கடந்த சில வாரங்களாக இ-காமர்ஸ் துறையில் நடந்து வந்த பரபரப்புகளுக்கு ஸ்நாப்டீல் நிறுவனம் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது. ஸ்நாப்டீல் நிறுவனத்தை பிளிப்கார்ட் நிறுவனம் வாங்க இருப்பதாகவும், அதற்கான பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் கடந்த சில வாரங்களாகவே ஊகங்கள் இருந்து வந்தன. இந்த நிலையில் ஸ்நாப்டீல் 2.0 என்னும் புதிய அத்தியாயத்தை தொடங்க இருப்பதாக அந்நிறுவனத்தின் நிறுவனர்கள் ரோஹித் பன்சால் மற்றும் குனால் பாஹல் ஆகியோர் தெரிவித்திருக்கின்றனர். ஸ்நாப்டீல் அறிவிப்பால் யாருக்கு சாதகம், யாருக்கு பாதகம், ஏன் இந்த அறிவிப்பு ஆகியவற்றை பார்க்கும் முன்பு ஸ்நாப்டீலுக்கு ஏன் இந்த நிலைமை என்பதை பார்ப்போம்.
ஏன் இந்த நிலை?
டெக்னாலஜி நிறுவனங்களை நடத்துவதற்கு அதிக முதலீடு தேவைப்படும். ஸ்நாப்டீல் நிறுவனத்தில் பல வென்ச்சர் கேபிடல் நிறுவனங்கள் முதலீடு செய்திருக்கின்றன. இருந்தாலும் பிளிப்கார்ட் மற்றும் அமேசான் ஆகிய நிறுவனங்களுடன் போட்டி போட வேண்டி இருப்பதால் கூடுதல் நிதி தேவையாக இருக்கிறது. ஆனால் ஸ்நாப்டீலின் சந்தை சரிந்து வருவதால் புதிதாக நிதியை திரட்ட முடியவில்லை. தவிர ஸ்நாப்டீல் பல டெக்னாலஜி நிறுவனங்களைக் கையகப்படுத்தியது. இந்த நிறுவனங்களில் ஒன்று கூட வெற்றியடையவில்லை. அனைத்தும் தோல்வியில் முடிவடைந்தது.
நிறுவனத்தின் வசம் இருந்த தொகை இதுபோன்ற நிறுவனங்களை வாங்கியதிலேயே அதிகம் செலவானது. அதனால் கைவசம் இருக்கும் தொகை குறைந்துகொண்டே இருந்தது. நிறுவனம் தொடர்ந்து செயல்பட செலவு குறைப்பு, ஆட்குறைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை ஸ்நாப்டீல் எடுத்தது. ஒரு கட்டத்தில் நிறுவனர்கள் சம்பளம் இல்லாமல் பணிபுரிய தொடங்கினார்கள். இருந்தாலும் வளர்ச்சியை நோக்கி திரும்ப முடியவில்லை.
இந்த நிலையில் ஸ்நாப்டீல் நிறுவனத்தில் 30 சதவீதத்துக்கும் மேலான பங்குகளை ஜப்பானை சேர்ந்த சாப்ட்பேங்க் வைத்திருக்கிறது. நிறுவனம் இதே திசையில் செல்லும்பட்சத்தில் அத்தனை முதலீடும் வீணாகும் என்பதால் ஸ்நாப்டீல் நிறுவனத்தை பிளிப்கார்டுக்கு விற்பதற்கான நடவடிக்கையை தொடங்கியது.
பிளிப்கார்ட் நிறுவனத்துடன் இணையும் பட்சத்தில் வளர்ந்து வரும் பிளிப்கார்ட் நிறுவனத்தின் பங்குகள் கிடைக்கும். அந்த நிறுவனத்தில் கூடுதலாக முதலீடு செய்து மேலும் பங்குகளை பெறலாம் என்பது சாப்ட்பேங்க் நிறுவனத்தின் திட்டம்.
அதேபோல பிளிப்கார்ட் நிறுவனத்தில் ஆரம்ப கால முதலீட்டாளர் டைகர் குளோபல் நிறுவனம். இந்த நிறுவனம் பிளிப்கார்ட் முதலீட்டில் இருந்து வெளியேற நினைத்தது. அதனால் பிளிப்கார்ட், ஸ்நாப்டீல் இணைப்பினை டைகர் குளோபல் நிறுவனமும் விரும்பியது.
ஏன் நடக்கவில்லை?
நிறுவனர்களை விட முதலீட்டாளர்கள் அதிகம் விரும்பினார்கள், ஆனாலும் இந்த இணைப்பு நடைபெறவில்லை. முதல் காரணம் ஸ்நாப்டீல் நிறுவனர்கள், நிறுவனத்தை விற்க விரும்பவில்லை. இந்த இணைப்பை தடுக்கவும், அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் தொடர் விவாதத்தில் இருந்தனர். தவிர பிளிப்கார்ட் கொடுக்க முன்வந்த தொகையும் குறைவு. முதலில் 80 கோடி டாலர் கொடுக்க பிளிப்கார்ட் முன்வந்தது, அதனை மறுத்ததும் 95 கோடி டாலர் கொடுக்க பிளிப்கார்ட் சம்மதித்தது. தவிர பிளிப்கார்ட் விதித்த நிபந்தனைகளும், இந்த இணைப்பு நடக்காததற்கு ஒரு காரணமாகும். ஸ்நாப்டீல் நிறுவனத்தை வாங்கிக்கொண்டாலும், ஸ்நாப்டீல் இயக்குநர் குழு ஏற்கெனவே எடுத்த முடிவுகளால் ஏற்படும் விளைவுகளுக்கு அடுத்த இரு ஆண்டுகளுக்கு பொறுப்பேற்க பிளிப்கார்ட் வலியுறுத்தியதாக தெரிகிறது. இந்த காரணங்களால் இணைப்பு நடைபெறவில்லை.
