டெக்னாலஜி நிறுவனங்கள் மட்டும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அல்ல. அனைத்து நிறுவனங்களையும் `டை’ அமைப்புக்குள் வரவேற்பதாக `டை’ சென்னை அமைப் பின் தலைவர் சங்கர் தெரிவித்தார். `டை’ அமைப்பின் செயல்பாடுகள், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து சங்கர் நம்மிடம் கூறிய தாவது:

`டை’ அமைப்பில் டெக்னாலஜி நிறுவனங்கள் மட்டுமே அதிகமாக இருக்கின்றனவே?

நாங்கள் அப்படி விரும்பவில்லை. ஆனால் அப்படி நடந்துவிட்டது. விவசாயம், உற்பத்தி உள்ளிட்ட பல துறை நிறுவனங்களையும் எங்களுடன் இணைப்பதற்கான பணிகளைச் செய்து வருகிறோம். தொழில்முனைவோர்களுக்கு உதவுதற்குதான் டை. ஆனால் டெக்னாலஜி பிரிவில் உதவுவதற்கும் ஆட்கள், பெரிய நிறுவனங்கள் இருக்கிறார்கள். டெக்னாலஜி பிரிவில் தேவை இருப்பவர்களும் அதிகமாக இருப்பதால் `டை’ சென்னை டெக்னாலஜி பிரிவுக்கான அமைப்பு என்னும் தோற்றம் உருவாகி இருக்கிறது.

சில தொழில்முனைவோர்களிடம் உரையாடி இருக்கிறேன். அவர்களி டம் `டை’ என்பது எலைட் தொழில் முனைவோர்களுக்கான அமைப்பு போல தோன்றுகிறது. அதனால் அங்கு செல்வதில்லை என்று கூறினார்கள். அப்படியா?

டெக்னாலஜி நிறுவனங்கள் அதிகமாக இருக்கிறதா என்று கேட்டீர்கள், அதில் உண்மை இருந்தது. அந்த கருத்தை ஏற்றுக்கொண்டேன். ஆனால் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆரம்பகட்ட தொழில்முனைவோர்களை ஊக்குவிப்பதற்காக உருவாக்கப்பட்டதுதான் `டை’. சில தொழில்முனைவோர்களுக்கு தயக்கங்கள் இருக்கலாம். தயக்கத்தை உடைப்பதற்கும் நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதற்காக சிறு நகரங்களுக்கு சென்று அவர்களுடன் உரையாடலை தொடங்கி இருக்கிறோம்.

`டை ரீச்’ என்னும் புதிய முயற்சியை தொடங்கி இருக்கிறோம். யெஸ் என்னும் அமைப்பு மூலம் மதுரை மற்றும் சேலம் ஆகிய நகரங்களில் இந்த நிகழ்ச்சியை நடத்தி இருக்கிறோம். மேலும் சில நகரங்களில் நடத்த திட்டமிட்டிருக்கிறோம். இதன் மூலம் ஒவ்வொரு துறை சார்ந்த நிபுணர்களை சந்தித்து உரையாடும் வாய்ப்பு சிறு நகரங்களில் உள்ள தொழில்முனைவோர்களுக்கு கிடைக்கும். டெக்னாலஜி மட்டுமே ஸ்டார்ட் அப் அல்ல. டெக்னாலஜி என்பது ஆரம்பிக்கும்போது மட்டும்தான். நிதி திரட்டுவது, விரிவக்கம் செய்வது உள்ளிட்டவை அனைத்து ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கும் ஒன்றுதான். யார் தொழில் தொடங்கினாலும் அவர் தொழில்முனைவோர் தான்.

பொதுவாக ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் செய்யும் தவறுகள் என்ன?

ஒரு நிறுவனத்தை ஏன் தொடங்குகிறோம், எதற்காக தொடங்குகிறோம், நிறுவனத்தின் நோக்கம் என்ன என்று தெரியாமலேயே தொடங்குகிறார்கள். அடுத்ததாக முதலீட்டாளர்களிடம் இருந்து நிதியை திரட்டும் தொழில்முனைவோர்கள் தொழிலில் கவனம் செலுத்தாமல் நிறுவனத்தின் சந்தை மதிப்பில் கவனம் செலுத்த தொடங்கிவிடுகிறார்கள். தொழில் சரியாக நடந்தால்தானே சந்தை மதிப்பு உயரும் என்பதை அவர்கள் புரிந்துகொள்வதில்லை.

முதலீட்டாளர்களுக்கு சந்தை மதிப்பில் கவனம் இருக்கலாம். ஆனால் தொழில்முனைவோர் தொழில் விரிவாக்கத்தில்தான் கவனம் செலுத்த வேண்டும். மாறாக சிலர் மதிப்பில் கவனம் செலுத்துகிறார்கள்.

மூன்றாவதாக நிறுவனம் வளரத்தொடங்குகிறது என்னும் பட்சத்தில் வளர்ச்சிக்கு ஏற்ப பணியாளர்களை எடுக்க வேண்டும். பணியாளர்கள் எடுப்பது என்பது முக்கியமில்லை. அவர்களுக்கு அதிகாரத்தை கொடுக்க வேண்டும்.

அதிகாரங்களை பிரித்துக்கொடுக்கும் போது தான் நிறுவனம் வளரும். ஒரே இடத்தில் அதிகாரம் குவிந்திருக்கும் பட்சத்தில் ஒரு எல்லைக்கு மேல் நிறுவனம் வளராது. ஆனால் பல தொழில்முனைவோர்கள் அதிகாரத்தை குவித்து வைத்திருக்கி றார்கள்.

பல முதலீட்டாளர்கள் இங்கு இருந்தாலும், பெரிய வென்ச்சர் கேபிடல் நிறுவனங்களோ அல்லது பிரைவேட் ஈக்விட்டி நிறுவனங்களோ சென்னையில் இல்லை. பெங்களூரு, மும்பையிலே அனைத் தும் இருக்கின்றன. என்ன காரணம்?

பொதுவாக இங்கிருக்கும் தொழில்முனைவோர்கள் நிதி திரட்டுவது குறித்து அதிகம் யோசிக்கிறார்கள். நிதி திரட்டினால் நிறுவனத்தில் உள்ள பங்கு குறைந்துவிடுமோ என்னும் அச்சம் அவர்களிடம் அதிகமாக இருக்கிறது.

சென்னை ஏஞ்சல்ஸ் என்னும் முதலீட்டாளர் அமைப்பு இருந்தாலும் இந்த அமைப்பு முதலீடு செய்த நிறுவனங்களில் பெரும்பாலானவை சென்னைக்கு வெளியேதான். பெங்களூருவில் டெக்னாலஜி தொழில்முனைவோர்கள் உருவானார்கள். அதனால் அங்கு முதலீட்டு நிறுவனங்கள் சென்றன. அதன் தொடர்ச்சியான வேலை தேடுபவர்களும் அங்கே சென்றனர்.

முதலீடு மற்றும் பணியாளர்கள் இருப்பதால் புதிய தொழில்முனைவோர்கள் மீண்டும் அங்கேயே சென்றனர். ஆனால் பெங்களூரு தன்னுடைய அதிகபட்ச எல்லையை அடைந்துவிட்டதாக நினைக்கிறேன். தற்போது புதிய தொழில்முனைவோர்களின் முதல் வாய்ப்பு பெங்களூராக இல்லை. அதற்காக அவர்கள் சென்னை வருவார்கள் என்றும் சொல்ல முடியாது. அவர்களை இங்கு கொண்டுவரும் பணியை நாம் செய்ய வேண்டும்.