சில நாட்களுக்கு முன்பு டை (The indus Entrepreneur) அமைப்பு சார்பாக தொழில்முனைவோர்களுக்கு விருது வழங்கப்பட்டது. சிறந்த ஸ்டார்ட் அப், வேகமாக விரிவடைந்த நிறுவனம், நீடித்து நிலைக்கும் நிறுவனம் என மூன்று பிரிவுகளில் விருது வழங்கப்பட்டது. இதில் சிறந்த ஸ்டார்ட்அப்களுக்கான விருதினை ஃபிளின்டோபாக்ஸ் (flintobox) நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. 2வயது முதல் 12 வயது வரையிலான குழந்தைகளின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டினை வளர்க்கும் பிரிவில் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தொழில்நுட்ப பிரிவில் இல்லாத ஸ்டார்ட்அப் நிறுவனம் என்பதால், நிறுவனத்தின் நிறுவனர்களை சந்திக்க திட்டமிட்டோம்.
ஃபிளின்டோபாக்ஸ் தொடங்குவதற்கு முன்பாக டாக்ஸியை பகிர்ந்து கொள்வது (car pooling) குறித்து தொழில் தொடங்கினோம். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இதனைத் தொடங்கி, சுமார் 5 மாதங்கள் புதிய நிறுவனத்துக்காக வேலை செய்தோம். ஆனால் பெரிதாக எந்த முன்னேற்றமும் இல்லை. முன்கூட்டியே இந்த பிரிவில் இறங்கி விட்டோம் என்பதை உணர்ந்தோம். புதிய அலுவலகம் எடுத்திருந்தாலும் நாங்களே எங்களது வேலைகளை செய்தோம். அப்போது விஜய்பாபு மகனை பார்த்துக்கொள்ளும் வேலையும் சேர்ந்தே இருந்தது. மூன்று வயது குழந்தையை சுமார் 5 மாதங்கள் நாங்கள் கண்காணித்தோம். அவனைக் கையாளுவதில் இருக்கும் சிக்கல், பிடித்தது, பிடிக்காதது, ஆச்சர்யம் என அவனின் தேவைகளை அறிந்துகொண்டோம்.
அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்த போது குழந்தைகளுக்கு தேவையானதை, அவர்களின் திறனை வளர்ப்பது என்னும் பிரிவில் இறங்கலாமா என யோசித்தோம். ஆனால் என்ன செய்யப்போகிறோம் என்பதில் ஆரம்பத்தில் தெளிவில்லாமல்தான் தொடங்கினோம். இந்த சமயத்தில் பல பெற்றோர்களை சந்தித்தோம். குழந்தைகளுக்கு என்ன தேவை, அவர்களை எப்படிக் கையாளுகிறார்கள், எப்படி ஆக்டிவ்வாக வைத்திருக்கிறீர்கள் என்பது குறித்து தெரிந்து கொள்ள நிறைய பெற்றோர்களை சந்தித்தோம். மேலும் கல்வியாளர்களை, துறை சார்ந்த வல்லுநர்களை சந்தித்தபோதுதான் எங்களது முயற்சியில் ஒரு தெளிவு கிடைத்தது.
ஒரு குழந்தையின் முதல் எட்டு வருடம் என்பது மிகவும் முக்கியமானது. நாம் குழந்தைகளை நன்றாக கவனித்துகொள்ளலாம், ஆனால் குழந்தைகளின் முதல் எட்டு ஆண்டுக்கால வளர்ச்சி குறித்து நாம் அதிகமாக உணரவில்லை. முதல் இரு ஆண்டுகளில் குழந்தையின் மூளைவளர்ச்சி 50 சதவீதம் முழுமையடைந்திருக்கும். 4 ஆண்டுகள் முடிவில் 70 சதவீதம் வளர்ச்சி அடைந்திருக்கும். 6 வயதில் 80 சதவீதம் முழுமையடைந்திருக்கும். ஆனால் குழந்தைகளின் மூளைக்கு நாம் சரியான தீனி வழங்குவதில்லை.
