தீபாவளி நன்நாளில் புதிதாக முதலீட்டைத் தொடங்கினால், அது செழித்து வளரும் என்பது நம்பிக்கை. இந்த நம்பிக்கையை ஊக்குவிக்கிற மாதிரி பங்குச் சந்தைகள் சிறப்பு வர்த்தகத்தைச் சில மணி நேரங்களுக்கு நடத்தும். இந்த ஆண்டு நவம்பர் 14-ம் தேதி அன்று மாலை 6.15 மணிமுதல் ஒரு மணி நேரத்துக்கு இந்த முகூர்த் டிரேடிங் நடக்கிறது. 1957-ம் ஆண்டு முதல் பி.எஸ்.இ-யிலும் 1992-ம் ஆண்டு முதல் என்.எஸ்.இ-யிலும் இந்தச் சிறப்பு வர்த்தகம் நடந்து வருகிறது. இந்த ஆண்டில் நடக்கும் சிறப்பு வர்த்தகத்தில் பங்குகளை வாங்குவதற்கு முன் என்னென்ன விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும் என பங்குச் சந்தை நிபுணர்கள் சிலரிடம் கேட்டோம். நாம் முதலில் பேசியது வ.நாகப்பனிடம்…
முதலீட்டாளர்களுக்கு லாபம்தான் முக்கியம்..!
‘‘இது ஒரு நல்ல நாள். புதிதாகக் கணக்கு தொடங்கும் நாள் என்பதால், இந்த நாளில் ஒரு முதலீட்டையோ, ஏற்கெனவே செய்த முதலீட்டில் லாபத்தையோ வெளியே எடுப்பார்கள். இது முதலீட்டாளர்களின் நம்பிக்கை சார்ந்த தனிப்பட்ட விஷயம். ஆனால், தற்போது சூழல் மாறிவருகிறது. முதலீட்டாளர்களுக்கு லாபம் மட்டுமே முக்கியம். குறைந்த விலையில் வாங்கி அதிக விலையில் விற்க வேண்டும் என்பதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் தவிர, இதர விஷயங்களில் கவனம் செலுத்தக் கூடாது.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கிறிஸ்துமஸ் காலத்தில் வெளிநாட்டு் முதலீட்டாளர்கள் எஃப்.ஐ.ஐ-க்கள் வெளியேறிவிடுவார்கள். அதனால் அப்போது பங்குச் சந்தை சரியும் என்னும் நம்பிக்கை இருந்தது. இப்போதெல்லாம் இதுபோன்ற நம்பிக்கைகளுக்கு இடமில்லை. சந்தை எப்போது டைனமிக்காக இயங்கி வருகிறது என்பதை மனதில் கொண்டு செயல்பட வேண்டும். இந்த நல்ல நாளில் முதலீட்டைத் தொடங்க வேண்டும் என நினைப்பதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால், முதலீட்டாளர்களுக்கு லாபம் மட்டுமே குறிக்கோளாக இருக்க வேண்டும்” என நாகப்பன் கூறினார்.
சென்டிமென்ட் தினம்..!
‘‘சென்டிமென்ட் அடிப்படையில் முதலீட்டாளர்கள் கணக்கைத் தொடங்கு வார்கள். அதனால் பெரிய அளவுக்கு வால்யூம் இருக்காது. பெரும்பாலான சமயங்களில் முகூர்த் வர்த்தகத் தினத்தன்று பங்குச் சந்தைகள் சிறிதளவு உயர்ந்தே முடியும்’’ என ஆலோசகர் ரெஜிதாமஸ் தன்னுடைய கருத்தைக் கூறத் தொடங்கினார்.
‘‘ஏழு மாதங்களுக்கு முன் லாக்டவுன் தொடங்கிய சமயத்திலிருந்து பங்குச் சந்தை 45% அளவுக்கு உயர்ந்திருக்கிறது. இதே அளவுக்கான ஏற்றம் இனியும் இருக்குமா என்பது சந்தேகமே. சந்தையில் சில பாதகங்கள் இருந்தாலும், சில துறைகளில் ஏற்றத்துகான வாய்ப்புகள் உள்ளன. பார்மா, ஐ.டி மற்றும் கெமிக்கல் துறைகளில் ஏற்றம் இருக்கக்கூடும். அதேபோல, நுகர்வுப் பிரிவில் உள்ள பங்குகள் உயரலாம். ஆன்லைன் வர்த்தகம் சார்ந்து இருக்கும் துறைகளில் உள்ள பங்குகள் உயர்வதற்கு நிறைய வாய்ப்புண்டு. அடுத்த தீபாவளிக்குள் நிஃப்டி 13500 புள்ளிகள் வரைகூட உயரக்கூடும். இருந்தாலும் கொரோனாவின் இரண்டாம் அலை எப்படி இருக்கும் என்பதைப் பொறுத்தே இந்த ஏற்றம் இருக்கும்.
