தற்போது 50 நாட்கள் ஒரு நிறுவனத்தில் வேலை செய்ததையே கேக் வெட்டி கொண்டாடும் மனநிலையில் இருப்பவர்களுக்கு அடுத்த வரி செய்தி மிகவும் அதிர்ச்சிகரமாகவே இருக்கும்.
எல் அண்ட் டி நிறுவனத்தின் தலைவர் ஏ.எம். நாயக் கடந்த மார்ச் 15-ம் தேதியுடன் அந்த நிறுவனத்தில் 50 ஆண்டுகளைப் பூர்த்தி செய்திருக்கிறார். தற்போது 73 வயதாகும் நாயக் 1965-ம் ஆண்டு மார்ச் 15-ம் தேதி எல் அண்ட் டி நிறுவனத்தில் இணைந்தார். 2017-ம் ஆண்டு தன்னுடைய 75-வது வயதில் ஓய்வு பெற இருக்கிறார்.
எல் அண்ட் டியில் இவரின் 50 ஆண்டு காலப் பணி பற்றி சின்ன திரும்பி பார்த்தல்.
குஜராத்தின் ஒரு கிராமத்தில் பிறந்த நாயக்கின் தாத்தா, அப்பா அனைவரும் ஆசிரியர்கள். மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் முடித்தார்.
எல் அண்ட் டி நிறுவனத்தில் பணி புரிவதுதான் இவரது இலக்காக இருந் தாலும், அந்த சமயத்தில் எல் அண்ட் டி நிறுவனத்தில் ஐஐடியில் படித்தவர்களை மட்டுமே வேலைக்கு எடுத்ததால் முதலில் நெஸ்டர் நிறுவனத்தில் சேர்ந்தார்.
இவரது ஆங்கிலம் அவ்வளவு பிரமாதமாக இருக்காது என்பதால், பிறர் ஆங்கிலத்தில் பேசுவதை குஜராத்தி மொழியில் புரிந்துகொண்டு, குஜராத்தியில் அதற்கான பதிலை யோசித்து, பின் அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து பேசி தன்னுடைய ஆரம்ப காலத்தைக் கழித்திருக்கிறார்.
சில மாதங்களுக்குப் பிறகு தன்னுடைய கனவு நிறுவனமான எல் அண்ட் டிக்கு விண்ணப்பித்தார். நேர்முகத் தேர்வுக்கு பிறகு மாதம் ரூ.760 சம்பளத்துக்கு வேலை கிடைத்தது. ஆனால் உயரதிகாரியிடம் பேசும்போது அதீத தன்னம்பிக்கையில் பேசியதால் ரூ.760 என்பது ரூ. 670 ஆகக் குறைந்தது. இருந்தாலும் கனவு நிறுவனத்தை விடாமல் பிடித்துக்கொண்டார்.
பணியில் சேர்ந்தபின் முதல் 21 வருடங்களில் அவர் எந்த விடுமுறையும் எடுத்ததில்லை. வாராந்திர விடுமுறை கூட எடுக்காமல் பணிபுரிந்தார்.
1974-ல் (ஒன்பது ஆண்டுகளுக்குள்) துணை பொது மேலாளராக பதவி உயர்வு பெற்றார். ஆனால் 1968-ம் ஆண்டு எவ்வளவு தூரம் எல் அண்ட் டி-யில் பதவி உயர்வு பெற முடியும் என்று யாராது என்னிடம் கேட்டிருந்தால் பொது மேலாளர் என்றுதான் சொல்லி இருப்பேன் என்று தெரிவித்திருக்கிறார்.
1974-ம் ஆண்டு முதல் 1986-ம் ஆண்டு வரை நிறுவனத்தில் எனக்கு பெரிதாக எந்த வளர்ச்சியும் இல்லை. சமயங்களில் வெறுப்பு வரும், ஆனாலும் நிறுவனத்துக்காக என்னை அர்ப்பணித்துகொண்டேன் என்று தெரிவித்திருக்கிறார். இந்தக் காலத்தில் பல நிறுவனங்களில் இருந்து இவருக்கு வாய்ப்பு வந்திருக்கிறது.
ஆனால் எல் அண்ட் டி போல வாய்ப்பு கிடைக்காது என்பதால் எந்த ஒரு நேர்காணலுக்கும் செல்லவில்லை. அப்போது மட்டுமல்லாமல் 1999-ம் ஆண்டு தலைமைச் செயல் அதிகாரியாக பொறுப்பேற்றுகொண்ட பிறகும் கூட பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் இருந்து அழைப்பு வந்திருக்கிறது. ஆனாலும் மறுத்து விட்டார்.
தலைவராக பொறுப்பேற்ற பிறகு முதல் வேலையாக, எல் அண்ட் டியை இளைஞர்களைக் கவரும் நிறுவனமாக மாற்றினார்.
அதன் பிறகு பல கிளை நிறுவனங்களை உருவாக்கி அவற்றுக்கு தனியாக தலைவர்களை நியமித்தது, பங்குதாரர்களுக்கு ஏற்ற நிறுவனமாக மாற்றியது என கடந்த ஐம்பது வருடங்களில் இவர் செய்தது ஏராளம்.
யார் ஒருவன் ஒரு நாளில் தன்னை நான்கு முறை கொலை செய்யத் தயாராக இருக்கிறானோ, 100 வருட உழைப்பைக் கொடுக்க தயாராக இருக்கிறானோ, குடும்பத்தை மறந்துவிட்டு தன்னுடைய 60 சதவீத நேரத்தை நிறுவனத் துக்கு செலவழிக்கிறானோ அவன்தான் எனக்கு பிறகு என் இடத்துக்கு வரத் தகுதியான நபர் என்று தெரிவித்திருக்கிறார். மேலும் அப்படி ஒருவர் கிடைக்கவும் மாட்டார் என்றும் தெரிவித்திருக்கிறார்.
ஐம்பது வருடத்துக்கு வாழ்த்து தெரிவித்த பத்திரிகையாளரிடம், இத்தனை வருடங்களில் அதிக விடுமுறை எடுக்காமல் ஒரு நாளைக்கு 14 மணிநேரம் வேலை செய்திருப்பதால் நான் கொடுத்திருப்பது 100 வருட உழைப்பு என்று பதில் அளித்திருக்கிறார்.
‘வொர்க்ககாலிக்’ என்ற வார்த்தை இவருக்காக உருவாக் கப் பட்டிருக்குமோ?
தான் வாங்கும் சம்பளம் எவ்வளவு என்று இவருக்குத் தெரியாது. மாதம் ரூ.30,000 எடுப்பார், செலவு செய்வார்.
நாயக் டிரஸ்ட் மூலம் இதுவரை ரூ.100 கோடி ரூபாய் நன்கொடை அளித்திருக்கிறார்.
இந்திய அரசு இவருக்கு பத்ம பூஷண் விருது வழங்கி கவுரவித்துள்ளது.
Keywords: நாயக் 50, பத்ம பூஷண் விருது, நாயக் டிரஸ்ட், எல் அண்ட் டி
Recent Comments