ரஜினி நடிகர் மட்டுமல்ல; அவரே ஒரு ‘பிராண்ட்’

பி.சி. பாலசுப்ரமணியன்

ரஜினி என்பவர் ஒரு நடிகர் என்பதை தாண்டி, அவருடைய பஞ்ச் வசனங்களை எப்படி பிஸினஸ் மற்றும் வாழ்க்கைக்கு எப்படி பயன்படுத்த முடியும் என்பதை ‘ரஜினியின் பஞ்ச் தந்திரம்’ என்ற பெயரில் புத்தகமாக எழுதியவர் பி.சி. பாலசுப்ரமணியன். இவரது இரண்டாவது புத்தகமும் ரஜினியை பற்றியதுதான்.

ரஜினிகாந்த வழியில் எப்படி ஒரு பிராண்டை உருவாக்குவது என்பதை ‘Grand Brand Rajini’ புத்தகத்தில் எழுதி இருந்தார். மேலும், மேட்ரிக்ஸ் பிஸினஸ் சர்வீசஸ் நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். பிஸினஸ் மற்றும் எழுத்து குறித்து பல விஷயங்கள் பாலாவிடம் பேச முடிந்தது.

அந்த உரையாடலிலிருந்து…

ஒரு பிஸினஸ்மேனாக இருந்துகொண்டு எப்படி புத்தகம் எழுத வேண்டும் என்று தோன்றியது?

பொதுவாக அனைவருக்குமே எழுத வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அதனால்தான் ஐ.டி. இளைஞர்கள் பலரும் வலைதளத்தில் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். எனக்கும் எழுத வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அது ஒரு பக்கம்.

நான் படிக்கும் காலத்தில் இருந்து ரஜினி ஒரு பெரிய இன்ஸ்பிரேஷன். அவர் படத்தில் பேசுவது வெறும் வசனங்கள் மட்டுமல்ல. அதை பல வகைகளில் நிர்வாகத்துடன் இணைக்க முடியும் என்று நினைத்து ஒரு சிறிய பிரசண்டேஷன் எழுதி நண்பர்களுக்கு அனுப்பினேன். அதில் என் பெயரை கூட இணைக்கவில்லை. அது பல இடங்களில் சுற்றி நமக்கே வந்தது. அப்போதுதான் இந்த கன்டென்டில் விஷயம் இருக்கிறது என்று புரிந்துக்கொண்டேன்.

அடுத்து, தமிழ் தெரியாத நபர்கள் கூட ரஜினியின் படங்களை பார்க்கிறார்கள். அவரது செய்கைகளை ரசிக்கிறார்கள் என்பதை பார்த்தேன். அதன் பிறகுதான் இதை புத்தகமாக எழுத வேண்டும் என்று தோன்றியது. ஒரு நாளைக்கு ஒரு வசனம். 30 பஞ்ச்களை எழுதி அதை புத்தகமாக்க வேண்டும் என்று நினைத்தேன். எழுத நினைத்தவுடன் 5 பஞ்ச்கள் நினைவுக்குவந்தது. அதன் பிறகு ரஜினி நடித்த படங்களை பார்த்தேன். இதில் ரஜினியுடன் நடித்த கிட்டி (ராஜா கிருஷ்ணமூர்த்தி ) பெரும் உதவி செய்தார்.

உங்களுக்கு எளிதாக பதிப்பாளர்கள் கிடைத்தார்களா?

இல்லை. இதை எடுத்து முக்கியமான பதிப்பாளரை சந்தித்தபோது, இந்த புத்தகம் 1,000 பிரதிகள் கூட விற்காது. மேலும் ரஜினி ரசிகர்கள் இந்த புத்தகத்தை படிக்க மாட்டார்கள் என்றார். இந்த புத்தகம் ரஜினி ரசிகர்களுக்காக இல்லை என்று விளக்கியும் பலன் இல்லை. பிறகு நியூ ஹரிசான் மீடியா மூலமாக தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இந்த புத்தகத்தை வெளியிட்டோம்.

பொதுவாக சினிமா துறையினரும் பிஸினஸ் புள்ளிகளும் இரு துருவமாகத்தான் இருப்பார்கள். எப்படி சினிமாவில் இருந்து பிஸினஸ் கற்றுக்கொள்ள முடியும் என்று நினைத்தீர்கள்.?

