ம்மூரில் டி.சி.எஸ் நிறுவனம் பற்றித் தெரியாதவர்கள் இருக்க முடியாது. இந்தியாவின் மிகப்பெரிய ஐ.டி நிறுவனங்களில் முதலிடத்தில் இருக்கிறது நூற்றாண்டு் பாரம்பர்யத்துடன் விளங்கும் டாடா நிறுவனத்துக்குச் சொந்தமான டி.சி.எஸ் நிறுவனம்.

சந்தை மதிப்பின் (Market capitalisation) அடிப்படையில் இந்த நிறுவனத்துடன் மோதுகிற பலம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துக்கு மட்டுமே இருந்தது. ஓராண்டுக்கு முன்பு வரை ரிலையன்ஸ் நிறுவனமும் டி.சி.எஸ் நிறுவனமும் முதலாவது இடத்துக்கு போட்டி போட்டுவந்தன. ஒரு வாரம் டி.சி.எஸ் முதல் இடத்திலும், அடுத்த வாரம் ரிலையன்ஸ் முதலிடத்திலும் இருக்கும் அளவுக்குக் கடும் போட்டி நிலவியது.

ஆனால், இன்றைக்கு சந்தை மதிப்பின் அடிப்படையில் உச்சத்தில் இருக்கிறது ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ். இதன் சந்தை மதிப்பு ரூ.13.50 லட்சம் கோடிக்குமேல். ஆனால், டி.சி.எஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்போ ரூ.8.5 லட்சம் கோடிக்குக்கீழ். இனிவரும் காலத்தில் டி.சி.எஸ் நிறுவனத்தால் ரிலையன்ஸைத் தாண்டிச் செல்ல முடியுமா என்பது மிகப்பெரிய கேள்விதான்.

உயர உயரப் பறக்கும் முகேஷ் அம்பானி..! - உலகின் 4-வது பணக்காரர் ஆனது எப்படி?

ரிலையன்ஸின் இந்த மிகப்பெரிய மதிப்புப் பாய்ச்சலுக்குக் காரணம், அந்த நிறுவனம் சமீபத்தில் வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து திரட்டிய முதலீடுகள்தான். உலகமே முடங்கிக் கிடந்த இந்த கோவிட்-19 காலத்தில் காதும் காதும் வைத்த மாதிரி பேசி, கச்சிதமாகக் காய்களை நகர்த்தி, ரிலையன்ஸ் நிறுவனத்தை மிகப்பெரிய அளவில் உயர்த்தியதுடன், இந்தியாவின் நான்காவது பெரிய பணக்காரர் என்ற பெருமையையும் மிகக் குறுகிய காலத்தில் பெற்று உயர உயரப் பறந்துகொண்டிருக்கிறார் முகேஷ் அம்பானி.

இந்த மாற்றத்துக்கான விதையை அவர் இப்போது விதைக்கவில்லை; பல ஆண்டுகளுக்கு முன்பே விதைத்துவிட்டார். என்ன செய்தார் முகேஷ், அப்பா திருபாய் அம்பானி கொடுத்த சொத்தை பல நூறு மடங்குக்கு அவரால் எப்படிப் பெருக்க முடிந்தது?

ஆயிலில் இருந்து டெக்னாலஜிக்கு..!

ரிலையன்ஸ் தற்போது ஒரு டெக்னாலஜி நிறுவனமாக அவதாரம் எடுத்திருந்தாலும், ஆரம்பத்தில் டெக்ஸ்டைல் நிறுவனமாகவே தொடங்கப்பட்டது. அதன்பிறகு பெட்ரோ கெமிக்கல் துறையில் களமிறங்கியது. குஜராத் ஜாம்நகரில் அமைந்துள்ள ஆலையில் கச்சா எண்ணெயைச் சுத்திகரிக்கும் பணியைத் தொடங்கிய சில ஆண்டுகளிலேயே உலகின் மிக முக்கியமான சுத்திகரிப்பு நிலையங்களில் ஒன்றாக மாறியது. இதனால் இந்த நிறுவனத்தின் வருமானம் கணிசமாக உயர்ந்தது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் வருமானத்தில் 90% பெட்ரோகெமிக்கல் பிசினஸ் மூலமாக மட்டுமே வந்தது.

