ஹாப்பியஸ்ட் மைண்ட் நிறுவனத்தின் ஐ.பி.ஓ பங்குச் சந்தையில் வந்த அன்றே (07.09.2020) சில்லறை முதலீட்டாளர் பிரிவில் ஐந்து மடங்குக்கு மேல் சப்ஸ்கிரைப் ஆகி பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. ஒருவர் தன் வாழ்நாளில் ஒரு நிறுவனத்தைத் தொடங்கி வெற்றி காண்பதே பெரிய சாதனையாக இருக்கும்போது, இரண்டு நிறுவனங்களைத் தொடங்கி, அந்த இரு நிறுவனங்களையும் ஐ.பி.ஓ கொண்டுவந்து சாதனை படைத்திருக்கிறார் ‘ஹாப்பியஸ்ட் மைண்ட்’ நிறுவனத்தின் நிறுவனரான அசோக் சூட்டா. யார் இவர், இவரது வாழ்க்கைப் பின்னணி என்ன?
பாகிஸ்தானில் பிறந்தவர்..!
1942-ல் பாகிஸ்தானில் பிறந்தார் அசோக் சூட்டா. இவரின் அப்பா ராணுவ டாக்டராக இருந்ததால், பல்வேறு பள்ளிகளில் பள்ளிப்படிப்பை முடித்திருக்கிறார். ஐ.ஐ.டி ரூர்கேலாவில் இன்ஜினீயரிங் முடித்தவர். டெல்லியில் உள்ள ஸ்ரீராம் குழுமத்தில் பணியைத் தொடங்கினார். இடையே பிலிப்பைன்ஸில் எம்.பி.ஏ படித்தார்.
1984-ம் ஆண்டு முதல் 89-ம் ஆண்டு வரை விப்ரோ நிறுவனத்தில் பணியாற்றினார். விப்ரோ நிறுவனத்திலிருந்து வெளியேறும்போது தலைமைப் பொறுப்பில் இருந்தார். விப்ரோ நிறுவனம் பல தொழில்முனைவர்களை உருவாக்கியிருக்கிறது. அசோக் சூட்டாவுக்கும் விப்ரோவில் பணியாற்றிய பிறகுதான், சொந்தமாகத் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது.
நண்பர்களுடன் தொடங்கிய மைண்ட்ட்ரீ..!
விப்ரோவில் இருந்தபோது தனியாக நிறுவனம் தொடங்குவதற்காக முதலீட்டைத் தேடி வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனங்களுடன் பேசிக்கொண்டிருந்த நிலையில், அவரைப் போலவே வேறு சிலரும் அப்படிப்பட்ட ஒரு முயற்சியில் இருப்பது தெரியவந்தது. ஒரே மாதிரியான சிந்தனையும் செயல்திட்டமும் கொண்ட நண்பர்கள் ஒன்று சேர, மைண்ட் ட்ரீ நிறுவனம் உதயமானது. நிறுவனத்தின் புராஜெக்ட்டுகளை நிறைவேற்றத்தான் ஐ.டி நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஊழியர்கள் என்ற சிந்தனையை மாற்றி, ஊழியர்களின் அறிவுக்குத் தீனி போடும் நிறுவனமாக மைண்ட் ட்ரீ இருக்க வேண்டும் என்று நினைத்து அந்த நிறுவனத்தை வித்தியாசமாக உருவாக்கினார்கள் அசோக் சூட்டாவும் அவரின் நண்பர்களும்.
விலக வைத்த கருத்துவேறுபாடு..!
மைண்ட்ட்ரீ நிறுவனத்தின் ஐ.பி.ஓ 2007-ம் ஆண்டு வெளிவந்தது. அப்போது இந்தப் பங்கு 103 மடங்குக்கு விண்ணப்பங்களைப் பெற்றது. வேகமாக வளர்ச்சி கண்டுவரும் ‘மிட்சைஸ்’ ஐ.டி நிறுவனம் என்ற பெயருடன் வளர்ந்து கொண்டிருந்த நிலையில், 2011-ம் ஆண்டு ஹார்டுவேர் நிறுவனம் ஒன்றை மைண்ட்ட்ரீ நிறுவனம் வாங்கியது. இதை எதிர்த்த அசோக் சூட்டா, அந்த நிறுவனத்தை விட்டு வெளி யேறினார். சமரசம் இல்லாத சிந்தனைதான் அவரை இயக்கும் உந்துசக்தியாக எப்போதும் இருந்திருக்கிறது. அதே நேரம், இந்த கருத்து வேறுபாட்டை யாரிடமும் சொல்லாமல், அமைதியாக வெளியேறினார் அசோக் சூட்டா.
மீண்டும் மகிழ்ச்சியை நோக்கி..!
அசோக் சூட்டா தொழில் தொடங்குவதற்கு முதலீடு செய்ய பல வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனங்கள் தயாராக இருந்தன. எனவே, சத்தமில்லாமல் தன் அடுத்த நிறுவனத்தை ஆரம்பித்தார். வேலையை மகிழ்ச்சியாகச் செய்ய வேண்டும் என்பதுதான் சூட்டாவின் எண்ணம். எனவே, தனது புதிய நிறுவனத்துக்கு ‘ஹாப்பியஸ்ட் மைண்ட்’ என்று பெயர் வைத்தார். அது மட்டுமல்ல, மற்ற ஐ.டி நிறுவனங்களிலிருந்து சற்று வித்தியாசமாகத் தெரிகிற மாதிரி தனது நிறுவனத்தின் பிசினஸ் மாடலையும் உருவாக்கினார். ஹாப்பியஸ்ட் மைண்ட் நிறுவனத்தின் வருமானத்தில் 97% அளவுக்கு டிஜிட்டல் மூலமாகவே கிடைக்கிறது. இந்திய அளவில் முன்னணி ஐ.டி நிறுவனங்களில் அதிகளவு டிஜிட்டல் மூலம் வருமானம் ஈட்டுவது இந்த நிறுவனமே.
தன்னை முன்னிறுத்திக்கொள்ளாதவர்..!
எந்த நேரத்திலும் தன்னை முன்னிறுத்திக் கொள்ளாதவர் அசோக் சூட்டா. தன் விருப்பு வெறுப்புகள் பற்றி வெளிக்காட்டிக்கொள்ள விரும்பாதவர். சிறு, குறு நிறுவனங்கள் மிகப் பெரிய வளர்ச்சி காண ‘ஆந்தரபிரினர்ஷிப் சிம்பிளிஃபைடு… ஃப்ரம் ஐடியா டு ஐ.பி.ஓ’ என்ற ஒரு புத்தகத்தை எழுதியிருக்கிறார்.
அசோக் சூட்டா என்ற அசாதாரண மனிதரை கெளரவிக்கும் நேரம் இது!
Recent Comments