ரீடெய்ல் துறைக்கு தனி அமைச்சர் வேண்டும்: இந்திய ரீடெய்ல் சங்க சி.இ.ஓ பேட்டி
விவசாயத்துக்கு பிறகு அதிக மக்களுக்கு வேலை வாய்ப்பை கொடுக்கும் துறை ரீடெய்ல் துறை. ‘இந்திய ரீடெய்ல் சங்கத்தின்’ சந்திப்பு சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடந்தது. இதில் கலந்துகொள்வதற்காக அதன் தலைமைச் செயல் அதிகாரி குமார் ராஜகோபாலன் சென்னை வந்திருந்தார். ரீடெய்ல் துறை எதிர்கொள்ளும் சவால்கள், தேவைகள் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து அவரிடம் பேசினோம். அதிலிருந்து.
உங்களை பற்றி..
எனக்கு பூர்விகம் நாகப்பட்டணம் என்றாலும், பிறந்து வளர்ந்தது எல்லாம் மும்பையில். சி.ஏ. முடித்து அங்கு சொந்தமாக நிறுவனம் நடத்தி வந்தேன். இதற்கிடையில் ஷாப்பர்ஸ்டாப் எனும் ரீடெய்ல் நிறுவனம் ஆரம்பித்தார்கள். அங்கு நிதிப் பிரிவுக்கு தலைவராக சென்றேன். அங்கே பல முக்கிய பொறுப்புகள் வகித்தேன். 13 வருடங்கள் அங்கு வேலைபார்த்த பிறகு ஐ.பி.எம் நிறுவனத்தில் இரண்டு வருடங்கள் வேலை பார்த்தேன். 2009-ல் ரீடெய்ல் நிறுவனங்களின் சங்கத்துக்கு பொறுப்பேற்க அழைத்தார்கள்.
எதற்காக இந்த சங்கம்?
இந்த துறையை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்செல்ல வேண்டும் என்றால் முறையான சங்கம் தேவைப்படும். நிறைய விஷயங்கள் தேவைப்படுகின்றன. இந்தியாவில் பல லட்சம் ரீடெய்ல் கடைகள் இருந்தாலும் 900 நிறுவனங்கள் (ஒரு லட்சம் கடைகள்) மட்டுமே எங்களிடம் உறுப்பினராக இருக்கிறார்கள். அதாவது எங்களிடம் உறுப்பினராக இருக்க வேண்டும் என்றால் வாடிக்கையாளர்களுக்கு பில் கொடுப்பவராக இருக்க வேண்டும் என்பது மட்டும்தான் எங்களது நிபந்தனை.
ஆனால் பல நிறுவனங்கள் பில் கொடுப்பதில்லை. இதனால், அடுத்த கட்டத்துக்கு செல்ல முடியாமல் இருக்கிறார்கள். வாடிக்கையாளர்களுக்கு சரியான சேவை கொடுக்க வேண்டும் என்பதற்காக ஆரம்பிக்கப்பட்டது இந்த சங்கம். இதைத் தவிர இன்னும் பல விஷயங்கள் இருக்கின்றன. ஒரு கடை ஆரம்பிக்க வேண்டும் என்றால் பல விதமான லைசென்ஸ் வாங்க வேண்டி இருக்கிறது. உதாரணத்துக்கு 365 நாட்களும் கடை திறக்க வேண்டும் என்றால் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதமான விதிமுறைகள் உள்ளன. இது குறித்து பேச வேண்டும் ரீடெய்ல் துறை என்பது சேவை துறை.
பெண்களுக்கு இயல்பாகவே சேவை எண்ணம் இருக்கும். ஆனால் இரவு எட்டு மணிக்கு மேல் பெண்களை வேலை செய்ய வைக்கக் கூடாது என்ற விதிமுறை இருக்கிறது. ஆனால் 8 மணிக்கு மேல்தான் 20 சதவீத வருமானம் நடக்கிறது.
அரசாங்கத்திடம் நீங்கள் எதிர்பார்ப்பது என்ன?
டெக்ஸ்டைல், ஐ.டி. என ஒவ்வொரு துறைக்கும் ஒரு அமைச்சர் இருக்கிறார். ஆனால் அதிக வேலை வாய்ப்பை கொடுக்கும் இந்த துறைக்கு ஒரு அமைச்சர் இல்லை. இதனால் நாங்கள் பல விதமான அமைச்சகங்களுக்கு சென்று அனுமதி வாங்க வேண்டி இருக்கிறது. இதற்கு தனி அமைச்சர் வேண்டும். அனுமதிக்கு சிங்கிள் விண்டோ சிஸ்டம் கொண்டு வரவேண்டும்.
அடுத்து ரீடெய்லை ஒரு துறையாக அனுமதிக்க வேண்டும். துறையாக அனுமதிக்காததால் வங்கிக் கடன் கிடைக்காமல், வெளியிடங்களில் அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டி இருக்கிறது.
