தொழில் நடத்தும்போது தவறான முடிவெடுப்பது இயல்புதான். ஆனால், தெரிந்தே முதலீடுகளை தவறாக மாற்றுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அப்படி ஒரு வேலையைத் தான் கடந்த சில ஆண்டுகளாக திவான் ஹவுஸிங் ஃபைனான்ஸ் நிறுவனம் (டி.ஹெச்.எஃப்.எல்) செய்து வந்தது.
திவால் நிலைக்குச் சென்றுவிட்ட இந்த நிறுவனத்தை பிரமல் குழுமம் வாங்குவதற்கு தற்போது அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. டி.ஹெச்.எஃப்.எல் நிறுவனத்தில் நடந்த முறைகேடு என்ன, அந்த முறைகேடு எப்படி நடந்தது, டி.ஹெச்.எஃப்.எல் நிறுவனத்தை வாங்க என்னென்ன நிறுவனங்கள் போட்டியிட்டன எனப் பல விஷயங்களை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
அம்பலமாக்கிய கோப்ராபோஸ்ட்
2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் அதிரடி ஆபரேஷன் மூலம் பல நிறுவனங்களின் தகிடுதத்தங்களை வெட்டவெளிச்சமாக்கிய கோப்ரா போஸ்ட் நிறுவனம், டி.ஹெச்.எஃப்.எல் நிறுவனத்தில் நடக்கும் முறைகேடுகள் குறித்து தகவல் வெளியிட்டது. அந்த நிறுவனத்தின் நிறுவனர்கள் சுமார் ரூ.31,000 கோடிக்கு போலி நிறுவனங்கள் மூலம் இதர சொத்துகளை வாங்கியிருப்பதாகக் குற்றம் சாட்டியது.
ஆரம்பத்தில் இந்தச் செய்தியை டி.ஹெச்.எஃப்.எல் மறுத்தது. ஆனால், கோப்ராபோஸ்ட் நிறுவனம் பல ஆதாரங்களுடன் செய்தியை வெளி யிட்டதால், டி.ஹெச்.எஃப்.எல் நிறுவனத்தை நடத்தியவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை.
சுமார் 2.6 லட்சம் போலிக் கணக்குகள் மூலம் இந்தத் தொகை மாற்றப்பட்டு வெளிநாடுகளில் சொத்துகள் வாங்கப்பட்டிருக் கின்றன. இங்கிலாந்தில் உள்ள ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் டி.ஹெச்.எஃப்.எல் முதலீடு செய்தது. தவிர, இலங்கையில் நடக்கும் உள்நாட்டு கிரிக்கெட் தொடரில் ஓர் அணியை டி.ஹெச்.எஃப்.எல் வாங்கியது.
வங்கியில் மட்டும் கடன் வாங்காமல், சிறு டெபாசிட்டுகள், கடன் பத்திரங்கள் மூலமும் திரட்டிய நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியிருக்கிறது.
யெஸ் வங்கியின் நிதி மோசடி வழக்கில் டி.ஹெச்.எஃப்.எல் நிறுவனர்களை அமலாக்கத்துறை கைது செய்தது. தற்போதுவரை டி.ஹெச்.எஃப்.எல் நிறுவனர்கள் சிறையில் உள்ளனர்.
இந்த நிலையில், நிறுவனத்தை மீட்க ஆர்.சுப்ரமணியகுமார் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. நிறுவனத்தை மீட்பதற்கு கடந்த ஜனவரியில் விண்ணப் பங்களை வரவேற்பதாக இந்தக் குழு அறிவித்தது. சரியாக ஓர் ஆண்டில் டி.ஹெச்.எஃப்.எல் நிறுவனம் பிரமல் குழுமத்துக்கு மாறவிருக்கிறது.
வாங்குவதில் கடும் போட்டி
டி.ஹெச்.எஃப்.எல் நிறுவனத் தைக் கைப்பற்ற மூன்று நிறுவனங் களுக்கு இடையே கடும் போட்டி யிருந்தது. அதானி குழுமம், பிரமல் குழுமம் மற்றும் முதலீட்டு நிறுவனமான ஆக்ட்ரீ ஆகிய மூன்று நிறுவனங்களிடையே போட்டி இருந்தது. ஆரம்பத்தில் அனைத்து நிறுவனங்களும் குறைவான தொகையை நிர்ணயம் செய்ததால், தொகையை மறு பரிசீலனை செய்ய முடிவெடுக்கப் பட்டது.
