யோசிப்பதற்காக 50 சதவீத நேரத்தை செலவிடுகிறேன்

கடந்த வருடம் செப்டம்பரில் ரிசர்வ் வங்கி 10 சிறிய வங்கிகளுக்கு கொள்கை அளவிலான அனுமதி வழங்கியது. இதில் சென்னையைச் சேர்ந்த எக்விடாஸ் நிறுவனமும் ஒன்று. மைக்ரோபைனான்ஸ் துறையில் செயல்பட்டு வரும் இந்த நிறுவனத்தின் ஐபிஓவுக்கு முதலீட்டாளர்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்தது. ரிசர்வ் வங்கியின் இறுதி அனுமதி கிடைத்த நாளில் இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பி.என். வாசுதேவனை சென்னையில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து உரையாடியதில் இருந்து…

ஏசிஎஸ் முடித்தவர் மேனேஜ்மென்ட் டிரெய்னியாக சோழமண்டலம் பைனான் ஸில் 20 வருடங்கள் பணியாற்றிவர். ஒரு வருட காலம் மும்பையில் உள்ள டிசிபி வங்கியில் பணியாற்றியவர் 2007-ம் ஆண்டு எக்விடாஸ் மைக்ரோபைனான்ஸ் நிறுவனத்தை தொடங்கினார்.

20 வருட கார்ப்பரேட் வாழ்க்கை எப்போது போதும் என முடிவு செய்தீர்கள்?

செய்யும் வேலையில் பெரிதாக யோசித்தாலும் தொழில்முனைவை பற்றி நான் யோசித்ததே இல்லை. கூடவே கொஞ்சம் அதிர்ஷ்டமும் இருந்தது. மேனேஜ்மென்ட் டிரெயினியாக சேர்ந்தேன். ஒரு வருடம் முடித்தவுடன் அசிஸ்டெண்ட் செகரெட்டரி வெளியேறினார். அதனால் நான் அங்கு சேர்ந்தேன். இறுதி தேர்வு முடித்தவுடன் கம்பெனி செகரெட்டரி வெளியேறினார். அந்த பொறுப்பு எனக்கு வந்தது. அதன் பிறகு வாகனங்களுக்கு கடன் கொடுக்கும் தொழிலைத் தொடங்கினோம். அதனை நான் பார்த்துக்கொண்டேன். 2005-ம் ஆண்டு வரை அங்கு இருந்தேன்.

அதன் பிறகு சிங்கப்பூரை சேர்ந்த டிபிஎஸ் வங்கி சோழமண்டத்தில் பங்குகளை வாங்கியது. அதனால் அவர்கள் தரப்பிலிருந்து தலைமைச் செயல் அதிகாரி இருக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதனால் அங்கி ருந்து வெளியேறினேன். ஒரு வேளை இந்தச் சம்பவம் நடக்காமல் இருந்திருந் தால் சோழமண்டத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றிருப்பேன். அதன் பிறகு டிசிபி வங்கியில் சேர்ந்தேன்.

டிசிபி வங்கியில் இருக்கும் போதுதான் தொழில்முனைவு குறித்த திட்டம் இயற்றினீர்களா?

இல்லை. அது மிகவும் நல்ல வேலை. வங்கித்துறை சார்ந்த பல விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். தவிர மும்பை வாழ்க்கை எனக்கு புதிதாக இருந்தது. ஆனால் மும்பையில் உள்ள காற்று மாசு எனது குழந்தைக்கு உபாதைகளைத் தந்தது. அதனால் வேலையை விட முடிவு செய்து சென்னைக்கு வந்தேன். சென்னைக்கும் வந்து வேலை குறித்த யோசனையில்தான் இருந்தேன்.

எக்விடாஸ் எப்படி உருவானது?

