கோவிட்-19 தொற்றுநோயின் பாதிப்பு குறித்த பயம் பெருமளவில் குறைந் தாலும், சமூக இடை வெளியைக் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயம் இருப்பதால், முதலீட்டு உலகின் பெரும்பாலான நிகழ்ச்சிகள் இணையதளத்திலே நடக்கின்றன. போர்ட்ஃபோலியோ மேனேஜ் மென்ட் (PMS) பிரிவில் செயல்பட்டு வரும் பி.எம்.எஸ் பஜார் நிறுவனம் கடந்த மூன்று ஆண்டுகளாக நடத்திவரும் முதலீட்டுக் கருத்தரங்கை கடந்த வாரம் ஆன்லைனில் நடத்தியது. `The New normal of alternative Investments’ என்னும் தலைப்பில் இரு நாள்கள் நடந்த இந்தக் கருத்தரங்கில் பி.எம்.எஸ் மற்றும் மாற்று முதலீட்டுப் பிரிவில் உள்ள பல நிறுவனங்களின் தலைவர்கள் பேசினார்கள்.
பங்குச் சந்தை ஏன் உயர்கிறது?
முதல் நாள் அமர்வில் சர்வதேச பிரபலான மார்க் மொபியஸ் கலந்து கொண்டார். ‘ஐ தாட்’ நிறுவனத்தின் ஷியாம் சேகர் இவருடன் உரை யாடினார். இந்த உரையாடலில் மார்க் மோபியஸ் கூறியதாவது.
‘‘சர்வதேச அளவில் தற்போது பேசிவ் ஃபண்டுகள் அதிகம் பிரபலம் அடைந்துள்ளன. இ.டி.எஃப் மற்றும் இண்டெக்ஸ் ஃபண்டுகள் அதிக முதலீட்டாளர்களைக் கவர்ந்து வருகின்றன. இதற்கு முக்கியமான காரணம், இந்த ஃபண்டுகளின் செலவு விகிதம் மிகவும் குறைவு. சில ஆக்டிவ் ஃபண்டுகளில் 3% வரை செலவு இருக்கிறது. இதைத் தாண்டி வருமானம் கொடுக்க வேண்டிய கட்டாயம் ஃபண்ட் மேனேஜர்களுக்கு இருக்கிறது. இருந்தாலும் ஆக்டிவ் ஃபண்டுகளுக்கான தேவை மற்றும் வளர்ச்சி இருந்துகொண்டுதான் இருக்கும். அதே சமயம், பேசிவ் ஃபண்டுகள் சீராக வளர்ச்சியடையும்.
தற்போது சர்வதேச அளவில் வளர்ச்சியடைந்த பல நாடுகளில் வட்டி விகிதம் மிகவும் குறைவாக இருக்கிறது. அமெரிக்கா, ஐரோப்பாவில் சில நாடுகள் மற்றும் ஜப்பானில் வளர்ச்சி விகிதம் குறைவு. அதனால் இந்த நாடுகளில் உள்ள முதலீடுகள் வளர்ச்சி அடைந்த நாடுகளுக்கு வருகின்றன. குறிப்பாக, போர்ச்சுகல் நாட்டில் நெகட்டிவ் வட்டி விகிதம் இருக்கிறது. இந்த நாடுகளிலிருந்து முதலீடுகள் வளரும் நாடுகளின் பங்குச் சந்தைக்கு வருவதால், இந்தச் சந்தைகள் உயர்ந்து வருகின்றன.
பங்குச் சந்தைகள் மட்டுமல்லாமல், ரியல் எஸ்டேட், தங்கம் உள்ளிட்ட முக்கிய கமாடிட்டிகளும் விலை உயர்ந்து வருகின்றன. ஆனால், கச்சா எண்ணெய்யைப் பொறுத்தவரை, ஏற்ற இறக்கமான சூழலே இருக்கும் என நினைக்கிறேன். சர்வதேசப் பணப் புழக்கத்தை இந்தியா நன்றாகப் பயன் படுத்திக்கொள்வது அவசியம். சர்வதேச அளவிலான பணத்தை இந்தியாவின் கட்டுமானத் தேவைக்குப் பயன் படுத்திக்கொள்ள முடியும். 50 ஆண்டு காலப் பத்திரங்கள் அல்லது அதற்கும் அதிக காலத்துக்கான பத்திரங்கள் மூலம் குறைந்த வட்டியில் நிதியைப் பெற்று இந்தியாவின் கட்டுமானத் தேவையைப் பூர்த்தி செய்ய முடியும்.
