கோடைக்காலத்தில் தொடங்க வேண்டிய ஐ.பி.எல் குளிர்காலத்தில் தொடங்கியிருக்கிறது. ஐ.பி.எல் என்றாலே பார்வையாளர்களுக்கு டிக்கெட் கிடைப்பது பெரும் தட்டுப்பாடாக இருக்கும். ஆனால், இந்தமுறை அந்தப் பிரச்னை இல்லை.
காரணம், பார்வையாளர்கள் இல்லாமலே இந்த ஐ.பி.எல் நடக்கிறது. ஆனாலும், ஐ.பி.எல் பிசினஸ் சக்கைப் போடு போட்டுக்கொண்டுதான் இருக்கிறது. கொரோனா காலத்திலும் ஐ.பி.எல் விளம்பரங்கள் தொடர்பாக நடந்த சர்ச்சைகள் அதிலிருக்கும் பிசினஸ் வாய்ப்புகளை நமக்கு எடுத்துச் சொல்கிறது. ஐ.பி.எல் வியாபாரத்தில் நடந்த பல டிவிஸ்ட் அண்ட் டர்ன்களை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
விவோ வெளியே; ட்ரீம் லெவன் உள்ளே..!
ஏப்ரல், மே மாதங்களில் நடந்திருக்க வேண்டிய ஐ.பி.எல் எப்போது நடக்கும் என்பது முடிவெடுக்க முடியாத நிலையில், ஆஸ்திரேலியாவில் நடக்க இருந்த டி20 உலகக் கோப்பை தள்ளிப்போக, அதனால் செப்டம்பரில் ஐ.பி.எல் போட்டியை நடத்த முடிவெடுக்கப்பட்டது. ஆனால், ஜூலை மாதம் வாக்கில், இந்தியா சீனா எல்லையில் பதற்றம் நிலவ, சீன நிறுவனங்கள் மீது எதிர்ப்பு கிளம்பியது. இதன் தொடர்ச்சியாக சீனாவின் பல செயலிகள் தடை செய்யப்பட்டன. இதன் காரணமாக, சீன நிறுவனமான விவோ ஐ.பி.எல் ஸ்பான்ஸர்ஷிப்பிலிருந்து விலகுவதாக அறிவித்தது.
விவோ நிறுவனம், ஐ.பி.எல் போட்டிகளில் 2018-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரையிலான காலத்துக்கு ஒப்பந்தம் செய்துகொண்டிருந்தது. அதாவது, ஆண்டுக்கு ரூ.440 கோடி என ஒப்பந்தம் இருந்தது. ஆனால், அந்த நிறுவனம் விலகியதால், டைட்டில் ஸ்பான்ஸர் செய்யும் நிறுவனத்தைத் தேட வேண்டிய சூழல் உருவானது.
மீண்டுமொரு சீன நிறுவனம்..!
ஐ.பி.எல் போட்டியில் ஸ்பான்ஸர்ஷிப்பைப் பெற பல நிறுவனங்கள் முயன்றன. ட்ரீம் 11, பைஜூஸ் மற்றும் அன்அகாடமி உள்ளிட்ட நிறுவனங்கள் ஏலத்தில் முதல் மூன்று இடத்தில் இருந்தன. ஆனால், ரூ.222 கோடிக்கு ட்ரீம் 11 ஸ்பான்ஸர்ஷிப்பைக் கோரியதால் ஐ.பி.எல் டைட்டில் ஸ்பான்ஸர்ஷிப் அதற்கு ஒதுக்கப்பட்டது.
இதில் வேடிக்கை என்னவென்றால், விவோ என்ற சீன நிறுவனம் விலகி, ட்ரீம் 11 என்ற சீன நிறுவனம் ஸ்பான்ஸர்ஷிப்பைப் பெற்றதுதான். இந்த நிறுவனம் சீனாவை சேர்ந்த டென்சென்ட் நிறுவனத்தின் துணை நிறுவனம் ஆகும். ட்ரீம் 11 தற்காலிக ஏற்பாடா அல்லது அடுத்த ஆண்டும் தொடருமா என்பது போகப் போகத் தெரியவரும்.