B to B டு B to C

2002 முதல் 2005-ம் ஆண்டு வரையிலான காலம் ரிலையன்ஸ் குழுமத்துக்கு சிக்கல் மிகுந்ததாகவே இருந்தது. 2002-ல் திருபாய் அம்பானி இறந்தார். அடுத்த இரண்டு ஆண்டு காலத்தில் முகேஷ் அம்பானி, அனில் அம்பானி சகோதரர்களுக்கு இடையே சொத்து பிரிக்கப் பட்டது. ரிலையன்ஸ் உட்பட எரிசக்தி மற்றும் இன்ஜினீயரிங் நிறுவனங்கள் முகேஷிடம் வந்தது. அந்த நிறுவனங்களை அடுத்தகட்ட வளர்ச்சிக்குக் கொண்டு செல்ல வேகமாகத் திட்டமிட்டார் முகேஷ்.

பிசினஸில் பொதுவாக, இரண்டு வகை உண்டு. ஒன்று, B to B அதாவது, ஒரு நிறுவனம் இன்னொரு நிறுவனத்துடன் பிசினஸ் செய்வது. ரிலையன்ஸ் நிறுவனம் கச்சா எண்ணெயை சுத்திகரிப்புச் செய்து தந்தாலும், அதை இன்னொரு நிறுவனத்துக்குத் தந்ததே தவிர, ரீடெயில் அடிப்படையில் சாதாரண மக்களுக்கு விற்பனை செய்யவில்லை. இரண்டாவது, B to C அதாவது, சாதாரண வாடிக்கையாளர் களுக்கு ரீடெயில் அடிப்படையில் விற்பனை செய்வது. ரிலையன்ஸைப் பொறுத்தவரை, B to B-யில் சிறப்பான வருமானத்தைச் சம்பாதித்ததால், B to C பற்றி பல ஆண்டுகளுக்கு முகேஷ் பெரிதாக யோசிக்கவில்லை.

ஆனால், 2005-ம் ஆண்டுக்குப் பிறகு B to C பற்றி பலமாக யோசிக்க ஆரம்பித்தார் முகேஷ். 2007-ம் ஆண்டு ரீடெயில் துறையில் களம் இறங்கினார். ரிலையன்ஸ் ரீடெயில் பிசினஸ் தொடங்கியபோது, இந்தியா முழுக்க வியாபாரிகளிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதைப் பார்த்து முகேஷ் பதற்றப்படவில்லை. ரீடெயில் பிசினஸுக்குச் சாதகமான நிலை ஏற்படும் வரை பொறுமையாக இருந்தார். விளைவு, இந்திய அளவில் முக்கியமான ரீடெயில் நிறுவனமாக ரிலையன்ஸ் ரீடெயில் உருவாகியிருக்கிறது.

ரிலையன்ஸ் ரீடெயில்

இந்தியாவின் ரீடெயில் என்பது மிகப்பெரிய சந்தை. இதில் முறைப்படுத்தப்பட்ட (ஆன்லைன் மற்றும் கடைகள் சேர்த்து) நிறுவனங்களைவிட முறைப்படுத்தபடாதவையே அதிகம். முறைப்படுத்தப்பட்ட சந்தையில் 45% ரிலையன்ஸ் ரீடெயில் வசம் இருக்கிறது. இரண்டாம் இடத்திலிருக்கும் அமேசானுக்கு 22% சந்தையைக் கைப்பற்றியிருக்கிறது.

முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானி

இன்று, ரிலையன்ஸ் ஃப்ரெஷ், மார்ட், டிஜிட்டல், டிரெண்ட்ஸ் என ரிலையன்ஸ் ரீடெயில் பிரிவில் 11,784 கடைகள் உள்ளன. 2019-ம் ஆண்டில் 1,00,000 கோடி ரூபாய் வருமானத்தைத் தொட்ட முதல் ரீடெயில் நிறுவனமாகவும் ரிலையன்ஸ் மாறியிருக்கிறது. இந்தியாவின் பாரம்பர்யமிக்க நிறுவனங்களும் ரீடெயில் பிரிவில் இருந்தாலும், ரிலையன்ஸ் ரீடெயிலின் விற்பனை வருமானத்தைப்போல அந்த நிறுவனங்களால் செய்ய முடியவில்லை. ரீடெயில் பிசினஸில் உள்ள மிகப்பெரிய வாய்ப்பையும் வருமானத்தையும் முகேஷ் மிகச் சரியாகப் புரிந்துகொண்டதால், ரிலையன்ஸ் ரீடெயிலை பெரிய அளவில் வளர்த்தெடுத்தார்.

ரிலையன்ஸ் ரீடெயில், ரீடெயில் பிரிவில் ஏற்கெனவே கணிசமான சந்தையை வைத்திருக்கிறது. தவிர, கிஷோர் பியானியின் ஃபியூச்சர் குழுமத்தையும் தற்போது வாங்கத் திட்டமிட்டிருக்கிறது. தமிழகத்தில் பல கிளைகளைக்கொண்ட கண்ணன் டிபார்ட்மென்ட்டல் ஸ்டோரையும் கடந்த ஆண்டில் வாங்கிச் சேர்த்துக்கொண்டது ரிலையன்ஸ்.

ஆஃப்லைன் டு ஆன்லைன்

10 ஆண்டுகளுக்கும் மேலாக, நேரடி விற்பனை என்பதிலேயே கவனம் செலுத்திவந்தார் முகேஷ் அம்பானி. இது இன்டர்நெட் யுகம் என்பதால், இணையதளத்தின் மூலம் வாடிக்கையாளர்களைச் சென்றடைய வேண்டும் என்பதையும் புரிந்துகொண்டார். ரீடெயில் பிசினஸில் அமெரிக்காவின் வால்மார்ட்தான் அவர் மனதில் முதலில் இடம்பிடித்த பிசினஸ் மாடலாக இருந்தது. அமேசான் நிறுவன பிசினஸ் மாடலில் இருக்கும் வாய்ப்புகளைப் பிற்பாடுதான் புரிந்துகொண்டார். இதற்குக் காரணம், தனக்கென ஓர் இணையதளக் கட்டமைப்பை ஏற்படுத்திக்கொள்ள முகேஷுக்கு கால அவகாசம் தேவைப்பட்டது. தனக்கான இணையதளக் கட்டமைப்பை பக்காவாகத் தயார் செய்துகொண்ட முகேஷ், தற்போது ஜியோ மார்ட்டை அறிமுகம் செய்திருக்கிறார். இந்த நிறுவனத்தின் மூலம் தற்போது 200 நகரங்களுக்குமேல் சேவை வழங்கப்படுகிறது. வீட்டுக்குத் தேவையான அனைத்துப் பொருள்களும் ஜியோ மார்ட்டில் வாங்கிக்கொள்ளலாம். தற்போது ஒரு நாளைக்கு 2.5 லட்சம் ஆர்டர்கள் வருகின்றன. மொத்த வியாபாரம், சில்லறை வியாபாரம் எனக் கடைக்காரர்களையும் சாதாரண மக்களையும் சென்றடையும் நோக்கத்தில் ஜியோ மார்ட் செயல்படுவதால், இன்னும் சில ஆண்டுகளில் இதன் ஆதிக்கம் மிகப்பெரிய அளவில் இருக்கும் என்கிறார்கள் ரீடெயில் துறை வல்லுநர்கள்.

ரிலையன்ஸ் ஜியோ என்னும் பணம்காய்க்கும் மரம்!