கொரோனா தாக்கம் அதிகமாக இருந்தால், நிறுவனங்களின் செயல்பாடு பாதிப்படைந்து, லாபம் குறைவதற்கான வாய்ப்பும் இருப்பதை நாம் கவனிக்கத் தவறக் கூடாது. இருந்தாலும் அடுத்த ஓர் ஆண்டுக்கு சந்தை ஓர் எல்லைக்குள் வர்த்தகமாகும் வாய்ப்பு இருக்கிறது. சந்தை சரிந்தால் குறைந்தபட்சம் 11500 புள்ளிகள் வரையும், உயர்ந்தால் அதிகபட்சம் 13500 என்னும் எல்லைக்குள்ளும் வர்த்தகமாகலாம் என்பது என் கணிப்பு’’ எனக் கூறினார்.
பங்குச் சந்தை ஒரு ரேஞ்ச்பவுண்டிலே வர்த்தகமாகும்!
இது தொடர்பாக ஐ.டி.பி.ஐ கேப்பிடல் நிறுவனத்தின் ஈக்விட்டி ரிசர்ச் பிரிவு தலைவர் ஏ.கே.பிரபாகரிடம் பேசினோம்.
‘‘முகூர்த் டிரேடிங் முதலீட்டாளர்களுக்கு ஒரு முக்கியமான நாள். பங்குச் சந்தை இறங்குவதற்கான காரணங்கள் நிறைய இருந்தாலும் சர்வதேச அளவில் உள்ள முதலீடுகள் கணிசமாக இந்தியாவுக்கு வந்து கொண்டிருக்கிறது. இதனால் பங்குச் சந்தைகள் தொடர்ந்து உயர்ந்துவருகின்றன.
கொரோனா தடுப்பூசி வருவதற்கு வாய்ப்புகள் இருந்தாலும், நாட்டின் பெரும்பான்மையான மக்களுக்குக் கொண்டு செல்வதற்கு பல மாதங்கள் ஆகும். அதனால் மருந்து கண்டு பிடித்ததை என்னால் சாதகமாகப் பார்க்க முடியவில்லை. தற்போதைய சந்தை மதிப்பீடுகள் மிகவும் அதிகமாகவே உள்ளன. நிறுவனங்களின் லாப வரம்புக்கும் பங்குகளின் விலைக்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது. வரும் காலாண்டுகளில் நிறுவனத்தின் லாபம் உயரவில்லை என்றால், சம்பந்தப்பட்ட பங்குகள் சரியும் வாய்ப்பு அதிகம்.
சீனாவிலிருந்து இந்தியா நோக்கி வரும் தொழில்களில் உள்ள பங்கு களுக்கு அடுத்த ஓர் ஆண்டுக்கு வாய்ப்பிருக்கிறது. உதாரணத்துக்கு, இதுவரை ஏசி-க்கான மூலப்பொருள்கள் சீனாவில் தயாரிக்கப்பட்டு இந்தியாவில் அசெம்பிள் செய்யப்பட்டன. ஆனால், இனி இந்தியாவிலே தயாரிக்க முடிவெடுக்கப் பட்டுள்ளது. அதனால் ஏசி மற்றும் அதற்கேற்ற உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் உயர வாய்ப்புள்ளன.
சந்தையில் ஏற்றம் இருந்தாலும் குறிப்பிட்ட எல்லை வரைக்குமே இருக்கும். சரிவு இருந்தாலும் குறிப்பிட்ட அளவுக்கு மட்டுமே இருக்கும். சர்வதேச அளவில் முதலீட்டுக்குப் பெரிய வாய்ப்புகள் இல்லாமல் இருப்பதால், இந்தியப் பங்குச் சந்தைக்கு முதலீடு வந்து கொண்டிருக்கிறது. அதனால் பங்குச் சந்தை ஒரு ரேஞ்ச்பவுண்டிலே வர்த்தகமாகும்’’ என ஏ.கே.பிரபாகர் நம்மிடம் கூறினார்.
இந்த நல்ல நாளில் வர்த்தகத்தைத் தொடங்கலாம். ஆனால், அது சிறிய அளவில் மட்டுமே இருந்தால் போதும். பெரிய அளவு முதலீட்டைச் செய்ய இன்னும் ஆழமாக யோசித்து இறங்குவது நல்லது என்பதே ஆலோசகர்களின் கருத்து.
நன்றி : நாணயம் விகடன்
Recent Comments