மார்ச் மாதம் மூன்றாம் வாரத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போதிருந்தே தொழில்துறையினர் கடும் சிக்கல்களைச் சந்தித்து வருகிறார்கள். குறிப்பாக, அடிக்கடி முக்கியச் செய்திகளில் இடம்பெறும் நிறுவனமாக ரிலையன்ஸ் இருந்துவருகிறது.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் வெளிநாட்டு நிறுவனங்கள் தொடர்ந்து முதலீடு செய்துவருவது குறித்து இந்தியா முழுக்கப் பரபரப்பாகப் பேசப்பட்டுவரும் நிலையில், ஃப்யூச்சர் குரூப் நிறுவனங்களை வாங்க ரிலையன்ஸ் குழுமம் திட்டமிட்டிருப்பதாக வெளியான செய்தி பரபரப்பை மேலும் அதிகமாக்கியிருக்கிறது.

ஃப்யூச்சர் குரூப்... ரிலையன்ஸ் வாங்குகிறதா? - பின்னணித் தகவல்கள்

ரீடெயில் துறையில் நீண்டகாலமாகச் செயல்பட்டுவருகிறது கிஷோர் பியானியின் ஃப்யூச்சர் குழுமம். ஆனால், ரிலையன்ஸ் ரீடெயில் தொடங்கப்பட்ட பிறகு ஃப்யூச்சர் குழுமம் பின்தங்க ஆரம்பித்தது. தற்போதைய நிலையில், 400 நகரங்களில் 1,500 ரீடெயில் (1.6 கோடி சதுர அடி பரப்பளவில்) ஸ்டோர்களை ஃப்யூச்சர் குழுமம் நடத்துகிறது. இந்தக் குழுமத்தின் பெருமளவு வருமானம் பிக் பஜார் மூலமாகக் கிடைக்கிறது. ஆனால், ரிலையன்ஸ் ரீடெயில் நிறுவனம் 11,784 கடைகளை நடத்துகிறது. இந்தக் கடைகளின் பரப்பளவு 2.87 கோடி சதுர அடிகள்.

அதிகரித்த கடன்… அடமானத்தில் பங்குகள்..!

ஃப்யூச்சர் குழுமம் ஆறு பட்டியலிடப்பட்ட நிறுவனங்களைக் கொண்டது. இந்த ஆறு நிறுவனங்களின் கடன் கடந்த செப்டம்பரில் ரூ.12,778 கோடியாக அதிகரித்திருக்கிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் ரூ.11,463 கோடியாக மட்டுமே இருந்தது. கடன் அதிகமாக இருப்பதால், தரமதிப்பீட்டு நிறுவனங்கள் ஃப்யூச்சர் குழுமத்தை `CCC+’ என்னும் நிலைக்குக் குறைத்தது. ஏற்கெனவே நிதிச் சிக்கலில் இருந்த இந்த நிறுவனத்தின் பங்குகள் சரிந்த நிலையில், தரமதிப்பீட்டுச் சரிவு மேலும் பாதிப்பை உண்டாக்கியது.

ஃப்யூச்சர் குரூப்... ரிலையன்ஸ் வாங்குகிறதா? - பின்னணித் தகவல்கள்

ஃப்யூச்சர் குழுமத்தில் புரொமோட்டர் மற்றும் அவரது குடும்பத்தின் பங்கு 40.31% இருந்தது. இதில் 75% பங்குகள் அடமானத்தில் உள்ளன. பங்குகள் விலைச் சரிவைத் தொடர்ந்து அடமானத்தில் இருக்கும் பங்குகளை விற்கும் நடவடிக்கையை நிதி நிறுவனங்கள் எடுத்தன.

இதைத் தொடர்ந்து நீதிமன்றத்துக்குச் சென்ற பியானி, பங்குகளை விற்பதற்குத் தற்காலத் தடை வாங்கினார். கடும் நிதிச் சிக்கல் இருப்பதால், வங்கிகளுக்குக் கடன் தவணை செலுத்த முடியாத சூழல் இருந்தது. இந்த நிலையில் கோவிட்-19 சிக்கல் எழவே, `அனைத்துக் கடன் தவணைகளுக்கும் ஆகஸ்ட் மாதம் வரை கடன் தவணையைச் செலுத்த தேவையில்லை’ என்ற அறிவிப்பு பியானிக்குச் சற்று நிம்மதியைத் தந்தது. அதிர்ஷ்டவசமாகக் கிடைத்த இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, நிறுவனத்தை விற்றுக் கடனை அடைக்கும் முயற்சியில் இறங்கினார் பியானி.

இதே போன்ற கடன் நெருக்கடி எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஃப்யூச்சர் குழுமத்துக்கு வந்தது. அப்போது அதன் அங்கமான பான்டலூனை ஆதித்ய பிர்லா குழுமத்துக்கும், நிதிச் சேவைப் பிரிவை பிரைவேட் ஈக்விட்டி நிறுவனமான வார்பர்க் பின்கஸுக்கும் விற்றார்.

வாங்கப்போவது யார்?