டெக்ஸ்டைல், கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு, ரீடெயில்ஸ் என ஒவ்வொரு நிலையாக உயர்ந்து வந்த ரிலையன்ஸ் நிறுவனம், ஜியோ என்ற பெயரில் இன்டர்நெட் சேவையை வழங்குவதன்மூலம் மிகப் பெரிய வளர்ச்சி கண்டுவருகிறது.

ஆறு, ஏழு ஆண்டுகளுக்கு முன்பு முகேஷ் அம்பானி ஜியோ நிறுவனத்தைத் தொடங்கியபோது, ‘முகேஷ் அம்பானி சூதாட்டத்தில் இறங்குகிறார்’ என்றே பலரும் சொன்னார்கள். ஏன் தெரியுமா?

ரிலையன்ஸ் தற்போதும் கடன் இல்லாத நிறுவனமாக இருப்பதைப்போல, 2012-ம் ஆண்டிலும் கடன் இல்லாத நிறுவனமாகவே இருந்தது. இருந்தாலும் அந்தவொரு பெருமையுடன் மட்டுமே இருக்க முகேஷ் விரும்பவில்லை. 2012-ம் ஆண்டு பங்குதாரர் பொதுக் கூட்டத்தில் ஒரு முக்கியமான முடிவை அறிவித்தார் முகேஷ். ‘‘தற்போது நமக்கு கிடைத்துவரும் வருமானம் எதிர்காலத்தில் கிடைக்காது’’ என்பதே அந்த அறிவிப்பு. உலக அளவில் பெட்ரோல், டீசலின் பயன்பாடு மெள்ள மெள்ள குறையத் தொடங்கியது இதற்கு ஒரு காரணம். இன்னொரு காரணம், அமெரிக்காவில் படித்து முடித்த அவர் மகள், இந்தியாவுக்குத் திரும்பியது. ‘இந்தியாவில் இன்டர்நெட் வேகம் குறைவாக இருக்கிறது’ என முகேஷின் வாரிசுகள் சொல்ல, இது ஏன் இப்படி இருக்கிறது என்று பார்த்த முகேஷ், இதில் மிகப்பெரிய பிசினஸ் இருப்பதைத் தெரிந்துகொண்டார்.

திருபாய் அம்பானி மறைந்த பின் சொத்து பிரிக்கப்பட்டபோது, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் அனில் அம்பானிக்குச் சென்றது. சகோதரர்கள் செய்துவரும் தொழிலுக்குப் போட்டியாக எந்தத் தொழிலையும் செய்யக் கூடாது என்ற ஒப்பந்தம் இருந்ததால், தொலைத் தொடர்பு துறையில் தடம் பதிக்காமலே இருந்தார் முகேஷ். ஆனால், அனில் அம்பானியால் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்த முடியவில்லை என்று தெரிந்தபிறகு, அந்தத் துறையில் கால் பதித்தார் முகேஷ். முதலில் செல்போன் சேவையை ஜியோ மூலம் பெரிய அளவில் தொடங்கிய முகேஷ், பிற்பாடு இணையச் சேவை தரும் நிறுவனமாக மாற்றினார். ‘கச்சா எண்ணெய்க்குப் பிறகு இனி தகவல்களே உலகை இயக்கிக்கொண்டு செல்லும்’ என்று அவர் சரியாகப் புரிந்துகொண்டதன் விளைவாக, ‘Data is the new Oil’ என்று பேசத் தொடங்கினார்.

உயர உயரப் பறக்கும் முகேஷ் அம்பானி..! - உலகின் 4-வது பணக்காரர் ஆனது எப்படி?

