கடந்த சில ஆண்டுகளாகவே மியூச்சுவல் பண்ட் துறையில் பல மாற்றங்களை செபி செய்து வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு முதலீடு மற்றும் வெளியேறும் கட்டணங்களை மாற்றியமைத்தது. அதனைத் தொடர்ந்து நேரடியாக மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்யும் முறை கொண்டு வரப்பட்டது. (நேரடி மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் செலவு விகிதம் குறைவு). விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தது, ஆலோசகர் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு வரம்புகளை நிர்ணயம் செய்தது என பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக மியூச்சுவல் பண்ட்களை மாற்றி அமைக்கும் பணியை தற்போது செபி கையில் எடுத்துள்ளது. இதன் மூலம் ஒரு பண்ட் நிறுவனத்தில் ஒரு பிரிவில் ஒரே பண்ட் மட்டுமே இருக்க முடியும்.

செபியின் சமீபத்திய நடவடிக்கை

மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் தங்கள் வசம் இருக்கும் அனைத்து திட்டங்களையும் ஐந்து பிரிவுகளில் ஒருங்கிணைக்க வேண்டும். பங்குச்சந்தை, கடன் சந்தை, பேலன்ஸ்டு, தீர்வுகளை நோக்கிய திட்டம் (ஓய்வு, குழந்தைகளின் எதிர்காலம்) மற்றும் இதர திட்டங்கள் (இடிஎப், இன்டெக்ஸ் உள்ளிட்டவை) என்னும் ஐந்து பிரிவுகளில் வகைப்படுத்த வேண்டும். தவிர ஒவ்வொரு பிரிவுகளிலும் துணை பிரிவுகள் மற்றும் அதற்கான விதிமுறைகளையும் செபி வகுத்திருக்கிறது. இதன் மூலம் ஒரே பிரிவில் இருக்கும் பல பண்ட்களை ஒருங்கிணைக்க முடியும், இதன் மூலம் முதலீட்டாளர்கள் சரியான பண்ட்களை தேர்ந்தெடுக்க முடியும் என செபி நம்புகிறது.

பங்குச்சந்தை என்னும் பிரிவு உருவாக்கப்பட்டாலும் அதில் 10 உள்பிரிவுகளுக்கு செபி அனுமதி வழங்கி இருக்கிறது. மல்டி கேப், லார்ஜ் கேப், மிட்கேப், ஸ்மால் கேப், இஎல்எஸ்எஸ் என உட்பிரிவுகள் உள்ளன. அதேபோல கடன் சார்ந்த திட்டங்களில் 16 உள் பிரிவுகளுக்கு செபி அனுமதி வழங்கி இருக்கிறது. லிக்விட், அல்ட்ரா ஷார்ட் டேர்ம், மணி மார்க்கெட் என பல பிரிவுகளுக்கான அனுமதியை செபி வழங்கி இருக்கிறது.

கடந்த 6-ம் தேதி இதற்கான சுற்றறிக்கையை செபி வெளியிட்டது. வரும் டிசம்பர் 6-ம் தேதிக்குள் மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் தங்களது திட்டத்தை அறிவிக்கவேண்டும். தங்களது நிறுவனத்தில் எந்த பண்டினை எதனுடன் இணைக்கப் போகிறோம் என்பது உள்ளிட்ட திட்டத்தை அறிவிக்க வேண்டும். பண்ட் நிறுவனங்களின் திட்டத்தை செபி ஆராய்ந்த பிறகு அனுமதி அளிக்கப்படும். செபியின் அனுமதி கிடைத்த மூன்று மாதத்துக்குள், பண்ட்களின் அமைப்பை மாற்றி அமைக்க வேண்டும். அதாவது அடுத்த ஆண்டு மத்தியில் மியூச்சுவல் பண்ட் துறையின் அமைப்பு மொத்தமாகவே மாறி இருக்கும்.

என்ன காரணம்?