இத்தனைக்கும் ஆக்ட்ரீ நிறுவனம் கூடுதல் தொகைக்கு டி.ஹெச்.எஃப்.எல் நிறுவனத்தை வாங்கத் தயாராக இருந்த போதிலும், கடன் கொடுத்தவர் களின் குழு (committee of creditors) பிரமல் குழுமத்தையே தேர்வு செய்திருக்கிறது. கடன் கொடுத்த வர்களில் 94% பேர் பிரமல் குழுமத்தையே தேர்வு செய்திருக் கிறார்கள்.
பிரமல் குழுமம் ரூ.37,300 கோடி தந்து, டி.ஹெச்.எஃப்.எல் நிறுவனத்தை வாங்கத் திட்ட மிட்டிருக்கிறது. இதில் ரூ.12,700 கோடியை உடனடியாகக் கொடுக்க ஒப்புக்கொண்டிருக் கிறது. (ஆனால், ஆக்ட்ரீ ரூ11,646 கோடியை மட்டுமே உடனடி ரொக்கமாகத் தர முன்வந்தது.) ஆக்ட்ரீ நிறுவனத்தைவிட பிரமல் குழுமம் உடனடியாகக் கூடுதல் தொகையைக் கொடுக்க ஒப்புக் கொண்டிருப்பதால், கடன் கொடுத்தவர்கள் பிரமல் குழுமத்தைத் தேர்வு செய்திருக் கிறார்கள். தவிர, ஆக்ட்ரீ நிறுவனத்தின் விதிமுறைகளும் சிக்கலாக இருப்பதாகவே சிலர் தெரிவித்திருக்கிறார்.
மீதமுள்ள தொகையை அடுத்த ஐந்தாண்டுகளுக்குக் கடன் பத்திரங்கள் மூலமாகத் தர பிரமல் ஒப்புக்கொண்டிருக்கிறது.
பிரமலுக்கு என்ன கிடைக்கும்?
ஏற்கெனவே இருக்கும் நிதிச் சேவை பிரிவில் டிஹெச்.எஃப்.எல்-யை இணைக்க பிரமல் முடிவெடுத்திருப்பதாகத் தெரிகிறது. தவிர, பிரமல் குழுமம் இதுவரை கார்ப்பரேட் கடன் களில் அதிக கவனம் செலுத்தி வந்திருக்கிறது. ஆனால், ரீடெயில் பிரிவில் அதிக கவனம் செலுத்தி வந்த டி.ஹெச்.எஃப்.எல் நிறுவனத்தில் இணைவதன் மூலமாக ரீடெயில் பிரிவிலும் கவனம் செலுத்த முடியும்.
ரூ.27,000 கோடி அளவுக்கு ரீடெயில் கடன்களை டி.ஹெச்.எஃப்.எல் கொடுத்திருக்கிறது. இதில் ரூ.17,000 மதிப்புள்ள கடன்கள் சீராக இருப்பதாகவும் மீதமுள்ள ரூ.10,000 கோடி மதிப்புள்ள கடன்கள் கடன் மறுசீரமைப்பு மற்றும் வாராக் கடன் பிரிவில் இருக்கிறது. இந்த ரீடெயில் கடன் தொகுப்பு பிரமலுக்கு கிடைக்கும். தவிர, குழுமத்தின் பணியாளர்கள் மற்றும் 250 கிளைகளும் உடனடியாக பிரமல் குழுமத்துடன் இணைய இருக்கிறது.
கடன் கொடுத்த வங்கிகளுக்கு?