ஸ்டார் வருமானம் குறையாது!
ஐ.பி.எல் டைட்டில் ஸ்பான்ஸர்ஷிப் போட்டியிலிருந்து விவோ நிறுவனம் விலகியதால், ஸ்பான்ஸர்ஷிப் கட்டணம் குறைந்தது. ஆனால், ஐ.பி.எல் போட்டியை ஒளிபரப்பும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் வருமானம் குறையாது என்றே சொல்லப்படுகிறது. கடந்த சில மாதங்களாக எந்தவிதமான சர்வதேச போட்டிகளும் (ஆசிய கோப்பை மற்றும் டி20 உலகக்கோப்பை போன்றவை முக்கியமானவை) நடக்காமல் இருப்பது, மக்களும் அதிக நேரம் வீட்டுக்குள் நேரம் செலவளிப்பது போன்ற காரணங்களால், நிறுவனங்கள் இந்தப் போட்டிகளிடையே அதிகளவில் விளம்பரம் செய்யத் தயாராக உள்ளன. இப்போதைய நிலையில், மக்களுக்கும் ஐ.பி.எல்லை விட்டால், வேறு வழியில்லை.
இந்தக் காரணங்களால் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக பார்வையாளர்கள் இருப்பார்கள் என ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கணித்திருக்கிறது. அதனால் கடந்த மார்ச் மாதம் நடந்திருந்தால் எந்த விலைக்கு விளம்பரங்கள் விற்கப்பட்டிருக்குமோ அதே விலைக்கு தற்போது விற்க முடிவெடுத்திருக்கிறது. 10 விநாடிக்கு ரூ.12 லட்சம் வரை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (தொலைகாட்சி மற்றும் டிஸ்னி ஹாட்ஸ்டார்) கேட்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் கடந்த 2019-ம் ஆண்டு ஐ.பி.எல் மூலமாக சுமார் ரூ.2,200 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியது. கோவிட் சூழலுக்கு முன் இருந்த சூழலில் சுமார் ரூ.3,300 கோடி அளவுக்கு வருமானம் ஈட்டத் திட்டமிட்டது. ஆனால் கோவிட் காரணமாக, இந்த இலக்கை எட்ட முடியாவிட்டாலும் கடந்த ஆண்டு வருமானத்தை அதிகமாகவே ஈட்டும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இதுவரை 18 ஸ்பான்ஸர்களை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் இணைத்திருக்கிறது. (ட்ரீம் 11, பூஸ்ட், மாருதி சுஸூகி, ஆம்ஃபி, ஹெச்.டி.எஃப்.சி வங்கி, ஏஸ் 23, பி அண்ட் ஜி, கெல்லாக்ஸ், ஹிமாலயா, ஆப்பிள், ஜீப், அர்பன் கம்பெனி, மாஸ்டர் கார்ட், கார்டெகோ மற்றும் சில) மேலும் 95 சதவிகித விளம்பர ஸ்லாட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டு விட்டதாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சி.இ.ஓ கௌதம் தாகர் தெரிவித்திருக்கிறார்.
தமிழில் மட்டும் என்றால், நோ..!
முன்பதிவு செய்தவர்களுக்கு நிர்ணயம் செய்யப்பட்ட கட்டணம் வசூலிக்கப்படும். ஆனால், முன்பதிவு செய்யாமல் ஐ.பி.எல் வெற்றியைப் பொறுத்து சில பிராண்டுகள் இணையக்கூடும். அவர்களுக்கு இதைவிட பிரீமியம் விலையிலே விளம்பர ஸ்லாட்டுகள் ஒதுக்கக்கூடும் என்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தெரிவித்திருக்கிறது. மேலும், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் ஐ.பி.எல் ஒளிபரப்பப்பட்டாலும் தேசிய அளவிலான பிராண்டுகளை மட்டுமே ஸ்டார் ஸ்போர்ட்ஸ் எடுக்கிறது. உதாரணமாக, தமிழ் சேனலில் மட்டும் விளம்பரம் தேவை என்றால் கொடுக்க முடியாது என்னும் சூழல் இருக்கிறது. தமிழ் மொழியில் இருப்பது வாடிக்கையாளர்களுக்கு அனுபவத்தைக் கொடுக்கவே தவிர, அந்த பிராந்தியத்தின் பிராண்டுகளை இணைப்பதற்கல்ல என்றும் அந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
அணிகளின் வருமானம் குறையும்!
