பொதுத்துறை வங்கிகளில் முறைகேடு அதிகரித்துவருகிறது, இதனைத் தடுக்க பொதுத்துறை வங்கிகளில் அரசின் பங்கினைக் குறைக்க வேண்டும், பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்க வேண்டும், பொதுத்துறை வங்கிகளை இணைக்க வேண்டும் என்னும் ஆலோசனைக் குரல்கள் எழுந்திருக்கும் சூழலில் நாட்டின் முக்கிய தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கி சிக்கலில் மாட்டியிருக்கிறது.

ஐசிஐசிஐ வங்கியின் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் சாந்தா கொச்சாரின் கணவர் தீபக் கொச்சார் நடத்தி வரும் நிறுவனத்தில் வீடியோகான் நிறுவனர் வேணுகோபால் தூத் மறைமுகமாக முதலீடு செய்திருக்கிறார். இதற்கு பிரதிபலனாக வீடியோகான் நிறுவனத்துக்கு ஐசிஐசிஐ வங்கி ரூ.3,250 கோடி கடன் வழங்கியிருக்கிறது. குடும்ப நிறுவனத்துக்கு சாதகமாக தனது அதிகாரத்தை பயன்படுத்தி வீடியோகான் நிறுவனத்துக்கு சாந்தா கொச்சார் கடன் வழங்கியிருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. 2012-ம் ஆண்டு இந்த கடன் வழங்கப்பட்டது. ஆறு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இந்த விவகாரம் பெரிதாக வெடித்திருக்கிறது.

ஐசிஐசிஐ வங்கி மற்றும் வீடியோகான் நிறுவன பங்குகளை வைத்திருக்கும் முதலீட்டாளரான அர்விந்த் குப்தா இரு ஆண்டுகளுக்கு (மார்ச் 15, 2016) முன்பு இந்த விவகாரம் குறித்து பிரதமர், ரிசர்வ் வங்கி கவர்னர், `செபி’ தலைவர் உள்ளிட்ட பல நிதி சார்ந்த அமைப்புகளுக்கு கடிதம் எழுதி இருக்கிறார். ஆனால் அப்போது இந்தக் கடிதம் குறித்து பொதுவெளியில் யாரும் கருத்து தெரிவிக்கவில்லை. தற்போது விவாதிக்க காரணம், வீடியோகான் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட கடன், கடந்த 2017-ம் ஆண்டு முதல் வாராக்கடனாகி விட்டது. இந்த கணக்கில் இருந்து ரூ.2,810 கோடி ஐசிஐசிஐ வங்கிக்கு வர வேண்டும். ஒரு வேளை வீடியோகான் கணக்கு வாராக்கடனாகா விட்டால் இந்த விவகாரம் இப்போது பொதுவெளிக்கு வந்திருப்பதற்கான வாய்ப்பு மிகக் குறைவு.

தினமும் சர்ச்சைகள் உருவாவதால், ஃபிக்கி அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள இருந்த சாந்தா கொச்சார், கடைசி நேரத்தில் தனது பங்கேற்பை ரத்து செய்திருக்கிறார். இந்த விவகாரம் குறித்து அடுத்தடுத்து என்ன நடந்தது என தெரிந்துகொள்வதற்கு முன்பு குற்றச்சாட்டு குறித்து பார்ப்போம். கொஞ்சம் சிக்கலான பரிவர்த்தனையை முடிந்தவரை எளிமைப்படுத்தி இருக்கிறோம்.

குற்றச்சாட்டு என்ன?

வீடியோகான் நிறுவனத் தலைவர் வேணுகோபால் தூத் 2008-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சாந்தா கொச்சாரின் கணவர் தீபக் கொச்சாருடன் கூட்டு சேர்ந்து நுபவர் எனும் நிறுவனத்தைத் தொடங்கினார். இருவருக்கும் சம பங்குகள் (50:50) இருக்கும் வகையில் ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால் 2009-ம் ஆண்டு ஜனவரி மாதம் தன் வசம் உள்ள 50 சதவீத பங்குகளை ரூ. 2.5 லட்சத்துக்கு தீபக் கொச்சாருக்கு வழங்கி விடுகிறார் வேணு கோபால் தூத்.

இதனிடையே 2010-ம் ஆண்டு மார்ச் மாதம் 64 கோடி ரூபாயை சுப்ரீம் எனர்ஜி நிறுவனத்திடமிருந்து கடனாக வாங்குகிறது நுபவர் நிறுவனம். இந்த சுப்ரீம் எனர்ஜி நிறுவனத்தில் 99.9 சதவீத பங்குகள் வேணுகோபால் தூத் வசம் உள்ளது. சில பல பரிவர்த்தனைக்குப் பிறகு நுபவர் நிறுவனத்தின் 94.99 சதவீத பங்குகள் சுப்ரீம் எனர்ஜி வசம் வருகிறது. 4.99 சதவீத பங்குகள் தீபக் கொச்சார் வசமே இருக்கிறது.

அடுத்தகட்டமாக சுப்ரீம் எனர்ஜியில் தனக்குள்ள பங்குகளை தன் நிறுவன பணியாளர் மகேஷ் குமார் புங்கிலியா என்பவருக்கு மாற்றித் தருகிறார் வேணுகோபால் தூத். அவ்விதம் பெற்ற பங்குகளை பினகிள் டிரஸ்ட் எனும் நிறுவனத்துக்கு மாற்றித் தருகிறார் புங்கிலியா. அதற்காக அவர் பெற்ற தொகை வெறும் ரூ. 9 லட்சம் மட்டுமே. இந்த பினகிள் டிரஸ்டின் அறங்காவலர்தான் தீபக் கொச்சார்.

