நம்பிக்கை வையுங்கள்; தொடர்ந்து முதலீடு செய்யுங்கள்- அனூப் பாஸ்கர் சிறப்புப் பேட்டி

தமிழ்நாடு முதலீட்டாளர் சங்கத்தின் முதலீட்டு கருத்தரங்கு சனிக்கிழமை சென்னையில் நடந்தது. இதில் ஐ.சி.ஐ.சி.ஐ. மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் ஃபண்ட் மேனேஜர் மணீஷ் குன்வானி, பங்குச்சந்தை நிபுணர் ஜி.சொக்கலிங்கம், யுனிஃபை கேப்பிடல் நிறுவனத்தின் செயல் இயக்குநர் மாறன், பேராசிரியர் சஞ்சய் பக்‌ஷி (Management Development Institute, குர்கான்) மற்றும் யூ.டி.ஐ. மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் ஈக்விட்டி பிரிவு தலைவர் அனுப் பாஸ்கர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கிடைத்த இடைவெளியில் யூ.டி.ஐ. மியூச்சுவல் ஃபண்டின் அனூப் பாஸ்கரிடம் தற்போதைய சந்தை நிலைமை, சர்வதேச நிலவரம் உள்ளிட்ட பல விஷயங்களை பேசும் வாய்ப்பு கிடைத்து. அந்த பேட்டியிலிருந்து..

10 வருடங்களுக்கு மேலாக சென்னையில் இருந்திருக்கிறீர்கள். உங்களுக்கு தமிழில் பேச தெரியுமா?

சென்னையில் இருந்தாலும் தமிழ் கற்றுக்கொள்ளவில்லை. கற்றுக் கொண்டிருக்கலாம்தான்.

ஆரம்ப காலம் பற்றி?

டெல்லி ராம் கல்லூரியில் பி.காம் படித்தேன். அதன்பிறகு பூனேவில் இருக்கும் சிம்பயாஸிஸ் (Symbiosis) இன்ஸ்டியூட்டில் எம்.பி.ஏ.படித்தேன். கொஞ்சகாலம் நிதிசேவை வழங்கும் நிறுவனத்தில் வேலை பார்த்தேன். டெம்பிள்டன் நிறுவனத்தில் சீனியர் அனலிஸ்டாகவும், சுந்தரம் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தில் ஈக்விட்டி பிரிவின் தலைவராகவும் இருந்தேன். 2007-ம் ஆண்டு முதல் யூ.டி.ஐ. மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தில் இருக்கிறேன்.

உங்களுடைய முதலீட்டு முடிவுகள் எப்படி இருக்கும்?

Growth at reasonable Price. இதன் அடைப்படையில்தான் முதலீட்டு முடிவுகள் இருக்கும். விலை குறைவாக இருப்பது மட்டுமல்லாமல் வளர்ச்சி அடைய வாய்ப்பு இருக்கும் பங்குகளாகவும் பார்த்துதான் முதலீடு செய்வோம். 2008 மற்றும் 2011-ம் ஆண்டுகளில் இந்திய பங்குசந்தைகள் கடுமையாக சரிந்தன.

எங்களுடைய இந்த முதலீட்டு முறைதான் மற்ற ஃபண்ட்களில் இருந்து எங்களை வேறுபடுத்தி காட்டியது. நாங்கள் செய்த எச்சரிக்கையான முதலீடு முடிவுகளால் போட்டியாளர் களுடன் ஒப்பிடும் போது எங்கள் முதலீடுகள் அதிகம் பாதிக்கப் படவில்லை.

இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறையின் முன்னோடி நீங்கள். கையாளும் தொகை மதிப்பீட்டில் பார்க்கும் போது நீங்கள் ஐந்தாவது இடத்தில்தானே இருக்கிறீர்கள்?

சரிதான். யூ.டி.ஐ. மியூச்சுவல் ஃபண்டில் இருந்து யு.எஸ் 64 [Unit Scheme 1964 (US-64).] என்ற ஃபண்ட் வெளியே எடுக்கப்பட்டுவிட்டது. ஒருவேளை எடுக்காமல் இருந்திருக்கும் பட்சத்தில் யு.டி.ஐ. கையாளும் தொகை இன்னும் அதிகமாக இருந்திருக்கலாம்.

ஒவ்வொரு ஃபண்ட் நிறுவனத்துக்கும் ஒரு குறிப்பிட்ட ஃபண்ட் அதன் முகமாக இருக்கும். அதுபோல உங்களுடைய ஃபண்ட் நிறுவனத்தின் முகமாக நீங்கள் நினைப்பது என்ன? ஏன்.