2012-ம் ஆண்டு தொடங்கி, நான்கு ஆண்டுக்காலம் திட்டமிட்டு, 2016-ம் ஆண்டு செப்டம்பரில் ரிலையன்ஸ் ஜியோவை அறிமுகம் செய்தார் முகேஷ். கடந்த ஆறு ஆண்டுகளில் சுமார் ரூ. 6,00,000 கோடி அளவுக்கு புதிய பிரிவுகளுககாக முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதில் ரூ. 4,00,000 கோடி டிஜிட்டல் மற்றும் டெலிகாம் பிரிவுகளில் முதலீடு செய்யப்பட்டு உள்ளது. ரிலையன்ஸ் குழுமம் 35 ஆண்டுகளாக முதலீடு செய்த மொத்த தொகையை ஜியோவுக்காக மூன்று ஆண்டுகளில் முதலீடு செய்திருக்கிறார் முகேஷ்.

இதன் காரணமாக, ரிலையன்ஸின் கடன் தொடர்ந்து அதிகரித்தது. ஆனாலும், இனி ஜியோதான் பணம் காய்க்கும் மரமாக இருக்கும் என அவர் நினைத்ததால், கடனைப் பற்றி கவலைப்படாமல், ஜியோவை வளர்த்தார். இன்றைக்கு இந்தியா முழுக்க 30 கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் ஜியோவுக்கு இருக்கிறார்கள். இவர்கள்மூலம் கிடைக்கும் வருமானம் இப்போதே கணிசமாக இருக்கும்போது, இனிவரும் காலத்தில் இதன் வருமானம் மிகப் பெரிய அளவில் இருக்கும் என்பதை சொல்லத் தேவையில்லை.

அதிகரித்தது கடன்..!

என்றாலும், கடந்த மார்ச் (2020) மாத நிலவரப்படி, ரூ. 1,61,000 கோடி அளவுக்குக் கடன் இருந்தது. கடன் அதிகமாக இருந்ததால், பல புரோக்கிங் நிறுவனங்கள் ரிலையன்ஸ் பங்கின் இலக்கு விலையைக் குறைத்து கணித்தன. இதனால் முதலீட்டாளர்கள் பலரும் அதிருப்தியில் இருந்தனர். இந்தக் காலத்தில் ஜியோவுக்குத் தேவையான பல ஸ்டார்ட்அப் நிறுவனங்களை ரிலையன்ஸ் கையகப்படுத்தியது. ரிலையன்ஸ் குழுமத்துக்கு முக்கிய வருமானத்தைக் கொடுக்கும் சுத்திகரிப்புத் தொழிலும் லாபத்தில் பெரிய வளர்ச்சி இல்லை. தொடர்ந்து பல காலாண்டுகளாக சுத்திகரிப்பு வருமானம் குறைவாகவே இருந்ததால், 2011-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை ரிலையன்ஸ் பங்கில் ஏற்றம் இல்லாமல் இருந்தது.

குவியும் முதலீடு..!

இந்த நிலையில்தான் கடந்த ஆண்டு நடந்த ரிலையன்ஸ் பங்குதாரர் கூட்டத்தில், ‘ரிலையன்ஸ் நிறுவனத்தைக் கடன் இல்லாத நிறுவனமாக மாற்றப்போவதாக’ அறிவித்தார் முகேஷ். அறிவித்த கையோடு உலகின் மிகப்பெரிய நிறுவனங்கள் அனைத்துடனும் பேச்சுவார்த்தை நடத்த ஆரம்பித்தார். கொரோனாவின் காரணமாக உலகமே முடங்கியபோது, பேச்சுவார்த்தையை மட்டும் அவர் நிறுத்தவே இல்லை. கொரோனா காரணமாக நம் நாடு ஊரடங்கு நடவடிக்கையால் முடங்கியபோது, அனைவரும் இணையத்தின் உதவியை நாடினார்கள். இதனால் இன்டர்நெட்டின் பயன்பாடு நம் நாட்டில் ஏகத்துக்கும் உயர்ந்தது. இந்தியாவில் இன்டர்நெட் தொழில்நுட்பத்துக்கு இருக்கும் வாய்ப்பையும் முக்கியத்துவத்தையும் உலகளவிலான பெரும் தொழில் நிறுவனங்கள் நேரடியாகப் புரிந்துகொள்ள இது மிக உதவியாக இருந்தது. எனவே, ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு ஃபேஸ்புக், கூகுள் என 13 முதலீட்டாளர்கள் மூலம் ரூ.1,52,000 கோடி முதலீடு திரட்டப்பட்டு உள்ளது. ஜியோவின் 32% பங்குகள் கடந்த ஆறு மாதங்களில் விற்கப்பட்டுள்ளன. மீதமிருக்கும் பங்கில் சில சதவிகிதப் பங்குகளை விற்றால், ரிலையன்ஸுக்கு இன்னும் பல ஆயிரம் கோடிகள் கிடைக்கும்.