சினிமாவும் ஒரு பிஸினஸ்தானே. மேலும், யாரிடமிருந்தும் வாழ்க்கைக்கு தேவையான பாடங்களை கற்கலாம். சினிமாதானே என்று எடுத்துக்கொள்ளத் தேவை இல்லை.

எத்தனையோ பஞ்ச் வசனங்கள் இருக்கிறது. மேலும் இது ஒன்றும் ரஜினியே யோசித்த வசனம் கிடையாது. பிறகு ஏன் ரஜினி?

பல பஞ்ச் வசனங்கள் இருந்தாலும் ரஜினி பேசும் போது அதற்கு கூடுதல் மதிப்பு வந்துவிடுகிறது. உதாரணத்துக்கு சிங்கம் சிங்கிளாதான் வரும் என்ற வசனம் ஏற்கெனவே ஒரு படத்தில் வந்திருக்கிறது. இருந்தாலும், அந்த வசனம் பெரிய கவனம் பெறவில்லை. ஆனால் ரஜினி பேசும் போது அதற்கு ஒரு மதிப்பு கூடுகிறது. மேலும், இத்தனை வசனங்களை எழுதிய எழுத்தாளர்கள் மற்றும் இயக்குநர்களுக்கு இந்த புத்தகத்தில் நன்றி கூறி இருக்கிறேன்.

இரண்டாவது புத்தகமான Grand Brand Rajini பற்றி?

ரஜினியின் வாழ்க்கை வரலாறு எழுத சொல்லி என்னிடம் கேட்டார்கள். ரஜினியின் வாழ்க்கை பலருக்கும் தெரிந்திருக்கும். மேலும், அவரது வாழ்க்கைையப் பற்றி எழுதும் போது அவர் இதற்கு நிறைய நேரம் ஒதுக்க வேண்டி இருக்கும். அவர் சம்பந்தபட்ட பலரையும் சந்திக்க வேண்டி இருக்கும். அது மிகப்பெரிய வேலையாக இருக்கும். சில மாதங்கள் கூட இதற்கு செலவாகும். என்பதால் அப்போது தவிர்த்துவிட்டேன்.

ஆப்பிள் நிறுவனத்துக்கும் ரஜினிக்கும் பல தொடர்புகள் இருக்கிறது. உதாரணத்துக்கு ஆப்பிள் நிறுவனத்தின் போன் சந்தைக்கு வரும் போது பலர் வரிசையில் நின்று வாங்குவார்கள். அதேபோலதான், ரஜினி படத்துக்கும் முதல் நாள் அன்று பெரிய கூட்டம் இருக்கும். ஆப்பிள் போன் ஸ்டைல் வேறு; ரஜினி ஸ்டைல் வேறு.

ஆப்பிள் போனை விமர்சனம் இல்லாமல் வாங்கிவிடுவாரக்ள். அதன் பிறகுதான் விமர்சனம் செய்வார்கள். அதேபோலதான் ரஜினியும். முதலில் அவர் படத்தை பார்த்துவிட்டுதான், திரைக்கதை, இசை உள்ளிட்ட விஷயங்களை விமர்சனம் செய்வார்கள்.

பிறகு ரஜினியை ஏன் ஒரே பிராண்டுடன் ஒப்பிடவேண்டும். ரஜினியின் மொத்த வாழ்க்கையும் மற்ற பிராண்டுகளுடன் ஒப்பிட்டு எழுதலாம் என்ற எண்ணம் தோன்றவே கிராண்ட் பிராண்ட் ரஜினி எழுதினேன். இதில் சில விமர்சனங்கள் கூட செய்திருக்கிறோம்.

‘டாடா லாக்’ புத்தகத்தை எழுதிய டாடா குளோபல் பெவரேஹ் சி.இ.ஓ. ஹரிஷ் பட், சில மாதங்கள் விடுப்பு எடுத்துக்கொண்டுதான் புத்தகத்தை எழுதினார். புத்தகம் எழுதுவதால் உங்களது பிஸினஸ் வாழ்க்கை பாதிக்கப்பட்டதா?

டாடா குழுமத்தை பற்றி எழுதும் போது நிறைய நபர்களை சந்திக்க வேண்டி இருக்கும். அதுமட்டுமல்லாமல் அது பெரிய புத்தகம். ஆனால் நான் எழுதியது சிறிய புத்தகம். என்னுடைய பெரும்பாலான ஞாயிற்றுக்கிழமைகளை பயன்படுத்திக்கொண்டேன். பெரிய அளவுக்கு என் வேலைகள் பாதிக்கவில்லை.