விவோ வெளியேறியிருப்பதால், விளையாடும் எட்டு அணிகளுக்கு வருமான இழப்பு ஏற்படும் எனத் தெரிகிறது. விவோ அதிக தொகையைச் செலுத்தியது. தற்போது ட்ரீம் 11 இதில் கிட்டத்தட்ட பாதி தொகையைச் செலுத்துவதால், ஒவ்வோர் அணிக்கும் சுமார் ரூ.14 கோடி அளவுக்கு வருமான இழப்பு ஏற்படும் எனக் கணிக்கப்பட்டிருக்கிறது. பார்வையாளர் இருந்தால் சம்பந்தப்பட்ட அணிகளுக்கு டிக்கெட் விற்பதன் மூலம் வருமானம் கிடைக்கும்.
தற்போது பார்வையாளர்கள் இல்லாமல் போட்டிகள் நடப்பதால், ஒவ்வோர் அணிக்கும் ரூ.15 கோடி – ரூ.25 கோடி வரை இழப்பு ஏற்படக்கூடும் எனத் தெரிகிறது. மேலும், கோவிட் அச்சம் காரணமாகப் பாதுகாப்புக்கு அதிகம் செலவு செய்ய வேண்டியிருக்கிறது. அறை வாடகை முதல் பயணம் வரை கூடுதல் செலவு ஏற்படும் என அணி உரிமையாளர்கள் தெரிவிக்கிறார்கள். தற்போது அணிகளுடன் இணைந்திருக்கும் ஸ்பான்ஸர்களும் தள்ளுபடி கேட்பதாகத் தெரிகிறது. இருந்தாலும் ஒளிபரப்பு உரிமை மூலம் டீம்களுக்கு கணிசமான தொகை கிடைக்கும் என்பது மட்டும் ஆறுதலான விஷயம்.
ஆக மொத்தத்தில், ஐ.பி.எல் என்பது விளையாட்டு என்னும் நிலைமையிலிருந்து ஒரு பிராப்பர்ட்டியாக மாறிவிட்டது என்பது மட்டும் உண்மை.
ஐந்து பிராண்டுகளின் செலவு ரூ.1,100 கோடி!
இந்த ஐ.பி.எல்லில் ஐந்து பிராண்டுகள் மட்டும் சுமார் ரூ.1,100 கோடியைச் செலவு செய்ய இருக்கின்றன. டைட்டில் ஸ்பான்ஸர், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் சில டீம்களுடன் பிராண்டிங் நடவடிக்கையில் ட்ரீம் 11 ஒப்பந்தம் போட்டிருக்கிறது. இந்த நிறுவனம் மட்டும் சுமார் ரூ.500 கோடியை இந்த ஐ.பி.எல் மூலமாகச் செலவு செய்யவிருப்பதாகத் தெரிகிறது.
பைஜூஸ், அமேசான், போன்பே, வீ (வோடஃபோன் ஐடியா) ஆகிய நிறுவனங்கள் மீதமுள்ள தொகையைச் செலவு செய்யவிருப்பதாகத் தெரிகிறது. பைஜூஸ் நிறுவனம் ரூ.150 கோடி முதல் ரூ.160 கோடி வரையும், அமேசான், வீ, போன்பே நிறுவனங்கள் தலா ரூ.120 – ரூ.130 கோடி வரையும் செலவு செய்யவிருக்கின்றன.
Recent Comments