ல்ல மனிதர்களின் வாழ்க்கை படமாக எடுக்கப்பட்டு பலரும் பார்த்தது அந்தக் காலம். நல்ல மனிதர்களுடன் சில கெட்ட மனிதர்களின் வாழ்க்கையையும் படமாக்கிப் பார்ப்பது இந்தக் காலம். 1990-களில் நமது பங்குச் சந்தையைப் புரட்டிப் போட்ட ஹர்ஷத் மேத்தாவின் வாழ்க்கை வரலாறு ‘Scam 1992 – The Harshad Metha Story’ என்ற பெயரில் வெப்சீரிஸாக சோனி லைவ் தளத்தில் வெளியிடப் பட்டுள்ளது.

பிரபல பத்திரிகையாளர் சுசிதா தலா எழுதிய ‘Who Won, Who Last’ என்ற புத்தகத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது இந்த வெப்சீரிஸ். சுமார் 500 நிமிடம் ஓடும் 10 எபிசோடுகளும் ஹர்ஷத் மேத்தாவின் வாழ்க்கையைத் தத்ரூபமாக எடுத்துச் சொல்கிறது.

ஆன்ட்டி ஹீரோ ஹர்ஷத் மேத்தாவின் பயோபிக்..! - சோனியின் வெப்சீரிஸ் எப்படி?

எஸ்.பி.ஐ வங்கியில் ரூ.500 கோடியைக் காணவில்லை..!

எஸ்.பி.ஐ வங்கிக் கணக்கில் ரூ.500 கோடியைக் காணவில்லை. இதற்குக் காரணம், ஹர்ஷத் மேத்தா என எஸ்.பி.ஐ வங்கி அதிகாரி புகார் செய்வதுடன் இந்த வெப்சீரிஸ் தொடங்குகிறது.

ஹர்ஷத் மேத்தா குஜராத்தைச் சேர்ந்தவர். ஆனால், மும்பையில் வசித்து வந்தார். அவரது அப்பாவுக்கு டெக்ஸ்டைல் பிசினஸ். ஆனால், பெரிய வரும்படி இல்லை. குடும்பப் பாரத்தைச் சுமக்க பல வேலைகளைச் செய்கிறார் ஹர்ஷத். அப்போது பங்குச் சந்தை டிரேடிங்கில் கொள்ளை லாபம் கிடைப்பது அவருக்குத் தெரிய வருகிறது. அதனால் புரோக்கர் ஒருவரிடம் பங்குகளை வாங்கி விற்றுத் தரும் வேலைக்குச் சேர்கிறார். இதில் பணம் வருகிறது எனத் தெரிந்தவுடன் சகோதரர் அஸ்வினைச் சேர்த்துக்கொண்டு ஷேர் டிரேடிங் செய்யத் தொடங்குகிறார். 1982-ம் ஆண்டு சுமார் ரூ.10 லட்சம் நஷ்டம் அடைகிறார். அதனால் அவருடைய டிரேடிங் கணக்கு முடக்கப்படுகிறது.

ஆங்கிலம் மட்டுமல்லாமல், தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளிலும் இது மொழியாக்கம் செய்யப்பட்டால், பங்குச் சந்தை ஆர்வலர்கள் அனைவரும் பார்த்து ரசிப்பார்கள்!

வண்டிகளை எரிக்கவும் பெட்ரோல் தேவை!

ஆனால், அவர் சொல்லும் பங்குகளின் விலை ஏகத்துக்கும் உயர்வதால், பலரும் அவரிடம் டிப்ஸ் கேட்கிறார்கள். எனவே, பங்குச் சந்தை ஆலோசனை நிறுவனத்தைத் தொடங்குகிறார். உதாரணமாக, 1984-ம் ஆண்டு நாடு முழுக்க கலவரம் நடக்கிறது. அப்போது எண்ணெய் எரிவாயுத் துறையில் இருக்கும் பங்குகளில் முதலீடு செய்கிறார். ‘‘நாட்டில் எந்த வண்டி ஒடுகிறது என்று இதில் முதலீடு செய்கிறீர்கள்’’ என்று அவரிடம் கேட்கிறார்கள். ‘‘வண்டி ஓட மட்டுமல்ல, வண்டிகளை எரிக்கவும் பெட்ரோல் தேவை’’ எனக் கூறுகிறார் ஹர்ஷத். ஷேர் டிப்ஸ் தவிர, சில பங்குகளின் விலையைச் செயற்கையாக உயர்த்தும் வேலைகளிலும் ஈடுபடுகிறார். சிறிய நிறுவனங்களில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்னும் ஆசையை முதலீட்டாளர்களிடம் வளர்க்கிறார்.