ரஜினியை விட்டு உங்கள் வாழ்க்கை பற்றி பேசுவோம்? உங்கள் ஆரம்ப கால வாழ்க்கை பற்றி?

புதுச்சேரியில் பள்ளிப்படிப்பை படித்தேன். அப்பா கல்லூரி பிரின்சிபல் என்பதால் அந்த கல்லூரியில் படிக்க வேண்டாம் என்று முடிவெடுத்தேன். அதன்பிறகு திருச்சி செயின்ட்ஜோசப் கல்லூரியில் பி.காம். படித்தேன். பின்னர் நண்பர்கள் சி.ஏ. படித்ததால் நானும் அப்படிப்பை முடித்தேன்.

வேலை செய்ய பிடிக்காமல் சொந்தமாக நானும் என் நண்பர்களும் சேர்ந்து ஒரு ஆடிட் நிறுவனத்தை ஆரம்பித்தோம். சில காலத்துக்கு பிறகு இந்த வழக்கமான வேலை வேண்டாம் என்று தோன்றியது. மேலும், என்னதான் சிறப்பாக செய்தாலும் பெரிய நிறுவனங்களை வாடிக்கையாளர்களாக பிடிக்க முடியாது. அவர்கள் எங்களை விட பெரிய நிறுவனங்களையே விரும்புவார்கள்.

இதனால் யாரும் பயணிக்க விரும்பாத பாதையை தேர்ந்தெடுத்தோம்.

என்ன பாதை?

எஃப்.எம்.சி.ஜி. நிறுவனங்களில் பல கட்டங்களை தாண்டிதான் பொருட்கள் கடைகளுக்கு வருகிறது. இந்த ஒவ்வொரு இடங்களிலும் ஆடிட் தேவைப்படும். பொருட்கள் சரியாக இருக்கிறதா?, எங்கே பொருட்கள் தங்குகிறது என்பது உள்ளிட்ட பல ஆடிட்கள் தேவைப்படும். இது அரசாங்கத்தின் கட்டாயம் கிடையாது. நிறுவனங்கள் முடிவெடுப்பதற்கு வசதியாக ஆடிட் செய்வார்கள்.

அந்த வேலையை செய்ய ஆரம்பித்தோம். படிப்படியாக தென் இந்தியா முழுவதும் எங்களது கிளைகளை விரிவாக்கினோம். கிளைகள் என்றால், ஆங்காங்கே இருக்கும் ஆடிட்டர்களை எங்களது நிறுவனத்தில் பகுதி நேரமாக இணைத்தோம்.

ஆடிட் நிறுவனத்தை எப்போது மேட்ரிக்ஸ் என்ற பெயரில் மாற்றினீர்கள்?

ஆடிட் நிறுவனத்தை நடத்தி வரும் போது, mavis என்னும் நிறுவனம் பணியாளர்களின் பின்னணியை சோதனை செய்யும் வேலையை செய்துவந்தது. அதாவது பணியாளர்களின் பணி, படிப்பு அவர் மீது ஏதாவது வழக்கு இருக்கிறதா என்பதை சோதனை செய்து நிறுவனங்களுக்கு கொடுக்கும் வேலையை செய்தார்கள். எங்களுக்கு இந்தியா முழுக்க நெட்வொர்க் இருந்தது. அதனால் அந்த நிறுவனத்துக்கான சில வேலைகளை நாங்கள் செய்துவந்தோம். நாங்கள் ஒரு வகையாக சோதனை செய்து வந்தோம். அவர்களும் ஒரு வகையான சோதனை செய்துவந்தார்கள்.

இந்த இரண்டு நிறுவனங்களையும் இணைத்தால் இன்னும் வளரலாம் என்று நினைத்து இந்த நிறுவனங்களை இணைத்து மேட்ரிக்ஸ் என்னும் நிறுவனமாக மாற்றினோம்.

பணியாளர்களை சோதனை செய்வது எளிதாக இருக்கிறதா? எப்படி சோதனை செய்கிறீர்கள்?

எங்களுக்கு தென் இந்தியா முழுமைக்கும் நபர்கள் இருப்பதால் ஒரே சமயத்தில் இந்த வேலையை செய்வோம். இருந்தாலும் கொஞ்சம் சிரமம்தான். கல்வி நிறுவனங்கள் எங்களுக்கு அந்த தகவலை கொடுக்க வேண்டிய கட்டாயம் கிடையாது. ஆனால் இப்போது சில கல்வி நிறுவனங்கள் இதற்கு கட்டணம் வாங்குகிறார்கள்.

