கஸ்ட் 15-ம் தேதியன்று நமது சுதந்திர தினம். இந்தத் தினத்தில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார் தோனி.

இத்தனைக்கும் அவருக்கு இப்போது 39 வயதுதான். இந்த வயதிலேயே ஓய்வா என்ற கேள்வி ஒரு பக்கமிருக்க, இனி வருமானத்துக்கு எங்கே போவார் என்ற கேள்வி இன்னொரு பக்கம். ஆனால், கிரிக்கெட்டில் மட்டுமல்ல, தன்னுடைய ஓய்வுக்காலத்துக்கான திட்டமிடலைச் செய்வதில் தோனி அதிரடியாகச் செயல்பட்டிருக்கிறார்.

தோனி

தோனி

பொதுவாக, விளையாட்டு வீரர்கள் பிரபலமாக இருக்கும்போது நிறைய சம்பாதித்தாலும், அந்தப் பணம் அனைத்தையும் செலவு செய்துவிடுவார்கள் என்பதற்கு சிறந்த உதாரணம், பிரபல குத்துச் சண்டை வீரர் மைக் டைசன். விளையாட்டின் மூலம் பெரும் பணத்தைச் சம்பாதித்தார் மைக் டைசன், 2003-ம் ஆண்டில், தான் திவாலாகிவிட்டதாக அறிவித்தார். இதுபோல, 130 மில்லியன் டாலரைச் சம்பாதித்த போரிஸ் பெக்கர் கடந்த ஜூலையில் மஞ்சக் கடிதாசி கொடுத்தார்.

இதற்கு அடிப்படையான காரணம், விளையாட்டின் மூலம் கிடைக்கும் வருமானம் குறுகிய காலத்துக்கு மட்டுமே என்னும் உண்மை புரியாததால்தான். செஸ் உள்ளிட்ட சில விளையாட்டுகளை தவிர, பெரும்பாலான விளையாட்டுகளில் பரபரப்பாக இருக்கும் காலம் என்பது 15 வருடங்கள்தான். இந்தக் காலத்தில் சம்பாதிக்கும் தொகையை வைத்துதான் அவருடைய மீதமுள்ள காலத்தையும் ஓட்ட வேண்டும். ஆனால், தோனி தன்னுடைய 39-வது வயதில், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டாலும் அவருக்கு வருமானம் எப்படி வரும் என்ற பிரச்னையே இல்லை. காரணம், இதர தொழில்களில் அவர் தாராளமாக முதலீடு செய்து வைத்திருக்கிறார்.

கடந்த அக்டோபர் முதல் நடப்பு செப்டம்பர் வரையிலான காலத்தில் பி.சி.சி.ஐ ஒப்பந்ததில் தோனியின் பெயர் இடம்பெறவில்லை. இருந்தாலும் 2019-ம் ஆண்டில் கிரிக்கெட் அல்லாத அவரது வருமானம் ரூ.135 கோடி. கடந்த ஆண்டு விராட் கோலி 43 பிராண்டுகளில் தூதுவராக இருந்தார். ஆனால், தோனியோ 44 பிராண்டுகளுக்குத் தூதுவராக இருந்திருக்கிறார்.

தோனி எந்தெந்தத் தொழில்களில் முதலீடு செய்திருக்கிறார் என்பதை நீங்கள் தெரிந்து கொண்டால்தான், அவர் கவலைப்படாமல் ஓய்வை அறிவித்ததன் ரகசியம் புரியும்.

ஜிம்

ஸ்போர்ட்ஸ் ஃபிட் என்னும் பெயரில் ஜிம் நிறுவனத்தை நடத்தி வருகிறார் தோனி. 2012-ம் ஆண்டு இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. தற்போது இந்தியாவில் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த ஜிம் செயல்பட்டுவருகிறது. இந்தியா தவிர, மத்திய கிழக்கு நாடுகள், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், இங்கிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகளிலும் இந்த நிறுவனத்தை விரிவுப்படுத்தத் திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது.

விளையாட்டு

தோனி கிரிக்கெட் வீரராக அறியப்பட்டாலும் இதர விளையாட்டுகளிலும் முதலீடு செய்திருக்கிறார். சென்னையின் எஃப்.சி என்னும் கால்பந்து டீமின் இணை உரிமையாளராக இருக்கிறார். இந்த டீமின் மற்றொரு உரிமையாளர் பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன்.