ஆன்ட்டி ஹீரோ ஹர்ஷத் மேத்தாவின் பயோபிக்..! - சோனியின் வெப்சீரிஸ் எப்படி?

அடமானப் பணத்தை பங்குச் சந்தையில்..!

ஒரு வங்கி மற்றொரு வங்கியிடம் அரசுப் பத்திரங்களை அடமானம் வைத்து குறுகிய காலக் கடன்களைக் கொடுப்பது அப்போது வழக்கத்தில் இருந்தது. இந்த நடைமுறையில் அரசுப் பத்திரங்களை நேரடியாகக் கொடுக்காமல் பேங்க் ரெசிப்ட் (பிஆர்) என்னும் ஆவணத்தைத் தந்து பணப் பரிவர்த்தனையைச் செய்துவந்தன. காரணம், ரிசர்வ் வங்கி இதற்குத் தடை விதித்திருந்தது. என்றாலும் ஒவ்வொரு வங்கியும் இந்தப் பரிவர்த்தனையை ரகசியமாக செய்துகொண்டுதான் இருந்தன.

ஆன்ட்டி ஹீரோ ஹர்ஷத் மேத்தாவின் பயோபிக்..! - சோனியின் வெப்சீரிஸ் எப்படி?

இரு வங்கிகளுக்கு இடையே நடக்கும் இந்த பரிவர்த்தனைக்குப் பாலமாக இருப்பது புரோக் கர்கள்தான். ஒரு வங்கி கடன் கொடுக்கிறது எனில், அந்தப் பணம் புரோக்கர் கணக்குக்கு வரும். முறைகேடான அதிகாரிகளைப் பயன்படுத்திகொண்ட ஹர்ஷத், அந்தப் பணத்தை எடுத்து பங்குச் சந்தையில் முதலீடு செய்வார். பிறகு, வேறு வங்கியில் வாங்கி அந்தப் பணத்தைக் கொடுப்பார்.

ஒரு கட்டத்தில் போலியாக பேங்க் ரெசிப்ட் கொடுத்து பணத்தைப் பெற்று பங்குச் சந்தையில் முதலீடு செய்தார். பங்குச் சந்தையைச் சரிப்பதற்கு இவரது எதிரிகள் என்ன செய்தாலும் சந்தை உயர்ந்துகொண்டே இருக்கிறது. இதற்குக் காரணம், வங்கிகளில் இருக்கும் பணம் சந்தைக்கு தொடர்ந்து வந்துகொண்டிருந்தது.

இதற்கிடையே அவருடைய தனிப்பட்ட சொத்து மதிப்பு உயர்ந்துகொண்டே வர, ஆடம்பரம் அதிகரித்தது. இது பலரின் கண்ணை உறுத்த, எஸ்.பி.ஐ வங்கியில் ரூ.500 கோடியை முறைகேடாகப் பெற்று பங்குச் சந்தையில் முதலீடு செய்கிறார்.

சிக்கலுக்குமேல் சிக்கல்..!

இந்தச் சமயத்தில் வருமான வரித்துறை ரெய்டு நடக்கிறது, எஸ்.பி.ஐ முறைகேடு குறித்து வங்கித் தலைமைக்குத் தகவல் தெரிய, பணம் கேட்டு நெருக்கடி தருகிறது. இக்கட்டான இந்தச் சமயத்தில், பல அரசியல் மாற்றங்கள் நிகழ்கின்றன. சந்திரசேகர் அரசு கவிழ்கிறது; ராஜீவ்காந்தி படுகொலை நடக்கிறது; புதிய அரசு பொறுப்பேற்றவுடன், பேலன்ஸ் ஆஃப் பேமென்ட் பிரச்னை எனப் பல சிக்கல் வந்துசேர்கிறது. இவ்வளவு பிரச்னை இருந்தும் பங்குச் சந்தை தொடர்ந்து உயர்கிறது. இதை உணர்ந்துகொண்ட ஆர்.பி.ஐ, பங்குச் சந்தையில் சரிவு ஏற்படும் எனக் கணிக்கிறது.