பொதுவாக எத்தனை சதவீதம் பேர் தவறான தகவல்/பின்னணி உடையவர்களாக இருக்கிறார்கள்?

முறையாக படிப்பு முடிக்காதவர்கள், வேலைசெய்யாமல் போலி சான்றிதழ், போலியான வங்கி ஸ்டேட்மெண்ட் வைத்திருப்பர்கள் என்று நெகட்டிவ் பணியாளர்கள் 2 சதவீதம் பேர், முற்றிலும் வேலை செய்வதற்கு தகுதி இல்லாதவர்களாக இருப்பார்கள். ஆனால் சிறிய குற்றச்சாட்டு உடையவர்களும் கொஞ்சம் பேர் இருப்பார்கள். அவர்கள் வேலை செய்வதில் பிரச்சினை இருக்காது. அதாவது 10 மாதம் ஒரு நிறுவனத்தில் வேலை செய்திருப்பார், ஆனால் 12 மாதம் என்று போட்டிருப்பார்கள். சமயங்களில் சிறிய நிறுவனங்களில் வேலை செய்ததை மறைப்பார்கள்.

போலியான பணியாளர்கள் போல போலி நிறுவனங்கள் கூட இருக்கிறது. அதாவது ஒரு கம்பெனி பெயரை வைத்து பணம் வாங்கிக்கொண்டு போலி சான்றிதழ் கூட கொடுப்பார்கள். இது போல ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இருக்கின்றது.

எப்படி இந்த போலிகளை கண்டுபிடிக்கிறீர்கள்?

அனுபவத்தால் எளிதாக கண்டுபிடிக்க முடியும். அவர்களது வெப்சைடில் இருக்கும் ஆங்கிலம் மற்றும் கன்டென்ட் மற்ற நிறுவனங்களில் இருந்து எடுத்திருப்பார்கள். வங்கி ஸ்டேட்மெண்டில் ஒரு பெரிய தொகை உள்ளே வந்திருக்கும். அடுத்த நாள் வெளியே போயிருக்கும். அதாவது சிறிய சிறிய செலவுகள் இருக்காது. மேலும் வங்கி கட்டணங்கள்/ காலாண்டு வட்டி போன்ற ஏதும் இல்லாமல் சாதாரணமாக இருக்கும்.

அடிப்படையில் ஒரு கேள்வி. இந்த சோதனை அவசியமா?

பி.பி.ஓ.வில் நீங்கள் வெளிநாட்டில் இருக்கும் வாடிக்கையாளர்களோடு பேச வேண்டி இருக்கும். உங்களுக்கு போதை பழக்கம் இருந்தால் வாடிக்கையாளர்களுடன் தவறாக பேச வாய்ப்பு இருக்கிறது. மேலும் உங்கள் படிப்பு சம்பந்தபட்ட விஷயத்திலே தவறு செய்ய நீங்கள் துணியும் பட்சத்தில் ஒரு நிறுவனத்தில் நிறைய டேட்டா இருக்கும்.

அதை எப்படி பாதுகாப்பாக உங்களிடம் ஒப்படைக்க முடியும். மேலும் இந்த சோதனையில் கிரைம் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பவர்களைத்தான் நிறுவனங்கள் வடிகட்டுகிறார்களே தவிர சிறு சிறு தவறுகளில் ஈடுபட்டவர்களை அல்ல.

உங்கள் நிறுவனத்தில் வேலை செய்பவர்களின் வெளியேறும் விகிதம் அதிகமாக இருக்குமே?

வெளியேறும் விகிதம் கணிசமாக இருக்கும். இதை எதுவும் செய்ய முடியாது. இருந்தாலும் இது நல்லதுதான். ஒருவர் எவ்வளவு வேகமாக வேலை செய்தாலும், குறிப்பிட்ட அளவுக்கு மேல் செய்ய முடியாது. ஒருவர் திறமையானவராக இருந்தால் அடுத்த நிலைகளில் செல்ல முடியும். ஆனால் ஒரே வேலையை தொடர்ந்து செய்யும் போது அது பணியாளர்களுக்குநல்லது கிடையாது. எங்களுக்கும் நல்லது கிடையாது.

நன்றி ‘தி இந்து