தற்போது இந்தியாவில் 40-க்கும் மேற்பட்ட மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களில் 1,200-க்கும் மேற்பட்ட திட்டங்கள் உள்ளன. 400-க்கும் மேற்பட்ட பங்குச்சந்தை திட்டங்கள், 300-க்கும் மேற்பட்ட கடன் சந்தை திட்டங்கள் மற்றும் 420-க்கும் மேற்பட்ட பேலன்ஸ்ட் திட்டங்கள் உள்ளன. இவ்வளவு திட்டங்களால் முதலீட்டாளர்களுக்கு குழப்பம் ஏற்படுகிறது. மேலும் சமீப காலங்களில் மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களின் இணைப்பு அதிகமாக நடந்தது. இதனால் வேறு நிறுவனத்தில் லார்ஜ் கேப் பண்ட் அப்படியே புதிய நிறுவனத்திலும் பராமரிக்கப்படுகிறது. அதனால் ஒரே நிறுவனத்தில் ஒரே பிரிவில் இரு பண்ட்கள் செயல்படுகின்றன. தவிர கூடுதல் நிதியை திரட்ட ஒரே பிரிவில் புதிய பண்ட்களை வெளியிடும் போக்கும் இருந்தது. இதன் காரணமாகவும் இவற்றை மாற்றி அமைக்க செபி முடிவு செய்திருக்கிறது.

கிடைக்கும் பலன்கள் என்ன?

பண்ட்களை ஒருங்கிணைப்பதால் மொத்த பண்ட்களின் எண்ணிக்கை குறையும். தவிர ஒரே பிரிவில் ஒரு பண்ட் மட்டுமே இருக்கும் என்பதால் முதலீட்டாளர்கள் எளிதாக ஒப்பீடு செய்து, தங்களது முதலீட்டினை தேர்வு செய்ய முடியும். தற்போது ஒரே பிரிவில் பல பண்ட்கள் இருந்தாலும், நிறுவனங்கள் ஒவ்வொரு வரையறையை பின்பற்றுவதால் ஒப்பிடுவதில் சில சிக்கல்கள் இருக்கின்றன. உதாரணத்துக்கு சில லார்ஜ் கேப் பண்ட்கள் சந்தை மதிப்பு அடிப்படையில் முதல் 200 நிறுவனங்களை லார்ஜ் கேப் பங்குகள் என வகைபடுத்துகின்றன. சில பண்ட்கள் முதல் 100 பங்குகளை லார்ஜ் கேப் பங்குகள் என வகைப்படுத்துகின்றன. ஆனால் செபி இதற்கும் விதிமுறைகளை வகுத்திருக்கிறது.

சந்தை மதிப்பு அடிப்படையில் முதல் 100 இடங்களில் இருக்கும் பங்குகள் லார்ஜ் கேப் பங்குகள் என்றும், 101 முதல் 250 வரை இருக்கும் பங்குகள் மிட்கேப் என்றும், பட்டியலில் 251 முதல் இருக்கும் பங்குகள் ஸ்மால் கேப் பங்குகள் என்றும் செபி முறைப்படுத்தி இருக்கிறது. இதேபோல கடன் சார்ந்த திட்டங்களுக்குமான விதிமுறைகளையும் செபி வகுத்திருக்கிறது, கார்ப்பரேட் பாண்ட் ஃபண்ட் என்னும் பட்சத்தில் 80 சதவீதம் கார்ப்பரேட் கடன் பத்திரங்களில் முதலீடு செய்ய வேண்டும். அதுவும் `ஏஏஏ’ ரேட்டிங் இருக்கும் கடன் பத்திரங்களில் முதலீடு செய்ய வேண்டும் என ஒவ்வொரு பிரிவுக்கும் விதிமுறைகளை செபி உருவாக்கி இருக்கிறது.

இதனால் ஒவ்வொரு பிரிவிலும் எந்த பண்ட் சிறப்பாக செயல்படுகிறது என்பதை முதலீட்டாளர்கள் எளிதாக புரிந்து கொள்ள முடியும்.