ஹர்ஷத் மேத்தா

ஹர்ஷத் மேத்தா

இந்த நிலையில், புதிதாக உருவாக்கப்பட்ட செபி அமைப்பின் விதிமுறைகளை புரோக்கிங் நிறுவனங்கள் ஏற்க மறுத்து பங்குச் சந்தை வர்த்தகத்தை நிறுத்துகின்றன. இதனால் பங்குகளை விற்று எஸ்.பி.ஐ-க்குப் பணம் செலுத்த முடியாத நிலை ஹர்ஷத்துக்கு. தன் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி, நேஷனல் ஹவுஸிங் ஃபைனான்ஸ் மூலமாகப் பணத்தைப் பெற்று எஸ்.பி.ஐ-க்குச் செலுத்துகிறார் ஹர்ஷத்.

இந்தத் தகவல் வெளியே தெரியவர, அவரது இமேஜ் உடையத் தொடங்குகிறது. பங்குச் சந்தை வீழ்ச்சி அடைகிறது. அத்தனை பேரும் ஹர்ஷத் மேத்தாவை நோக்கி கைநீட்டுகிறார்கள். வருமான வரித்துறை, சி.பி.ஐ, அமலாக்கத்துறை என 70-க்கும் மேற்பட்ட வழக்குகள் ஹர்ஷத் மேத்தா மீது தொடுக்கப்படுகின்றன.

சிறையில் அடைக்கப்படும் ஹர்ஷத், பிறகு ஜாமீனில் வெளியே வந்தாலும், வேறொரு வழக்கில் மீண்டும் கைது செய்யப்படுகிறார். இறுதியாக 2001 டிசம்பர் 31-ல் மாரடைப்பால் மரணம் அடைகிறார்.

ஆறு மாத படப்பிடிப்பு..!

இந்தப் படத்துக்கான படப்பிடிப்பு ஆறு மாதங்களுக்கு 170 கதாபாத்திரங்களுடன் 200 லொகேஷன்களில் நடந்திருக்கிறது. ஏறக்குறைய 9 மணி நேரம் ஓடும் இந்த வெப்சீரிஸை ஹாலிவுட் படம்போல விறுவிறுப்பாக எடுத்திருக்கிறார் இந்தப் படத்தின் இயக்குநர் ஹன்ஷல் மேத்தா. இந்தப் படத்தில் நாயகன் பிரதிக் காந்தி, ஹர்ஷத் மேத்தாவை நம் கண்முன்னே கொண்டு வருகிறார். ஒரு இளைஞனுக்கு இருக்கும் கோபம், ஆர்வம், லட்சியம் போன்றவற்றை சரியாக வெளிப்படுத்தியிருக்கிறார். அதே சமயம், அதிகாரிகளுடன் உரையாடும்போது அவர்களிடம் எப்படிப் பேச வேண்டுமோ, அப்படிப் பேசி அசத்தியிருக்கிறார்.

இது முழுமையான நிதி சார்ந்த படம் என்பதால், இதில் பொழுதுபோக்கு என்ற பேச்சுக்கே இடமில்லை. தவிர, வரலாறு ஓரளவு தெரிந்தால்தான் படத்தை ரசிக்க முடியும். அந்தக் காலத்து பங்குச் சந்தை நடைமுறைகள் தற்போது இணையத்தில் பரிவர்த்தனையை மேற்கொள்ளும் தலைமுறைக்குத் தெரியாததால், சில இடங்களில் புரியாமல் முழிக்கும் வாய்ப்பும் உண்டு.

ஆங்கிலத்தில் சப்டைட்டில் இருந்தாலும் படம் முழுக்க வண்டி வண்டியாக இந்தியில் கலந்துரையாடல். ஆங்கிலம் மட்டுமல்லாமல் தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளிலும் இது மொழியாக்கம் செய்யப்பட்டால், பங்குச் சந்தை ஆர்வலர்கள் அனைவரும் பார்த்து ரசிப்பார்கள்.

சட்டத்தில் எங்கெல்லாம் ஓட்டைகள் இருக்கிறதோ, அந்த ஓட்டைகளைப் பயன் படுத்தி, சிலர் கொள்ளையடிக்க முற்படவே செய்வார்கள் என்பதே இந்த வெப்சீரிஸ் நமக்குச் சொல்லும் கருத்து!