அதேபோல, ராஞ்சி ரேஸ் என்னும் ஹாக்கி டீமின் இணை உரிமையாளராகவும் தோனி இருக்கிறார். 2014-ம் ஆண்டு முதலே இந்த டீமை நடத்திவருகிறார். மஹி ரேசிங் டீம் இந்தியா என்னும் பெயரில் ரேஸிங் குழுவையும் நடத்தி வருகிறார். தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவும் இதில் ஒரு பங்குதாரர்.

செவன்

செவன் என்னும் பெயரில் லைஃப்ஸ்டைல் நிறுவனத்தை நடத்தி வருகிறார். விளையாட்டு போட்டிகளுக்குத் தேவையான ஆடைகள், காலணிகள் மற்றும் விளையாட்டுச் சாதனங்களை விற்கும் நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் சாதனங்கள் நேரடியாக விற்பது மட்டுமல்லாமல் மிந்திரா உள்ளிட்ட இணையதளங்கள் மூலமும் விற்கப்படுகிறது. தவிர, சென்னை சூப்பர் கிங்ஸின் மெர்சண்டைஸ் பார்ட்னராகவும் இந்த நிறுவனம் திகழ்கிறது. ரிதி ஸ்போர்ட்ஸ் என்னும் பெயரில் விளையாட்டு மார்க்கெட்டிங் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இதில் இந்தியாவின் பல விளையாட்டு வீரர்களுக்கான மார்க்கெட்டிங் பணிகளை இந்த நிறுவனம் செய்துவருகிறது. மேலும், அவரது சொந்த ஊரில் ஹோட்டலும் நடத்தி வருகிறார்.

முதலீடுகள்

கார்ஸ் 24 என்னும் நிறுவனத்தின் பிராண்ட் தூதராக இருக்கும் அதே சமயத்தில் கடந்த ஆண்டு அக்டோபரில் கணிசமான தொகையை அதில் முதலீடு செய்திருக்கிறார். அதேபோல, கடந்த மார்ச் மாதத்தில் ‘khatabook’ என்னும் நிதிச்சேவை நிறுவனத்திலும் முதலீடு செய்திருக்கிறார். மேலும், சென்னையைச் சேர்ந்த ரன் ஆடம்ஸ் என்னும் நிறுவனத்திலும் முதலீடு செய்து 25% பங்குகளை தன் வசமாக்கியிருக்கிறார்.

ஓய்வுக்காலத்தை இளமையிலேயே திட்டமிட்டால், எந்த வயதில் வேண்டுமானாலும் ஜாலியாக ஓய்வு பெறுவதை அறிவிக்கலாம்!

தோனிக்குள் ஒரு பிசினஸ்மேன்!

ர்செல் நிறுவனத்தில் முக்கியப் பொறுப்பு வகித்தவர் சங்கரநாராயணன். ஏர்செல் நிறுவனத்தின் தூதுவராக தோனி சில ஆண்டுகள் இருந்திருக்கிறார். தோனி குறித்து சங்கரநாராயணன் சொன்னதாவது…

39 வயதில் ஓய்வை அறிவித்த தோனி! - எப்படித் திட்டமிட்டார்?

‘‘தோனியிடம் இருக்கும் பிசினஸ்மேனைப் பார்த்து நான் பலமுறை ஆச்சர்யப்பட்டிருக்கிறேன். ஒவ்வொரு கிரிக்கெட் வீரருக்கும் ஒரு ஏஜென்சி இருக்கும். அந்த ஏஜென்சி அந்த வீரரின் பிராண்டை கட்டமைக்கும். ஆனால், தோனி என்னும் பிராண்டை தோனியே கட்டமைத்தார். எம்.பி.ஏ படிக்காமலே அவருக்கு நிர்வாகத் திறன் நிறைய இருந்தது. நான் ஏர்செல்லில் இருந்தபோது ஒரு ஆஃபரை வெளியிட்டோம். ‘150 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்யுங்கள். அன்றைய தினத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் எவ்வளவு ரன் எடுக்கிறதோ அவ்வளவு ரூபாய் டாக் டைம் உங்களுக்குக் கிடைக்கும்’ என்று தோனியை வைத்து ஒரு அறிவிப்பை வெளியிட்டோம்.

‘என்ன இப்படி அறிவிக்கிறீர்கள். ஒருவேளை நாங்கள் 200 ரன்களுக்கு மேல் எடுத்துவிட்டால் உங்களுக்கு நஷ்டம் வராதா?’ எனத் தோனி என்னிடம் கேட்டார். அவர் கேட்ட கேள்வி எனக்கே ஆச்சர்யமாக இருந்தது. அவருக்குள் இருக்கும் பிசினஸ்மேனைப் பார்த்து வியந்துபோனேன்’’ என்று சொல்லியுள்ளார்.

நன்றி: நாணயம் விகடன்