மேலும், ஒரே பிரிவில் இருக்கும் பண்ட்களை இணைப்பதன் மூலமாக மியூச்சுவல் பண்ட் செலவு விகிதம் (expense ratios)குறைவதற்கான சூழல் உருவாகும். மியூச்சுவல் பண்ட் திட்டங்கள் நிர்வகிக்கும் தொகைக்கு ஏற்ப செலவு விகிதம் இருக்கிறது. பங்குச்சந்தை சார்ந்த திட்டத்துக்கு அதிகபட்சம் 2.50 சதவீதம் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. குறைந்த பட்சம் 1.75 சதவீதம் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. பண்ட்கள் இணையும் போது கையாளும் தொகை உயர்வதால் செலவு விகிதம் குறைய வாய்ப்பு இருக்கிறது. இதனால் நீண்ட கால அடிப்படையில் முதலீடுகளின் மீதான லாபம் உயர்வதற்கு வாய்ப்பு அதிகம் இருக்கிறது.

இதில் மற்றொரு சிக்கலும் இருக்கிறது. ஒரு நிறுவனத்தின் இரு பெரிய பண்ட்களை இணைக்கும் பட்சத்தில், அந்த பண்ட் கையாளும் தொகை மிக பெரியதாக உயரும். அதிக தொகையை கையாளும் பட்சத்தில் முதலீட்டின் மீதான லாபம் குறைவதற்கான சூழலும் இருக்கிறது என இந்த துறை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

என்ன செய்ய வேண்டும்?

மியூச்சுவல் பண்ட் முதலீட்டாளர்கள் இந்த துறையில் என்ன நடக்கிறது என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டியது அவசியமாகும். செபியின் அறிவுரைக்கு ஏற்ப பண்ட்களை மாற்றி அமைக்கும் பட்சத்தில் வெளிப்படைத்தன்மை உருவாகும் என்றாலும், எதிர்பார்ப்பை புதிய பண்ட்கள் பூர்த்தி செய்கிறதா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். அதற்கேற்ப போர்ட்போலியோவை மாற்றி அமைக்கவேண்டும். பண்ட்கள் இணையும் பட்சத்தில் மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் முதலீட்டாளர்களுக்கு முறையான அறிவிப்பினை வழங்கும். புதிதாக மாறும் பண்டில் இணைய விரும்பவில்லை என்றால் முதலீட்டுத் தொகையை வெளியே எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்படும். இந்த கால கட்டத்தில் வெளியேற விரும்பினால் வெளியேறும் கட்டணம் கிடையாது.

செபி எடுத்திருக்கும் இந்த நடவடிக்கைகளை இந்த துறை சார்ந்த பலரும் வரவேற்றிருந்தாலும், சில விமர்சனங்களையும் முன் வைக்கின்றனர். அதாவது திட்டங்களை இணைப்பதற்கு நடவடிக்கையை எடுத்திருக்கும் செபி, திட்டங்களின் பெயர்கள் குறித்த அறிவிப்பினையும் வெளியிட்டிருக்கலாம் என கருத்து தெரிவிக்கின்றனர். சில நிறுவனங்களில் சாதாரண முதலீட்டாளர்கள் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு திட்டங்களின் பெயர் இருக்கிறது. உதாரணத்துகு லார்ஜ் கேப் பண்ட் என்றால் அனைத்து நிறுவனங்களிலும் இதே பெயர் இருக்கும் பட்சத்தில் முதலீட்டாளர்கள் புரிந்து கொள்ளவும், ஒப்பீடு செய்வதற்கும் வசதியாக இருக்கும் என்று கருத்து தெரிவித்தனர்.

சரியான திசையில் மியூச்சுவல் பண்ட் துறை சென்றாலும், நடக்கும் மாற்றங்களை முதலீட்டாளர்கள் கூர்ந்து கவனிக்க வேண்டிய நேரமிது.