UTI Opportunities, UTI Equity மற்றும் UTI Dividend Yield இந்த மூன்று ஃபண்ட்களை மக்களிடம் பிரபலபடுத்துகிறோம். ஒரு சிறு முதலீட்டாளர்களுக்கு இந்த ஃபண்ட்கள் போதுமானதாக இருக்கும்.

120 கோடி மக்கள் இருக்கும் நாட்டில் பங்குச்சந்தை அது சார்ந்த முதலீடுகளில் முதலீடு செய்யும் போக்கு ஏன் குறைவாக இருக்கிறது?

வங்கி டெபாசிட்களில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கையே 5 முதல் 10 சதவீதம்தான் இருக்கிறது. பங்குச்சந்தை, இன்ஷூரன்ஸ், மியூச்சுவல் ஃபண்ட் உள்ளிட்ட முதலீடுகளில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை 5 சதவீதத்துக்கு கீழ்தான். மீதமுள்ள அனைத்தும் ரியல் எஸ்டேட், தங்கம் உள்ளிட்டவற்றில்தான் முதலீடு செய்யப்படுகிறது.

நிதி சார்ந்த முதலீடு செய்யும் போது வரிகள் செலுத்த வேண்டி இருக்கிறது என்பதும் மக்கள் தவிர்க்க ஒரு காரணமாக இருக்கலாம்.

தங்கத்தை எடுத்துக்கொண்டால் ரூபாய் சரிவின் காரணமாகத் தான் தங்கம் ஓரளவுக்காவது வருமானம் கொடுப்பதுபோல தெரிகிறது. ஆனால் டாலர் கணக்கில் எடுத்துக்கொண்டால் கடந்த ஒரு வருடத்தில் நெகட்டிவ் வருமானமே கொடுத்து வந்திருக்கிறது. முதலீட்டாளர்களுக்கு இதை புரிய வைக்க வேண்டும்.

ஆனால், மியூச்சுவல் ஃபண்ட்களில் இருக்கும் தொகை இந்தியாவின் டாப் 25 நகரங்களில் இருந்துதானே வருகிறது?

சரிதான். மியூச்சுவல் ஃபண்ட் உள்ளிட்ட நிதிசார்ந்த சேவைகளை மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்றால், அவர்களுக்கு மியூச்சுவல் ஃபண்ட் பற்றி தெரிய வேண்டும் என்றால் சம்பந்தபட்ட உள்ளூர் மொழிகளில் இருக்கும் பட்சத்தில்தான் அவர்களுக்கு அதை புரிய வைக்க முடியும். இதை செய்யும் பட்சத்தில் நகரங்கள் மட்டுமல்லாமல் சிறு நகரங்களிலும் மியூச்சுவல் ஃபண்ட்களை கொண்டு சேர்க்க முடியும். யூ.டி.ஐ. இந்த வேலைகளை செய்துவருகிறது. இன்னும் சில மாதங்களில் இதற்கான பலன் கிடைக்கலாம்.

மியூச்சுவல் ஃபண்ட் துறையில் சமீபகாலமாக நிறுவனங்களை கையகப்படுத்துதல் நடக்கிறதே. யூ.டி.ஐ.யின் திட்டம் என்ன?

இது இயக்குநர் குழுவில் எடுக்க வேண்டிய முடிவு. இதைப்பற்றி நான் கருத்து கூற முடியாது.

சரி, இந்த கையகபடுத்துதல் இந்த துறைக்கு சாதகமானதா?

முதல் வரிசையில் இருக்கும் நிறுவனங்களுக்கு சாதகமானது, கடைசி வரிசையில் இருக்கும் நிறுவனங்களுக்கு பாதகமானது (சிரிக்கிறார்).

ஆனால் முதலீட்டாளர் பார்வையில் பார்க்கும் போது இந்த நிறுவனங்கள் இணைவது சரிதான் என்றே நினைக்கிறேன். முதலீட்டாளர்களுக்கு நிறுவனம் முக்கியமல்ல. வருமானம்தான் முக்கியம். ஆரம்ப நிலையில் இருக்கும் நிறுவனங்கள், குறைவான தொகையே கையாளும். அதனால் அவர்களால் அதிகம் செலவு செய்ய முடியாது. நல்ல அனலிஸ்ட்களை தக்க வைத்துக்கொள்ள முடியாது. நிறுவனங்கள் இணையும்போது தரமான சேவையும் வருமானமும் முதலீட்டாளர்களுக்கு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

தற்போதைய நிலைமையில் சிறுமுதலீட்டாளர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?

