பெரிய அளவில் முதலீட்டைப் பெறும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சில ஆண்டுகளிலேயே காணாமல் போக வாய்ப்புண்டு என்பதற்கு உதாரணமாக விளங்குகிறது ஹைக் (Hike) செயலி. வாட்ஸ்அப் போன்ற சேவையைத் தரும் இந்தச் செயலி, கடந்த திங்கள்கிழமை அன்று திடீரென மூடப்பட்டு, பிளே ஸ்டோரிலிருந்து வெளியேறியது.
இந்த ‘ஹைக்’ செயலியைத் தொடங்கி நடத்தியவர் வேறு யாருமல்ல, ஏர்டெல் நிறுவனத்தின் தலைவர் சுனில் மிட்டலின் மகன் கவின் மிட்டல்தான். ‘ஹைக்’ செயலி 2013-ம் ஆண்டு முதல் சாஃப்ட்பேங்க், டென்சென்ட் ஹோல்டிங்க்ஸ், டைகர் குளோபல், பாக்ஸ்கான் டெக்னாலஜி உள்ளிட்ட நிறுவனங்களிடமிருந்து முதலீட்டைத் திரட்டியது. 2016-ம் ஆண்டு 17.5 கோடி டாலர் முதலீட்டைத் திரட்டியது. அப்போது, அந்த நிறுவனம் 100 கோடி டாலர் சந்தை மதிப்பில் மதிப்பிடப்பட்டது. ஆனால், லாபத்தில் கவனம் செலுத்தாததால், இந்த நிறுவனம் தற்போது மூடப்பட்டிருக்கிறது.
சில ஆண்டுகளுக்கு முன் இந்தச் செயலியை 10 கோடிக்கும் அதிகமானவர்கள் பயன்படுத்தினர். ஆனால், வாட்ஸ்அப் தந்த போட்டியை இந்த நிறுவனத்தால் சமாளிக்க முடியவில்லை. இதைத் தொடர்ந்து, ‘‘சர்வதேச நிறுவனங்களை இந்தியா வில் தடை செய்யாவிட்டால் இந்திய நிறுவனங்கள் வளர முடியாது’’ என்று கோரிக்கை வைத்திருக்கிறார் கவின் மிட்டலின் தந்தை சுனில் மிட்டல்!
நன்றி : நாணயம் விகடன்
Recent Comments