ஃபியூச்சர் குழுமத்துக்கும் அமேசான் நிறுவனத்துக்கும் இடையேயான பிரச்னை அடுத்தகட்டத்துக்கு சென்றிருக்கிறது. ஃபியூச்சர் குழுமத்தை ரிலையன்ஸ் நிறுவனம் வாங்குவதை எதிர்த்து, கடந்த 25-ம் தேதி டெல்லி உயர் நீதிமன்றத்தில் அமேசான் நிறுவனம் வழக்கு தொடுத்தது. இதில் சிங்கப்பூர் நீதிமன்றம் கொடுத்த உத்தரவை அமல்படுத்த வேண்டும். தவிர, விதிமுறைகளை மீறியதற்காக ஃபியூச்சர் குழுமத்தின் தலைவர் கிஷோர் பியோனி உள்ளிட்ட முக்கிய உயரதிகாரிகளைக் கைது செய்ய வேண்டும் என வழக்கு தொடுத் திருக்கிறது.
ஃபியூச்சர் குழுமம் கடும் நிதி நெருக்கடியில் இருக்கிறது. கொரோனா காலகட்டத்தில் வருமானம் பெருமளவுக்கு பாதிக்கப் பட்டதால் நிறுவனத்தைக் காப்பாற்றவும் கடனை அடைக்கவும், பணியாளர்களின் நலனைப் பாதுகாக்கவும் ஃபியூச்சர் குழுமத்தை விற்க வேண்டிய சூழல் உருவானது. இதற்காக ரிலையன்ஸ் குழுமத்துக்கு ரூ.24,713 கோடிக்கு விற்க கடந்த ஆகஸ்ட் மாதம் முடிவெடுக்கப் பட்டது. ஆனால், ஃபியூச்சர் குழும நிறுவனங்களில் மறைமுகமாக 5% அளவு பங்கை அமேசான் வைத்திருக் கிறது. அதனால் அமேசானின் அனுமதியைப் பெறாமல் ஃபியூச்சர் குழுமம், ரிலையன்ஸுக்கு விற்க முடியாது என்பதுதான் அதன் வாதம்.
ஃபியூச்சர் குழுமத்தை ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு விற்பதற்கு செபி அனுமதி வழங்கியிருக்கிறது. ஆனால், நீதிமன்றத்தில் இருக்கும் வழக்குகளை முடித்த பிறகு, இணைத்துக் கொள்ளலாம் எனத் தெரிவித்திருக்கிறது. இதனிடையே இரு நிறுவனங்களின் இணைப்புக்கு அனுமதி வழங்கக் கூடாது எனப் பலமுறை செபிக்கு அமேசான் விண்ணப்பித்தது. மேலும், சிங்கப்பூர் நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு வரும் வரை காத்திருக்க வேண்டும் என செபிக்கு அமேசான் கோரிக்கை விடுத்தது. ஆனால், செபி, பி.எஸ்.இ, சி.சி.ஐ உள்ளிட்ட அமைப்புகள் அனுமதி வழங்கியிருக்கிறது.
ஜனவரி மாத தொடக்கத்தில் ஃபியூச்சர் குழுமத்தின் தலைவர் கிஷோர் பியானி ஆங்கிலப் பத்திரிகைக்குக் கொடுத்த பேட்டியில், ‘‘ஃபியூச்சர் குழுமம் கடும் நிதி சிக்கலில் இருக்கிறது. இது தொடர் பாகப் பல திட்டங்களுடன் எட்டு முறைக்கு மேல் அமேசான் நிறுவனத் துடன் தொடர்புகொண்டோம். அப்போதெல்லாம் உதவிக்கு வராத அமேசான், தற்போது ரிலையன்ஸ் உடன் இணையும்போது அதைத் தடுப்பதற்கு அத்தனை நடவடிக்கை களையும் எடுக்கிறது.
அமேசான், சமரா கேப்பிடல் ஆகிய நிறுவனங்களுடன் நடத்திய பேச்சு வார்த்தை எந்தவிதமான பலனையும் தரவில்லை. இந்த நிலையில்தான், ரிலையன்ஸ், ஃபியூச்சர் குழுமத்தை மீட்க வந்திருக்கிறது. இதனால் தனிப்பட்ட முறையில் எனக்கு எந்தப் பலனும் இல்லை. 30 ஆண்டுக் காலமாக உருவாக்கிய ரீடெயில் பிசினஸை நான் இழக்க வேண்டியிருக்கும்’’ என பியானி சொல்லியிருந்தார்.
அமேசான் நிறுவனம் இரண்டு ஆண்டுகளுக்கு முன் சீனாவிலிருந்து வெளியேறியது. சீன நிறுவனங்களுடன் போட்டி போட முடியாமல் தோல்வி அடைந்தது. சீனாவுக்கு அடுத்து மிகப் பெரிய சந்தை இந்தியாதான். தற்போது ஃபியூச்சர் குழுமத்தை ரிலையன்ஸ் வாங்கிவிட்டது என்றால், இந்திய ரீடெயில் பிரிவில் ரிலையன்ஸின் தாக்கம் பெரிய அளவில் இருக்கும். அதனால் ஃபியூச்சர் குழுமத்தை ரிலையன்ஸ் வாங்க முடியாத அளவுக்குத் தடைகளைத் தொடர்ந்து அமேசான் உருவாக்கி வருகிறது.
அமேசான் மற்றும் ரிலையன்ஸின் ஈகோ பிரச்னையில் சிக்கி தவியாய்த் தவிக்கிறது ஃபியூச்சர் குழுமம்!
நன்றி : நாணயம் விகடன்
Recent Comments