20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த குழந்தைகள் வெற்றியடையவில்லையா என்கிற கேள்வி இயல்பானதே. ஆனால் தற்போதைய குழந்தைகளுக்கு போதிய அனுபவம் கிடைக்கவில்லை. உதாரணத்துக்கு எங்களுடைய சிறிய வயதில் மரம் ஏறியிருக்கிறோம், கோழியை துரத்தி இருக்கிறோம், களிமண்ணில் விளையாடி இருக்கிறோம். ஆனால் இப்போதைய குழந்தைகளுக்கு இந்த அனுபவம் இல்லை. அதிகபட்சம் வீடியோகேம் விளையாடுகிறார்கள். மூளை என்பது அனுபவங்களின் தொகுப்பில் இயங்கி வருகிறது. மரம் ஏறுவது என்பது முதலில் கை வைக்க வேண்டும். அடுத்து ஒரு கால், அதற்கடுத்து ஒரு கால் என பல செயல்பாடுகளின் தொகுப்பாகவும். இந்த அனுபவம் அடுத்த செயல்பாடுகளுக்கு உதவியாகவும் இருக்கும்.
குழந்தைகளுக்கு நல்ல அனுபவங்கள் கிடைக்கும் பட்சத்தில்தான் வருங்காலத்தில் சிறப்பாக செயல்பட முடியும். மோசமான அனுபவம் பெற்ற குழந்தைகளின் இயல்பு வித்தியாசமாக இருக்கும். அதற்காக குழந்தைகளுக்குத் தேவையான மொத்த அனுபவங்களையும் எங்களுடைய விளையாட்டு /ஆக்டிவிட்டி மூலம் கொடுப்போம் என்று சொல்லவில்லை. ஆனால் நல்ல அனுபவங்களைக் கொடுக்க வேண்டும் என்பது எங்களின் திட்டமாகும். குழந்தைகளுக்கு 16 வகையான திறன் தேவை. இவற்றில் எங்கெல்லாம் எங்களால் பங்கேற்க முடியுமோ அங்கெல்லாம் நாங்கள் பங்கேற்கிறோம். flintstones என்றால் சிக்கிமுக்கி கல். இதில் இருந்துதான் ஃபிளின்டோபாக்ஸ் என்னும் பெயரை உருவாக்கினோம். அதுபோல இவற்றின் மூலம் குழந்தைகளுக்கு சிறிய பொறியை உருவாக்கினால் போதும். தீ தானாக பரவும்.
விற்பனை உத்தி
முதலில் டிஸ்ட்ரிபியூட்டர் மூலமாக போகலாம் என்று நினைத்தோம். ஆனால் அது மிகப்பெரிய சங்கிலி. நாம் பொருட்களை கொடுத்து பணம் திரும்பி வாங்குவதற்கு ஓர் ஆண்டு ஆகிறது என்று கண்டுபிடித்தோம். ஆன்லைன் ரீடெய்லில் பல பொருட்கள் இருக்கும். நம் பொருட்களை மக்கள் வாங்க வேண்டும் என நினைத்தால் மட்டுமே ஆன்லைன் செல்வார்கள். முக்கியமாக எங்களது தயாரிப்பை அங்கு தேடி வாங்குவது என்பதும் சிரமம். அதனால் சந்தாதாரர் என்கிற முறையில் எங்களது இணைய தளம் மூலமாகவே விற்கத் தொடங்கினோம். இதற்கு டிஜிட்டல் மார்க்கெட்டிங்கை பயன்படுத்திக் கொண்டோம். இதுவரை நேரடியாக வீடுகளுக்கு சென்றிருந்தோம். அடுத்து பள்ளிகளுக்கு செல்ல தொடங்கி இருக்கிறோம். குழந்தைகளின் ஆரம்ப கால அனுபவங்களை இனிமையாக்குவதே எங்கள் திட்டம் என இவர்கள் கூறினார்கள்.
Recent Comments