இந்தியாவுக்கு சாதகமான ஆண்டுகள்..!
கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவில் பல முக்கியமான மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன. ஆனால், செய்வதற்கு இன்னும் பல பணிகள் உள்ளன. இன்னும் போதுமான அளவுக்குத் தனியார்மயம் நடக்கவில்லை. அதேபோல, இன்னும் தொழில் முதலீடு தொடர்பான பல விதிமுறைகளைத் தளர்த்த வேண்டியிருக்கிறது. இனிவரும் ஆண்டுகள் இந்தியாவுக்கு சாதகமான ஆண்டுகளாக இருக்கும். இந்தியாவின் மக்கள் தொகை, குறிப்பாக, இளம் வயதினர் அதிகம் இருப்பது, பல மொழிகள் கலாசாரம் ஆகியவை இந்தியாவுக்குப் பலமாக இருக்கின்றன.
முதலீட்டாளர்களுக்கு நான் சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்றுதான். நிறைய படியுங்கள் என்பதுதான் அது. சந்தையை மட்டுமல்லாமல், பொருளாதாரம், கலாசாரம் என அனைத்து தரப்பிலும் படிப்பதால், முதலீட்டைத் திறம்பட செய்ய முடியும்’’ எனக் குறிப்பிட்டார் மார்க் மொபியஸ்.
வெளியேறிய ரூ.26,000 கோடி..!
இந்தக் கருத்தரங்கில் வொயில் ஓக் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஆஸிஷ் சோமையா பேசியபோது, ‘‘இதுவரை மியூச்சுவல் ஃபண்டு களில் முதலீட்டாளர்களின் கவனம் இருந்தது. தற்போது அந்த கவனம் போர்ட்ஃபோலியோ மேனேஜ்மென்ட் சர்வீசஸ் மற்றும் ஆல்டர்நேட்டிவ் இன்வெஸ்ட்மென்ட் ஃபண்ட் புராடக்ட்டுகள் மீது திரும்பி யிருக்கிறது. கடந்த மார்ச் மாதம் மியூச்சுவல் ஃபண்டுகளில் இருந்து 26,000 கோடி வெளியேறியிருக்கிறது. ஒரு ஃபண்டிலிருந்து ரூ.500 கோடி வெளியேறினால், கையில் இருக்கும் பங்குகளை விற்றுதான் முதலீட்டாளர்களுக்குப் பணம் கொடுக்க வேண்டி யிருக்கும். இதனால் அந்த ஃபண்டின் வருமானம் குறைகிறது. ஆனால், பி.எம்.எஸ்ஸில் ஒருவருடைய முதலீட்டு முடிவு மற்றவரைப் பாதிப்பதில்லை’’ என்றார்.
நஷ்டம் தரும் பிஹேவியர் ரிஸ்க்..!
நம் முதலீடு அறிவுப் பூர்வமாக இருக்க வேண்டுமா அல்லது உணர்வுபூர்வமாக இருக்க வேண்டுமா என குவெஸ்ட் (Quest) நிறுவனத்தின் முதன்மை முதலீட்டு அதிகாரி அனிருத்தா சர்கார் பேசினார். ‘‘லாபம் கிடைக்கும் வரை மூளை சொல்வதைக் கேட்டுத்தான் முதலீட்டைச் செய்கிறோம். நஷ்டம் ஏற்பட்டால் அந்த நஷ்டத்தை ஈடுசெய்வதற்காக எமோஷனலாக முடிவெடுக்கத் தொடங்குகிறோம். அந்த எமேஷனால் முடிவு மேலும் நஷ்டத்தைக் கொடுக்கிறது. அதேபோல, நாம் லாபத்துக்காக முதலீடு செய்கிறோம். நாம் நினைத்த லாபம் கிடைத்தால்கூட நாம் திருப்தி அடைவதில்லை. அதைத் தாண்டி என்ன கிடைக்கும் என யோசித்து இருக்கும் லாபத்தையும் இழக்கிறோம்.
