ஏற்படக்கூடும். அதனால் ஒரே நிர்வாகத்தின்கீழ் நிறுவனங்களைக் கொண்டுவருவதற்கு இதுபோன்ற சுமுக ஏற்பாடு தேவை’’ எனப் பங்குச் சந்தை அமைப்புகளுக்கு எழுதப்பட்ட கடிதத்தில் டி.வி.எஸ் அன்ட் சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் குடும்பத்தின் மூத்த உறுப்பினரான சுரேஷ் கிருஷ்ணா தெரிவித்திருக்கிறார்.

காலத்துக்கேற்ப நிர்வாகத்தை மாற்றி அமைத்த டி.வி.எஸ்..! - பங்குகளின் விலை உயர்ந்ததன் பின்னணி!

டி.வி.எஸ் குழுமத்தில் பட்டிய லிடப்பட்ட மற்றும் பட்டியலிடப் படாத சுமார் 50-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளன. இந்தத் தகவல் வெளியான அடுத்த நாள், பங்குச் சந்தையில் பட்டியலிடப் பட்டு வர்த்தகமாகிவரும் டி.வி.எஸ் குழும நிறுவனங்களின் பங்கு விலை கணிசமாக உயர்ந்தன. டி.வி.எஸ் எலெக்ட்ரானிக்ஸ் 17% அளவுக்கு உயர்ந்தது. டி.வி.எஸ் ஸ்ரீசக்கரா, சுந்தரம் கிளேட்டன், வீல்ஸ் இந்தியா, சுந்தரம் பாஸனர்ஸ், சுந்தரம் பிரேக் லைன்ஸ் உள்ளிட்ட நிறுவனங் களின் பங்கு விலையும் உயர்ந்தன.

டி.வி.எஸ் குழுமத்தின் இந்த முடிவு பற்றிப் பங்குச் சந்தை நிபுணர் ஏ.கே.பிரபாகரிடம் கேட்டோம். ‘‘டி.வி.எஸ் குழுமத்தின் இந்த முடிவு முக்கிய மானது; மாறிவரும் காலத்துக்கு அவசியமானதும்கூட. 100 ஆண்டு களுக்கு மேல் ஒரு குழுமம் செயல் பட்டுவரும் சமயத்தில் இது போன்ற முடிவுகள் எடுக்கப்பட வேண்டியது அவசியம்.

இந்த முடிவின்மூலம் அந்தந்தத் தொழில் நிறுவனங்கள் தங்கள் தொழில் தொடர்பான முடிவு களை வேகமாக எடுக்க முடியும். தவிர, தனித்தனியாக இயங்கு வதால், புதுப்புது விஷயங்களைச் செய்வதற்கும் வாய்ப்பும் இருக்கிறது. இதனால்தான் இந்தச் செய்தி வந்த உடனேயே பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட டி.வி.எஸ் குழும நிறுவனங்கள் அனைத்தும் கணிசமாக விலை உயர்ந்தன’’ என்றார்.

காலத்துக்கேற்ப மாறும் டி.வி.எஸ் குழுமம் இன்னும் பல நூறு ஆண்டுகளைத் தாண்டி நிற்கும் என்பதில் சந்தேகமில்லை!

டி.வி.எஸ்: புதிய மாற்றங்கள்!

டி.வி.எஸ் குழுமம் 1911-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 50-க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் 50,000 பணியாளர்கள் உள்ளனர். டிவி.எஸ் குழும நிறுவனங்களை நிர்வகிப்பவர்கள் விவரம் பின்வருமாறு…

சுரேஷ் கிருஷ்ணா / ஆர்த்தி கிருஷ்ணா – சுந்தரம் பாஸனர்ஸ்

வேணு ஸ்ரீனிவாசன் – டி.வி.எஸ் மோட்டார், டி.வி.எஸ் கிரெடிட், சுந்தரம் கிளேட்டன்

எஸ்.ராம் – வீல்ஸ் இந்தியா

ஆர்.தினேஷ் – டி.வி.எஸ் சப்ஸை செயின் சொல்யூஷன்ஸ், டி.வி.எஸ் ஆட்டோமொபைல் சொல்யூஷன்ஸ்.

கோபால் ஸ்ரீனிவாசன் – டி.வி.எஸ் கேபிட்டல் ஃபண்ட்ஸ்

ஷோபனா ராமச்சந்திரன் – டி.வி.எஸ் ஸ்ரீசக்ரா

எஸ்.விஜி – சுந்தரம் ஃபைனான்ஸ், பிரேக்ஸ் இந்தியா.

நன்றி : நாணயம் விகடன்