bestpolicy

எந்த ஒரு செயலாக இருந்தாலும் திட்டமிடல் மிக அவசியமான ஒன்று. திட்டமிட்ட வாழ்வு தெவிட்டாத இன்பம் தரும் என்பது மறுக்கமுடியாத உண்மை. இன்றைய வாழ்க்கைச் சூழலில் நாம் குடும்பம் நடத்தவே ஒவ்வொரு மாதமும் திட்டமிடவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

விலைவாசி, குடும்பச் சூழல், யூகிக்க முடியாத எதிர்பாராத செலவுகள் போன்றவற்றை வைத்துப் பார்த்தால், அவசரக் காலங்களில் கைகொடுக்கும் தோழனாக காப்பீட்டு பாலிசிகள் அமையும் என்பது நிதர்சனமான உண்மை. நம் ஒவ்வொருவருக்கும் காப்பீடு என்பது மிக முக்கியம். அதிலும் குடும்ப வருமானத்துக்கு முழு ஆதாரமான நபர் என்றால், காப்பீடு அதிமுக்கியமானது. ஆனால், நூற்றுக்கணக்கில் குவிந்துகிடக்கும் காப்பீட்டுத் திட்டங்களில் எது அவசியம்? எந்தக் காப்பீடு எடுப்பது சிறந்தது? எந்த பாலிசி குறைந்த கவரேஜில் அதிக லாபம் தரும்? என்பன போன்ற சந்தேக முடிச்சுகள் நம் அனைவருக்கும் எழக்கூடும். இந்த முடிச்சுகளை அவிழ்க்கும்விதமாக பல தகவல்களை இந்த நூலின் ஆசிரியர் வாசுகார்த்தி தெளிவாகவும் விளக்கமாகவும் எழுதியிருக்கிறார். ஒருவரின் மாதச் சம்பளத்தை மனதில் வைத்து அதற்கு ஏற்ப திட்டமிட்டு எப்படி காப்பீடுகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்; குடும்ப நலனுக்கு எந்த பாலிசி சிறந்தது; பாலிசிகளை எடுக்கும் வழிமுறைகள்; அவற்றுக்கான ப்ரீமியம் கட்டவேண்டிய கால அளவுகள்; கிளைம் பெறுவது; எந்த பாலிசி எப்படிப் பயன்படும்; அவற்றில் உள்ள ப்ளஸ் மைனஸ்; பாலிசிகள் முதலீடுகள் ஆகுமா? என்பது போன்ற நாம் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய நடைமுறைகளை எளிமையான நடையில், சுலபமாகப் புரிந்துகொள்ளும் வகையில், சில சம்பவங்களின் உதாரணங்களோடு எடுத்துக் கூறியிருப்பது சிறப்பு. இதுவரை காப்பீடு பாலிசிகளின் சேவைகளையும் தேவைகளையும் பற்றி ஒன்றுமே தெரியாதவர்களும்கூட, தங்களுக்கு ஏற்ற பாலிசி எது என்பதைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள இந்த நூல் நிச்சயம் வழிகாட்டும்.

Click here to buy this book