‘‘ரிலையன்ஸின் கடன் எந்தளவுக்கு வேகமாக அதிகரித்ததோ, அந்தளவுக்கு வேகமாகக் குறைந்திருக்கிறது. குறிப்பாக, கோவிட் காலத்தில் இவ்வளவு பெரிய முதலீட்டைத் திரட்டியது ஆச்சர்யம்’’ என்கிறார் பெலிகன் பி.எம்.எஸ் ஃபண்ட் மேனேஜர் தீபக் ராதாகிருஷ்ணன். முகேஷ் சொன்னதுபோல, ரிலையன்ஸை கடன் இல்லாத நிறுவனமாக மாற்றிக் காட்டிவிட்டார். கடந்த மார்ச் மாதத் தொடக்கத்தில் ரிலையன்ஸ் பங்கு விலை ரூ.883-ஆக இருந்தது. ஆனால், இன்று (ஆகஸ்ட் 12) அதன் விலை ரூ.2,137. ரிலையன்ஸ் நிறுவனப் பங்குகளை வாங்கி வைத்திருந்த முதலீட்டாளர்கள் மட்டுமல்ல, ரிலையன்ஸ் நிறுவனத்தின் முகேஷ் அம்பானியும் பெரும் பணக்காரராகிவிட்டார். முகேஷின் சொத்து மதிப்பு 8,060 கோடி டாலராக உள்ளது. நடப்பாண்டில் மட்டும் 2,200 கோடி டாலர் உயர்ந்திருக்கிறது. கூடியவிரைவில் உலக அளவில் மூன்றாவது பெரும் பணக்காரராக முகேஷ் மாறினாலும் ஆச்சர்யமில்லை!

ரிலையன்ஸ் – ஃபேஸ்புக் கூட்டணி ஏன்?

ஃபேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்அப் நிறுவனத்தை ஏற்கெனவே வாங்கிவிட்டது. இந்த நிலையில் ஒழுங்குமுறை ஆணையங்களின் விதிமுறைகள் காரணமாக வாட்ஸ் அப் பேமன்ட் திட்டத்தை இந்தியாவில் கொண்டு வரமுடியவில்லை. தற்போது ஜியோவுடன் கூட்டணி ஏற்பட்டிருப்பதால், ஜியோ வாடிக்கையாளர்களை வாட்ஸ்அப் மூலம் ஃபேஸ்புக் நிறுவனம் எளிதாக அணுகும் நிலை உருவாகியுள்ளது. தவிர, புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய ஜியோ திட்டமிட்டிருக்கிறது. இதற்கான இயங்கு செயலியை (ஆபரேட்டிங் சிஸ்டம்) கூகுள் மற்றும் ஜியோ இணைந்து வடிவமைக்கவும் திட்டமிட்டிருக்கிறது. இதன் மூலம் நேரடியாக ஜியோ வாடிக்கையாளர்களைக் கைப்பற்ற கூகுளால் முடியும் என்பதால், போட்டி நிறுவனமாக இருந்தாலும், ரிலையன்ஸில் முதலீடு செய்திருப்பதாக சந்தை வல்லுநர்கள் கருதுகின்றனர்.

ஜியோ ஐ.பி.ஓ எப்போது?