ஃப்யூச்சர் நிறுவனத்தை விரைவில் விற்க வேண்டியிருப்பதால், பல நிறுவனங்கள் அதை வாங்க முயல்கின்றன. ஆனால், ரிலையன்ஸ் ரீடெயில் நிறுவனத்துடனான டீல் முடிவடைந்ததாகச் செய்திகள் வெளியாகின. இருந்தபோதிலும் அது இன்னும் இறுதி செய்யப்படவில்லை.

ஃப்யூச்சர் குரூப்... ரிலையன்ஸ் வாங்குகிறதா? - பின்னணித் தகவல்கள்

ஃப்யூச்சர் குழுமத்தில் அமேஸான் நிறுவனம் மறைமுகமாக 3.2% பங்குகளை வைத்திருக்கிறது. தவிர, `அமேஸான் மற்றும் பிரைவேட் ஈக்விட்டி நிறுவனமான சமரா கேபிட்டல் இணைந்து வாங்கும் பட்சத்தில் ஃப்யூச்சர் குழுமத்தில் கணிசமான பங்குகளை நாம் வைத்துக்கொள்ள முடியும். ஆனால், ஃப்யூச்சர் குரூப்பை ரிலையன்ஸ் வாங்கும்பட்சத்தில் மொத்தப் பங்குகளையும் விற்க வேண்டியிருக்கும்’ என கிஷோர் பியானி கருதுவதாகவும் தெரிகிறது. தவிர, பிரேம்ஜி இன்வெஸ்ட் நிறுவனத்துடனும் பியானி பேச்சுவார்த்தை நடத்துவதாகச் சொல்கிறார்கள். பிரேம்ஜி இன்வெஸ்ட், ஃப்யூச்சர் குழுமத்தில் 6% பங்குகளை வைத்திருக்கிறது.

ரிலையன்ஸ் ஆர்வம் ஏன்?

ரிலையன்ஸ் நிறுவனம் ஃப்யூச்சர் குழுமத்தை வாங்குவதற்குக் காரணம் ரீடெயில் சந்தைதான்.சமீபத்தில் 200 நகரங்களில் ஜியோமார்ட் தொடங்கப்பட்டது. இதை இந்தியா முழுவதும் கொண்டுசெல்வதற்கும், ரீடெயில் சந்தையைக் கைப்பற்றுவதற்கும் ஃப்யூச்சர் குழுமத்தைக் கைப்பற்றுவது அவசியமாகிறது. ரிலையன்ஸ் நிறுவனம் ஃப்யூச்சர் குழுமத்தை வாங்கும்பட்சத்தில் அதிக எண்ணிக்கையிலான கடைகள் ரிலையன்ஸ் குழுமம் வசம் இருக்கும். தவிர அமேஸான், ஃப்ளிப்கார்ட் நிறுவனங்களுடன் போட்டி போடுவதற்கும் இந்த இணைப்பு பயன்படும்.

அமேஸான் மற்றும் ஃப்ளிப்கார்ட் நிறுவனங்கள் இணையம் மூலம் மட்டுமே செயல்பட்டுவருகின்றன. அமேஸான் ஏற்கெனவே `மோர்’ கடைகளை வாங்கியிருக்கிறது. ஃப்யூச்சர் குழுமத்தையும் வாங்கும்பட்சத்தில் அதிக கடைகள் மூலம் மக்களைச் சென்றடைய முடியும் என்பதால், அமேஸானும் ஃப்யூச்சர் குரூப்பை வாங்க முயன்றுவருகிறது.

இது குறித்து ரீடெயில் துறையின் முன்னோடிகளில் ஒருவரான வைத்தீஸ்வரனிடம் பேசினோம். ‘‘ரீடெயிலைப் பொறுத்தவரை, விற்பனை விலை என்பது இறுதி செய்யப்பட்டது. அரசி, பருப்பு மற்றும் சர்க்கரை விலையை வாடிக்கையாளர்கள் தெரிந்துகொண்டே வருகிறார்கள். அதனால் விற்பனை மூலம் லாபம் ஈட்ட முடியாது. ஆனால், வாங்கும் திறன் இருந்தால், விலையைக் குறைத்து வாங்க முடியும், லாபமீட்ட முடியும். தவிர, ரீடெயில் ஸ்டோர்களை வாங்குவதன் மூலம் சப்ளை செயினை பலப்படுத்த முடியும். (சமீபத்தில் கோவையிலுள்ள கண்ணன் டிபார்ட்மென்ட் ஸ்டோர்களை ரிலையன்ஸ் வாங்கியது நினைவுகூரத்தக்கது). நாடு முழுக்க இருக்கும் வாடிக்கையாளர்களுக்குச் சேவை செய்ய ரிலையன்ஸ் குழுமத்திடம் தற்போது இருக்கும் கடைகள் போதாது. அதனால் கூடுதல் கடைகளை இணைப்பதன் மூலம் சப்ளை செயினை கட்டுக்குள் வைத்திருக்க முடியும், அதிக வாடிக்கையாளர்களுக்குக் குறைந்த நேரத்தில் சேவை வழங்க முடியும் என்பதால் ரிலையன்ஸ் வாங்கத் திட்டமிடுகிறது’’ என்ற கூறினார்.

ஃப்யூச்சர் குரூப்பை ரிலையன்ஸ் வாங்குமா என்பது இன்னும் சில வாரங்களில் தெரிந்துவிடும்!

நன்றி : நாணயம் விகடன்