சந்தையில் பலவித ரிஸ்க் இருக்கிறது என்பது முதலீட்டாளர்களுக்குப் புரியும். ஆனால், பிஹேவியர் ரிஸ்க் என்று ஒன்று இருப்பதை மறந்துவிடுவார்கள். கால்பந்து விளையாட்டில் எவ்வளவு கோல் அடிக்கிறோம் என்பது முக்கியம். அதேபோல, எதிரணியின் எத்தனை கோல்களைத் தடுக்கிறோம் என்பதும் முக்கியம். சில நல்ல முதலீடுகளை நாம் செய்திருப்போம். ஆனால், தவறான ஒரு முதலீடு மொத்த லாபத்தையும் அழித்துவிடும். இதில் நம்முடைய பிஹேவியர் உள்ளது என்பதை முதலீட்டாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
உதாரணத்துக்கு, 100 ரூபாய்க்கு ஒரு பங்கை வாங்குகிறீர்கள். 150 ரூபாய் என்பது இலக்கு. ஆனால், இந்த பங்கு 180 ரூபாய் வரை செல்கிறது. அதன் பிறகு 160 ரூபாய்க்கு சரிகிறது எனில், விற்க மனம் இருக்காது. 150 ரூபாயை விட அதிக லாபம் என சிந்தனை இருக்காது. 180 ரூபாயைவிடக் குறைவு என்றே தோன்றும்’’ என சர்கார் பேசினார்.
இந்தக் கருத்தரங்கில் மார்செல்ஸ் நிறுவனத்தின் சௌரப் முகர்ஜி, கேபிட்டல் மைண்ட் நிறுவனத்தின் தீபக் ஷெனாய், எஸ்.பி.ஐ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் ஸ்ரீனிவாசன், ஐ.ஐ.எஃப்.எல் நிறுவனத்தின் அனுப் மகேஸ்வரி, மோதிலால் ஆஸ்வால் நிறுவனத்தின் தலைவர் ராம்தேவ் அகர்வால், ஏ.எஸ்.கே நிறுவனத்தின் பரத் ஷா, ஹிலியஸ் கேபிடல் நிறுவனத்தின் சமீர் அரோரா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு உரையாற்றினார்கள்.
ஆன்லைனில் இந்தக் கூட்டம் நடந்தாலும் உலகம் முழுக்க பலரும் கலந்துகொண்டது சிறப்பு!
மூன்று ஆண்டுகளாக..!
‘‘மூன்றாம் ஆண்டாக இந்த மாநாட்டை நாங்கள் நடத்துகிறோம். கடந்த ஆண்டு மும்பையில் நடத்தினோம். இந்த ஆண்டு இணையம் வழி நடத்தினோம். இதுபோன்ற இணைய நிகழ்வுகள் பெரும்பாலும் ஒருவழிப் பாதையாகவே இருக்கும். வாடிக்கையாளர்கள் எந்தப் பங்களிப்பும் செய்ய முடியாது. ஆனால், முதலீட்டாளர்களை இணைக்கத் திட்டமிட்டோம். திட்டமிடப்பட்ட நிகழ்வு அல்லாமல் ஃபண்ட் மேனேஜர் கனெக்ட் என்னும் புதிய நிகழ்ச்சியைத் திட்டமிட்டோம். தேர்ந்தெடுத்த ஃபண்ட் மேனேஜர்களிடம் முதலீட்டாளர்கள் நேரடியாக உரையாடி சந்தேகத்தைக் களைவதற்கு ஏற்பாடு செய்திருந்தோம். இதனால் முதலீடு குறித்த அறிவை வளர்த்துகொள்வது மட்டுமல்லாமல், தனிப்பட்ட முறையில் தங்களுக்கு இருக்கும் சந்தேகங்களையும் முதலீட்டாளர்கள் தெரிந்துகொண்டார்கள்’’ என்றார் பி.எம்.எஸ் பஜார் நிறுவனத்தின் இயக்குநர் டேனியல்.
Recent Comments