புரியும்படி சொல்ல வேண்டுமென்றால் சுப்ரீம் எனர்ஜி வழங்கிய ரூ 64 கோடி கடன் பல மாற்றங்களுக்குப் பிறகு தீபக் கொச்சாரின் பினகிள் டிரஸ்டுக்கு மாற்றப்பட்டிருக்கிறது. ரூ. 64 கோடி மதிப்புள்ள பங்குகள் ரூ. 9 லட்சத்துக்கு அளிக்கப்பட்டிருக்கின்றன.

இதற்கிடையே எஸ்பிஐ வங்கி தலைமையிலான 20 வங்கிகள், வீடியோகான் நிறுவனத்துக்கு ரூ.40,000 கோடியை கடனாக வழங்குகிறது. இதில் ஐசிஐசிஐ வங்கி ரூ.3,250 கோடி கடனாக வழங்கி இருக்கிறது. சுமார் ரூ.64 கோடிக்கு பிரதிபலனாகத்தான் இந்த கடன் வழங்கப்பட்டிருக்கிறது என்பதுதான் இப்போதைய சர்ச்சை.

தவிர கணவருக்கும், வீடியோகான் நிறுவனருக்கும் பரிவர்த்தனை இருக்கும் போது, வீடியோகானுக்கு கடன் வழங்க முடிவெடுக்கும் குழுவில் சாந்தா கொச்சாரும் இருந்திருக்கிறார். வங்கி தலைவர்களின் சொந்தங்கள் தொழிலில் ஈடுபடக் கூடாது என்றோ, வங்கிகளில் கடன் வாங்கக் கூடாது என்றோ விதிமுறை கிடையாது. ஆனால் கடன் வழங்கும் குழுவில் இருக்கும் பட்சத்தில் முடிவுகளில் தாக்கம் ஏற்படுத்தும் வாய்ப்பு இருப்பதால் அந்த குழுவில் இருந்து விலகி இருப்பார்கள். ஆனால் சாந்தா கொச்சார் இந்த குழுவில் இருந்தது சலசலப்பை உருவாக்கி இருக்கிறது.

ஐசிஐசிஐ வங்கி கூறுவது என்ன?

ஆரம்பத்தில் அமைதி காத்த ஐசிஐசிஐ வங்கி, பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்த பிறகு கருத்து தெரிவித்தது. வங்கி அறிக்கை வெளியிட்டதற்கு பிறகும் ஐசிஐசிஐ பங்குகள் சரிவடைந்தன. அதனால் வங்கியின் தலைவர் எம்.கே சர்மா ஊடகங்களை சந்தித்தார். ஆனால் ஏற்கெனவே தயார் செய்த அறிக்கையை மட்டுமே படித்தார். ஊடகங்களின் எந்த கேள்விகளுக்கும் அவர் பதில் அளிக்கவில்லை. நுபவர் நிறுவனத்தில் வீடியோகான் முதலீடு எதுவும் செய்யவில்லை. அதனால் வீடியோகானுக்கு கடன் வழங்கும் விஷயத்தில் சாந்தா கொச்சார் விலகி இருக்கத் தேவையில்லை. நிர்வாக இயக்குநர் மீது இயக்குநர் குழுவுக்கு நம்பிக்கை இருக்கிறது. தவிர ஐசிஐசிஐ வங்கி மட்டும் கடன் வழங்கவில்லை. 20 வங்கிகள் மொத்தமாக வழங்கி இருப்பதால் இதில் சந்தேகிக்க எதுவும் இல்லை என சர்மா தெரிவித்தார்.

பாதிப்புகள் என்ன?

ஒரு சர்ச்சை எழும்போது சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பங்குகள் சரிவது என்பது வழக்கமானதுதான். ஆனால் அதையும் தாண்டி இந்த சர்ச்சை அடுத்தகட்ட சேதாரங்களுக்கு பிள்ளையார் சுழி போட்டிருக்கிறது. கடந்த வாரத்தில் ஐசிஐசிஐ செக்யுரிடீஸ் பங்கு பட்டியலிடப்பட்டது. இந்த சர்ச்சைகள் காரணமாக பங்குகள் சரிந்து முடிந்தன. தவிர ஒரு பிரச்சினையில் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யும் முன்பு முதல்கட்ட விசாரணை செய்யப்படும். இந்த பிரச்சினையில் தீபக் கொச்சார் உள்ளிட்டோர் மீது முதல் கட்ட விசாரணையை சிபிஐ தொடங்கி இருக்கிறது. தவிர ராஜீவ் கொச்சார் (தீபக் கொச்சாரின் சகோதரர்) வெளிநாட்டு வாழ் இந்தியர். சிங்கப்பூரில் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். வெளிநாடு செல்ல மும்பை விமான நிலையம் சென்ற போது சிபிஐ அவரை மடக்கி வெளிநாடு செல்லக் கூடாது என தெரிவித்திருக்கிறது. வரும் வாரங்களில் இந்த சர்ச்சையில் மேலும் திருப்பங்கள் ஏற்படலாம்.

இதற்கிடையே 5-ம் தேதி ரிசர்வ் வங்கியின் கொள்கை முடிவுகள் வெளியாகின. ஐசிஐசிஐ வங்கி குறித்து உர்ஜித் படேலும் பேசவில்லை, பத்திரிகையாளர்களும் கேள்வி கேட்காதது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

சீசரின் மனைவி சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும் என மும்பையை சேர்ந்த நிதி ஆலோசகர் கௌரவ் பரீக் தன்னுடையை கட்டுரையை தொடங்கி இருக்கிறார் என்பதை கூறி இந்த கட்டுரையை நிறைவு செய்வோம்.