உயர உயரப் பறக்கும் முகேஷ் அம்பானி..! - உலகின் 4-வது பணக்காரர் ஆனது எப்படி?

2020-ம் ஆண்டு இரண்டாம் பாதியில் ஜியோ பொதுப் பங்கு வெளியிடத் திட்டமிட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகின. தற்போது வெளிநாட்டு நிறுவனங்கள் பலவும் முதலீடு செய்திருப்பதால், சர்வதேசச் சந்தையில்தான் இதனுடைய ஐ.பி.ஓ இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இந்த நிறுவனங்கள் இப்போதுதான் முதலீடு செய்துள்ளன. எனவே, உடனே முதலீட்டை விற்க வாய்பில்லை. தவிர, தற்போது சர்வதேச அளவில் நிச்சயமற்ற சூழல் இருக்கிறது. இந்தச் சூழல் முடிவடைந்த பிறகு, இந்த ஐ.பி.ஓ வெளியீடு இருக்கலாம் எனத் தெரிகிறது.

முகேஷ் அம்பானியின் புதிய உத்தி!

கே.வைத்தீஸ்வரன், இணை நிறுவனர், Again Drinks

உயர உயரப் பறக்கும் முகேஷ் அம்பானி..! - உலகின் 4-வது பணக்காரர் ஆனது எப்படி?

“சிறப்பான உத்தியை உருவாக்கி அதை வெற்றிகரமாகச் செயல்படுத்தியிருக்கிறார் முகேஷ் அம்பானி. இரண்டு ஆண்டுகளுக்கு முன்புகூட நிறுவனத்தின் கடன் அதிகமாக இருக்கிறதே, இந்தக் கடனை எப்படி அடைக்கப்போகிறார், ஜியோ வெற்றி அடையுமா என்று யோசித்திருக்கிறேன். காரணம், ரிலையன்ஸ் பிசினஸ் டு பிசினஸ் பிரிவில் பெருவெற்றி அடைந்த நிறுவனம். ஆனால், பிசினஸ் டு கஸ்டமர் என்பது சவாலானது, தவிர ஏற்கெனவே ஏர்டெல் உள்ளிட்ட பெரு நிறுவனங்கள் சந்தையில் உள்ளன. இந்த நிலையில் சந்தையைக் கைப்பற்ற முடியுமா என யோசித்திருக்கிறேன். இந்த யோசனைகளை எல்லாம் பொய்யாக்கிக் காட்டியிருக்கிறார் முகேஷ்.

டெக்னாலஜி நிறுவனங்கள் பங்குகளை விற்று நிதி திரட்டும். உற்பத்தி நிறுவனங்கள் சொத்துகளை அடமானமாக வைத்து நிதி திரட்டும். கடன் மற்றும் பங்குகள் மூலம் நிதி திரட்டுவது என இரண்டையும் செய்தால்தான் வெற்றி அடைய முடியும். ஆனால், ஜியோவை உருவாக்க வேறு வழியைக் கையாண்டார் முகேஷ். வெற்றிகரமாகச் செயல்பட்டுக்கொண்டிருந்த பெட்ரோகெமிக்கல் தொழிலை அடிப்படையாக வைத்து கடன் வாங்கினார். நிலையான வருமானம் இருப்பதால், அந்த வருமானத்தை வைத்துக்கொண்டு புதிய தொழிலை உருவாக்கி, அதற்கான சந்தையையும் வெற்றிகரமாக உருவாக்கி, அதை அடிப்படையாகக் கொண்டு பங்குகளை விற்றிருக்கிறார். ஏற்கெனவே, தொழிலில் இருக்கும் நிறுவனங்கள் பங்கு மூலம் நிதி திரட்டுவதைவிட கடன் வாங்கி தொழில் வெற்றி அடைந்த பிறகு பங்குகளை விற்கலாம் என்ற அருமையான பாடத்தையும் தொழில் உத்தியையும் சொல்லித் தந்திருக்கிறார் முகேஷ்.’’

நன்றி :நாணயம் விகடன்