சென்னையில் எந்த வங்கிக்கும் தலைமை அலுவலகம் கிடையாது என்பதால் வங்கித்துறை குறித்து யோசிக்கவில்லை. மைக்ரோபைனான்ஸ் வளர்ந்து வரும் துறை என்பதால் ஏதாவது ஒரு மைக்ரோபைனான்ஸ் துறையில் வேலை செய்வது குறித்து யோசித்தேன். தொழிலுக்கு முதலீடு கிடையாது. அடுத்து தொழில் குறித்த எண்ணமும் இல்லை என்பதால் மைக்ரோபைனான்ஸ் துறையில் வேலை செய்வதை மட்டுமே யோசித்துவந்தேன். இத்தனைக்கும் மைக்ரோபைனான்ஸ் குறித்து தொழில்நுட்ப ரீதியில் பெரிதாக எதுவும் தெரியாது.

இது குறித்து அறிந்துகொள்ள ஐஎப்எம்ஆர் (Institute for Financial Management and Research) சென்று, என்னை பற்றி சொல்லி, மைக்ரோ பைனான்ஸ் துறையில் இருக்கும் வேலை வாய்ப்புகள் குறித்து கேட்டேன். என்னுடைய பணி அனுபவத்தைப் பார்த்து ஐஎப்எம்ஆர் அதிகாரி ஒருவர் நீங்களே ஏன் மைக்ரோபைனான்ஸ் நிறுவனம் தொடங்கக்கூடாது என்று கேட்டார். என்னால் முடியாது என்று நான் கூற, மைக்ரோபைனான்ஸ் நிறுவனம் தொடங்குவது எளிது, நாங்கள் உதவி செய்கிறோம். உங்களுக்கு ஆலோசனை கூற ஏஜென்ஸிகள் இருக்கின்றன என்றார்.

மைக்ரோபைனான்ஸ் என்ன என்றே தெரியாமல் எப்படி தொடங்கினீர்கள்?

ஐஎப்எம்ஆர் நிர்வாகிகளே பல மைக்ரோபைனான்ஸ் தொடர்புகளை உருவாக்கிக் கொடுத்தார்கள். அவர்கள் மூலம் இரண்டு மாதம் இந்தியா முழுவதும் பயணித்து மக்கள், நிர்வாகிகள் என 1,000க்கும் மேற்பட்டவர்களை சந்தித்திருப்பேன். மைக்ரோபைனான்ஸ் தொடர்புடைய அனைவரையும் சந்தித்தேன்.

ஏற்கெனவே உள்ள நிறுவனங்கள் உங்களை அவர்களுக்குப் போட்டியாகக் கருதவில்லையா?

இல்லை. அனைவரும் எனக்கு மிகவும் உதவியாக இருந்தார்கள். மைக்ரோ பைனான்ஸ் துறையில் உள்ள சிக்கல் கள், சவால்கள் என பல விஷயங்களை ஏற்கெனவே இருக்கும் மைக்ரோபை னான்ஸ் நிறுவனங்களின் அதிகாரிகள் தான் சொல்லிக்கொடுத்தனர். அவர்கள் மூலமாக வாடிக்கையாளர்களின் மனநிலை புரிந்தது. இது முற்றிலும் வேறுமாதிரியான துறை. அதனால் இந்த துறையில் நிறுவனம் தொடங்கலாம் என்று முடிவு செய்திருந்தோம்.

பல நிறுவனங்களை ஆராய்ச்சி செய்ததில் அவர்கள் கொடுக்கும் வட்டி 35 சதவீதம் 40 வரை இருந்தது. அதற்குக் காரணம் அவர்களின் செலவுகள் 20 சதவீதமாக இருந்தது. தொழில்நுட்பம் மற்றும் புதுமைகளை பயன்படுத்தும்போது இதனை 7.5 சதவீதம் வரை குறைக்க முடியும் என்று திட்டமிட்டோம். 25.5 சதவீதத்தில் எங்களால் கடன் கொடுக்க முடியும் என்று முடிவெடுத்து அந்த வட்டி விகிதத்தில் முதல் கடனை வழங்கினோம்.

உங்களிடம் பணமே இல்லை என்று கூறினீர்கள். எப்படி நிறுவனத்தை தொடங்க முடிந்தது?