துறை அங்கீகாரம் கிடைக்காததற்கு காரணம் என்ன?
ரீடெய்ல் இதுவரை மாநில பட்டியலில் இருந்து வருகிறது. இதனால்தான் ரீடெய்ல் உள்ளிட்ட துறைகளில் முடிவெடுக்க முடியவில்லை. மேலும் மத்திய அரசு தனியாக ஒரு அமைச்சரை அறிவிக்காததால் மாநில அரசும் இன்னும் அறிவிக்கவில்லை.
சிறுவணிகர்களின் பிரச்சினை என்னவாக இருக்கிறது?
சமீபத்தில் சில வணிகர்களை சந்தித்து அவர்களின் பிரச்சினை குறித்து கேட்டோம். அந்நிய முதலீடு என்றுதான் நீங்கள் எதிர்பார்ப்பீர்கள். ஆனால் அவர்களுக்கான பிரச்சினை கடன் கிடைக்காததுதான். மேலும் அதிக லைசென்ஸ் வாங்க வேண்டி இருப்பது. இதைவிட வாடகை பிரச்சினை பெரியதாக இருக்கிறது. மேலும், பொருட்கள் தயாரிப்பில் குறை இருந்தாலும் வணிகர்களை கைது செய்யும் நடவடிக்கை இருக்கிறது.
வாடகை பிரச்சினையை எப்படி சரி செய்ய முடியும் என்று நினைக்கிறீர்கள்?
நகர்ப்புறங்களை மேம்படுத்தும்போது, பல விஷயங்களுக்கு இடம் ஒதுக்குகிறீர்கள். கூடவே கடைகளுக்கும் இடம் ஒதுக்குங்கள். வீடு மாறும்போது கடை உள்ளிட்ட வசதிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். அதனால் புதிய அடுக்குமாடி குடியிருப்பு நகர்ப்புற மேம்பாடு போன்றவற்றில் எங்களுக்கு கணிசமான இடம்கொடுங்கள் என்று கேட்டிருக்கிறோம்.
உங்கள் சங்கம் வேறு என்ன செய்கிறது?
அரசிடம் கோரிக்கை வைப்பது மட்டுமல்லாமல், எங்களுக்குள்ளே நாங்கள் பேசிக்கொள்கிறோம். மனிதவளத்தை எப்படி மேம்படுத்துவது, டெக்னாலஜியை எப்படி பயன்படுத் துவது என்பதை நாங்கள் சந்தித்து பேசிக்கொள்கிறோம்.
கண்டிப்பாக அந்நிய முதலீடு வேண்டும் என்றுதான் நீங்கள் சொல்லுவீர்கள்? என்ன காரணத்துக்காக அந்நிய முதலீடு தேவை?
இதற்கு முன்பு அந்நிய முதலீடா, இல்லை துறை அங்கீகாரமா என்று கேட்டால் துறை அங்கீகாரம்தான் முக்கியம். அடுத்துதான் அந்நிய முதலீடு. அந்நிய முதலீடு வரும்போது பொருட்கள் சந்தைக்கு வரும். மேலும் டெக்னாலஜிகள் நமக்கு கிடைக்கும். அதாவது பொருட்கள் தயாரிப்பில் ஆரம்பித்து வாடிக்கையாளார் கையில் சேரும்வரை தொழில் நுட்பம் மூலம் அவற்றை மேம்படுத்த முடியும். இவை நமக்கு கிடைக்கும் பலன்.
இதுபோல வாடிக்கையாளர் சேவை உள்ளிட்ட பல விஷயங்களை மேம்படுத்த முடியும். இப்போதே அமேசான் மூலம் பொருட்கள் வாங்க முடிகிற சூழ்நிலை இருக்கிறது. மேலும் வங்கி, இன்ஷூரன்ஸ் போன்ற துறைகளில் அந்நிய முதலீடு வரும்போது இது போன்ற ஒரு சிக்கல்தான் இருந்தது. ஆனால் ஒன்றும் நடக்கவில்லையே.
ஆன்லைன் வர்த்தகம் அதிகரித்து வருகிறதே?
ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்குவது அதிகமாகி வருகிறது. மறுக்க முடியாது. ஆனால் இதனால் காலங்காலமாக இருக்கும் சில்லறை வர்த்தகம் பாதிக்கப்படாது. இங்கிலாந்து வளர்ந்த நாடாக இருந்தாலும் 15 சதவீதம்தான் ஆன்லைன் வர்த்தகம் நடக்கிறது. இருந்தாலும் இந்திய சில்லறை நிறுவனங்கள் ஆன்லைன் சேவை மூலம் தங்களை விரிவுபடுத்திக் கொள்வது நல்லது.
நன்றி ‘தி இந்து
Recent Comments