தற்போது வழங்கப் பட்டிருக்கும் திட்டத்தின்படி, வங்கிகள் மூன்றில் ஒரு பங்கு தொகையை மட்டுமே பெற முடியும். மீதமுள்ள தொகையை இழக்க வேண்டியிருக்கும். அதிகபட்சமாக எஸ்.பி.ஐ ரூ.10,000 கோடியைக் கொடுத்திருக்கிறது. தவிர, பேங்க் ஆஃப் இந்தியா, கனரா வங்கி, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, சிண்டிகேட் பேங்க், பேங்க் ஆஃப் பரோடா, சென்ட்ரல் பேங்க், ஐ.டி.எஃப்.சி வங்கி, ஹெச்.டி.எஃப்.சி மற்றும் நேஷனல் ஹவுஸிங் ஃபைனான்ஸ் ஆகியவை கடன் தந்திருக்கின்றன. இந்த வங்கிகள் இந்தக் கடன் தொகைக்கு கடந்த காலாண்டுகளில் ஒதுக்கீடு செய்திருப்பதால், அடுத்து வரும் காலாண்டுகளில் இந்த வங்கிகளின் லாபம் சிறிதளவு உயர வாய்ப்பிருப்பதாக வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
தவிர, டெபாசிட்டுகள் மற்றும் கடன் பத்திரங்கள் மூலமாகச் சுமார் ரூ.45,000 கோடியை நிதியாக இந்த டி.ஹெச்.எஃப்.எல் பெற்றிருக்கிறது. இவர்களும் பெரும் அளவுக்கு நஷ்டத்தைச் சந்திக்க வேண்டும் என்றே தெரிகிறது. அதிக தொகையை இழக்க வேண்டியிருப்பதால், பிரமல் நிறுவனத்துக்கு டி.ஹெச்.எஃப்.எல் செல்வதை ஃபிக்ஸட் டெபாசிட் தாரர்களும் விரும்பவில்லை. இதனால் வழக்கு தொடுத்திருக்கிறார்கள். தவிர, பிரமல் குழுமத்துக்கு எதிராகவும் வாக்களித்திருக்கிறார்கள். ஃபிக்ஸட் டெபாசிட்தாரர்கள் முழு தொகையையும் கேட்பதால் புதிய சிக்கல் எழுந்திருக்கிறது.
பிரமல் மட்டுமல்லாமல், ஏலத்தில் கலந்துகொண்ட மூன்று நிறுவனங்களுமே டி.ஹெச்.எஃப்.எல் பங்குகளுக்கு எந்த மதிப்பும் வழங்கவில்லை. லக்ஷ்மி விலாஸ் பேங்கில் நடந்ததுபோலவே. டி.ஹெச்.எஃப்.எல் நிறுவன பங்குகளுக்கு எந்தத் தொகையும் வழங்க முடியாது என அறிவிப்பு வெளியானது. ஆனால், டி.ஹெச்.எஃப்.எல்லை பிரமல் வாங்கப் போவதாக செய்தி வெளியானதில் இருந்து அதன் பங்குகள் உயரத் தொடங்கி இருக்கின்றன. இந்த விஷயத்தில் இறுதியாக என்ன நடக்கும் என்பது தெரிந்த பிறகே பங்குகளின் எதிர்காலம் தெரியும்.
டி.ஹெச்.எஃப்.எல் பிரச்னையில் இன்னும் தீர்க்க வேண்டிய சிக்கல்கள் உள்ளன. அனைத்துத் தரப்பும் திருப்தி அடையும் தீர்வு கிடைக்காது என்றாலும் தீர்வை நோக்கிச் செல்கிறது டி.ஹெச்.எஃப்.எல் சிக்கல்!
குறைந்தது பங்கு விலை!
பங்குகளின் விலையும் குறையத் தொடங்கியது. 2018-ம் ஆண்டு செப்டம்பரில் 678 ரூபாய் என்னும் அளவில் வர்த்தகமான இந்த பங்கு வேகமாகச் சரியத் தொடங்கி ரூ.20 என்னும் அளவுக்கு குறைந்தது. அனைத்தும் கைமீறி செல்லவே, 2019-ம் ஆண்டு ஜூலையில் என்.சி.எல்.டி வசம் (தேசிய சட்ட நிறுவனத் தீர்ப்பாயம்) வழக்கு சென்றது. அந்தச் சமயத்தில், ரூ.83,873 கோடி அளவுக்கு நிறுவனத்துக்குக் கடன் இருந்தது. நேஷனல் ஹவுஸிங் பேங்க், வங்கிகள், டெபாசிட்தாரர்கள், கடன் பத்திரங்கள் மூலம் இந்தத் தொகையை செலுத்த வேண்டியிருந்தது.
நன்றி : நாணயம் விகடன்
Recent Comments