முதலில் பங்குச்சந்தை மீது நம்பிக்கை இழக்காதீர்கள். சந்தை ஏறும் போது முதலீடு செய்யலாம்; இறங்கும் போது விற்கலாம் என்று நினைக்காதீர்கள். சந்தையை கணிக்க முயல்வதை விட தொடர்ந்து முதலீடு செய்வதே நல்லது. தொடர்ந்து முதலீடு செய்வதன் மூலம் நீண்ட கால நோக்கில் லாபம் அடைய முடியும். அதே சமயம் ஒரே இடத்தில் அனைத்து விதமான முதலீடுகளையும் செய்ய வேண்டாம்; பிரித்து பிரித்து முதலீடு செய்யுங்கள். இந்திய சந்தையில் அன்னிய முதலீட்டாளர்களுக்கு இருக்கும் நம்பிக்கை இந்திய சிறுமுதலீட்டாளர்களுக்கு இல்லை. அன்னிய முதலீட்டாளர்கள் அடுத்த வருடம் என்ன அடுத்த ஐந்து வருடத்துக்கு பிறகு என்ன என்று இந்திய சந்தைமீது நம்பிக்கை வைத்து நீண்டகாலம் பற்றி யோசிக்கிறார்கள். ஆனால் நாம் நம்பிக்கை வைக்கவில்லை. நம்பிக்கை வையுங்கள், தொடர்ந்து முதலீடு செய்யுங்கள்.

ஒருவர் எவ்வளவு தொகையினை பங்குச்சந்தை சார்ந்த முதலீடுகளில் முதலீடு செய்யலாம்?

50 வயதுக்கு கீழே இருக்கும் ஒருவர் தன் முதலீட்டுத் தொகையில் குறைந்தபட்சம் 15 சதவீதத்தை பங்குச்சந்தை சார்ந்த முதலீடுகளில் முதலீடு செய்யலாம்.

15 சதவீதம் என்பது மிகவும் குறைவான ஒதுக்கீடுதானே?

(சிரிக்கிறார்) குறைவுதான். இதைவிட அதிகம் ரிஸ்க் எடுத்து பங்குச்சந்தை சார்ந்த முதலீடுகளில் முதலீடு செய்யலாம்தான். ஆனால் இதுவரை பங்குச்சந்தை சார்ந்த முதலீடுகளில் முதலீடு செய்யாதவர்களை உடனடியாக அதிக தொகையை முதலீடு செய்யச்சொல்வது நல்லதில்லையே.

இப்போதைக்கு முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய துறை எது?

ஆட்டோமொபைல் துறை பங்குகளை கவனிக்கலாம். இப்போதைக்கு அந்த துறை செய்திகள் மோசமாக இருந்தாலும், இதற்கு கீழே குறைய வாய்ப்பு இல்லை. பிறகு ஐ.டி. துறை பங்குகள். டெக்ஸ்டைல் உள்ளிட்ட ஏற்றுமதி துறைசார்ந்த பங்குகளை முதலீட்டாளர்கள் கவனிக்கலாம்.

ஏற்றுமதி துறை சார்ந்த பங்குகளை கவனிக்க ரூபாய் சரிவுதான் காரணமா?

ஆமாம். டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு இன்னும் கொஞ்சம் சரிவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

அமெரிக்க ஊக்கநடவடிக்கைகள் குறைப்பு பற்றி?

கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்க பங்குகள் உயர்ந்தற்கு பணப்புழக்கம்தான் காரணம். பங்குகளின் வருமானம் உயராமல் விலை மட்டுமே உயர்ந்தது. ஊக்க நடவடிக்கைகள் குறைக்கும் பட்சத்தில் விலை குறையலாம். அதே சமயத்தில் வளர்ச்சி அதிகரித்து, பங்குகளின் வருமானம் அதிகரிக்கும் பட்சத்தில் சரிவு தடுக்கப்படலாம். இதே நிலைமைதான் இந்தியாவிலும் இருக்கும்.

ஜனவரி 28-ம் தேதி நடக்கும் ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை பற்றி?

வரும் நிதிக்கொள்கை, சந்தை எந்த திசையில் செல்லும் என்பதை தீர்மானிக்கும். உதாரணத்துக்கு பணவீக்கம் குறைந்திருந்தாலும் இப்போது வட்டி விகிதத்தை குறைக்க முடியாது. இன்னும் சில காலம் தேவை என்று ரிசர்வ் வங்கி சொல்லும் பட்சத்தில், சந்தை அதை சாதகமாக புரிந்துகொள்ள வாய்ப்பு இருக்கிறது.

நன்றி ‘தி இந்து’.