அப்போது தொடங்கப்பட்ட மைக்ரோபைனான்ஸ் நிறுவனங்களின் அதிகபட்ச முதலீடு 3 கோடி ரூபாய்தான். ஆனால் 10 கோடி ரூபாய் நிதி திரட்ட முடிந்தால் நிறுவனத்தை தொடங்குவோம் இல்லையென்றால் விட்டுவிடுவோம் என்று நினைத்து நிதி திரட்டும் வேலைகளில் இறங்கினேன். சோழமண்டலம் நிறுவனத்தின் ஆனந்தனை பார்த்து என்னுடைய திட்டத்தை கூறி முதலீடு செய்ய முடியுமா என்று கேட்டேன். அவர் முதலீடு செய்கிறேன்; உன்னுடைய முதலீடு எவ்வளவு என்று கேட்டார். என்னிடம் ஏதும் இல்லை, நிதி திரட்டிதான் நிறுவனம் தொடங்க வேண்டும் என்று சொன்னேன். அவர் அது சரியானது இல்லை. நான் முதலீடு செய்ய மாட்டேன், ஆனால் மற்றவர்கள் முதலீடு செய்ய வேண்டும் என்பது சரியானது அல்ல. உன்னுடைய முதலீட்டுக்கு ஏற்ற அளவு நானும் முதலீடு செய்கிறேன் என்றார். என்னுடைய வீட்டை அடமானம் வைத்து ரூ.2 கோடி திரட்டினேன். அவரும் இரண்டு கோடி முதலீடு செய்தார். என்னுடைய சில நண்பர்கள் முதலீடு செய்ய நிறுவனத்தைத் தொடங்கினோம்.

ஒரு நிறுவனத்தின் புரமோட்டர் முதலீடு முக்கியம். ஆனால் உங்களிடம் இப்போது 2.5 சதவீத பங்குகள் மட்டும் தானே உள்ளது?

நிறுவனம் தொடங்கும் போதே 20 சதவீத பங்குகள் மட்டுமே இருந்தது. அதன் பிறகு நிதி திரட்டும்போது என்னுடைய பங்குகள் குறைந்துகொண்டே வந்தது. தவிர ஒரு குறிப்பிட்ட நபர் சார்ந்த நிறுவனமான உரு வாக்க நினைக்கவில்லை. நிறுவனம் தொடங்கும்போதே வழிமுறைகள் உரு வாக்கினோம். அதன்படி நிறுவனம் செயல் பட்டு வருகிறது. எங்களது ஐபிஓ விளம்ப ரங்களில் கூட புரபெஷனல்களால் நடத்தப் படும் நிறுவனம் என்றுதான் கொடுத்தோம்.

சிறிய வங்கி எப்போது தொடங்கப்படும்?

எங்களுடைய துணை நிறுவனங்களை இணைக்கும் பணி முடிந்துவிட்டது. ரிசர்வ் வங்கியின் இறுதி ஒப்புதலும் கிடைத்துவிட்டது. செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் சிறிய வங்கி செயல்படத்தொடங்கும்.

ஒரு நாளில் பாதி நேரம் மட்டுமே வேலை செய்வேன் என்று ஒரு பேட்டியில் கூறியிருந்தீர்கள். ஏன்?

கற்பனையாலும் புதுமையாலுமே நிறுவனத்தை உருவாக்க/வளர்க்க முடியும். எப்போதுமே பிஸியாக இருக் கும் ஒருவரால் அடுத்த கட்டத்துக்கு செல்லவே முடியாது. வேலையிலேயே கரைந்துவிடுவார். இன்று என்ன செய்ய லாம் என்று யோசித்தால் மட்டுமே புதிய ஐடியா கிடைக்கும். எந்த இலக்கையும் நீங்கள் அடைவதற்கான சாத்தியங்கள் இன்று உள்ளது. ஆனால் யோசனையை நீங்கள்தான் செய்ய வேண்டும். நான் 50 சதவீத நேரத்தை யோசிப்பதற்காக செலவிடுகிறேன் என்றால் என்னுடைய பணியாளர்கள் 25 சதவீத நேரத்தை யோசிக்க செலவிடச் சொல்கிறேன்.