தவிர, ஸ்நாப்டீல் நிறுவனத்தின் துணை நிறுவனமான பிரீசார்ஜ் நிறுவனத்தை ரூ.385 கோடிக்கு ஆக்ஸிஸ் வங்கி வாங்கியது. அதனால் இந்த தொகையை வைத்து இன்னும் சில மாதங்களுக்கு நிறுவனத்தை நடத்த முடியும் என்னும் தையரியத்தால் ஸ்நாப்டீல் 2.0 முடிவு எடுக்கப்பட்டது.
முதலீட்டாளர்கள்/பணியாளர்கள்?
இந்த இணைப்பு நடக்கும் பட்சத்தில் ஸ்நாப்டீல் நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கும் நெக்ஸஸ் மற்றும் கலாரி ஆகிய நிறுவனங்கள் வெளியேற தயாராக இருந்தன. தவிர பல தனிநபர்கள் ஸ்நாப்டீல் நிறுவனத்தில் முதலீடு செய்தனர். தற்போது அவர்கள் வெளியேற இன்னும் சில காலம் காத்திருக்க வேண்டும்.
கலாரி கேபிடலின் வானி கோலா ஸ்நாப்டீல் முடிவை வெளிப்படையாகவே விமர்சனம் செய்தார். இதனால் முதலீட்டாளர்கள் மற்றும் பணியாளர்கள் ஏமாற்றம் அடைந்திருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.
பணியாளர்களை பொறுத்தவரை கடந்த சில மாதங்களாகவே நிச்சயமற்ற சூழலில் பணியாற்றி வந்தனர். அந்த நிலைமை மேலும் தொடரும். தவிர தற்போது 1200-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இருக்கிறார்கள். இந்த எண்ணிக்கையை 200 ஆக குறைக்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு 9,000 பணியாளர்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில நாட்களாக முக்கிய மேலாளர்கள் வெளியேறி வருவதாக தகவல்கள் வெளியாகின்றன. மேலும் இந்த இணைப்பு நடக்கும் பட்சத்தில் பணியாளர்கள் வசம் உள்ள பங்குகளை பணமாக மாற்றிக்கொண்டிருக்க முடியும். தற்போது பணியாளர்கள் வசம் இருக்கும் ஸ்நாப்டீல் பங்குகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகி இருக்கிறது. இதனை பணமாக்க இன்னும் சில காலம் காத்திருக்க வேண்டும்.
யாருக்கு பயன்?
இந்த இணைப்பு நடக்காததால் ஸ்நாப்டீலுக்கு பயன் கிடைக்குமா என்பது உடனடியாக தெரியவில்லை. ஆனால் இந்த இணைப்பு நடக்காததால் பிளிப்கார்டுக்குதான் பயன் அதிகம் என்பதே இ-காமர்ஸ் துறை வல்லுநர்களின் கருத்து. ஸ்நாப்டீல் நிறுவனத்தை வாங்குவதால் பிளிப்கார்டுக்கு எந்த பயனும் இல்லை. பிராண்ட், டெக்னாலஜி, பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்தையும் பிளிப்கார்ட்டே பெற்றுக்கொள்ள முடியும்.
ஸ்நாப்டீல் உடனான இணைப்பினால் பிளிப்கார்டுக்கு கிடைக்கக் கூடியது சாப்ட்பேங்கின் முதலீடு. ஆனால் இந்த இணைப்பு நடைபெறவில்லை என்றாலும் பிளிப்கார்டில் முதலீடு செய்ய சாப்ட்பேங்க் முடிவெடுத்திருப்பதாகத் தெரிகிறது. சுமார் 200 கோடி டாலர் முதலீடு செய்ய முன்வந்திருப்பதாகத் தெரிகிறது.
பிளிப்கார்டை தவிர, சாப்ட்பேங்க், டைகர் குளோபல், ஸ்நாப்டீல் ஆகிய அனைத்து நிறுவனங்களுக்கும் இந்த இணைப்பு நடக்காததது மிகப்பெரும் இழப்பு என விசி சர்கிள் இணையதளம் கருத்து தெரிவித்திருக்கிறது.
அதே சமயம் நிறுவனங்களை கையகப்படுத்தல் வெற்றிகரமாக நடக்கும்போதுதான் ஸ்டார்ட் அப் உலகம் உத்வேகமாக செயல்படும். ஒரு நிறுவனத்தை மற்ற நிறுவனம் வாங்கும்போது துறையின் மதிப்பு அதிகரிக்கும், புதிய உத்வேகம் பிறக்கும். ஆனால் இந்த இணைப்பு உத்வேகத்தை முடக்கியுள்ளது.
பிளிப்கார்ட் நிறுவனத்துக்கு விற்காததால் வெற்றிக்கான முதல் அடியை ஸ்நாப்டீல் எடுத்து வைத்திருக்கிறது. உண்மையான போட்டியே இனிதான் தொடங்குகிறது. பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும். இருக்கும் பணியாளர்களுக்கு நம்பிக்கையை உருவாக்க வேண்டும், வாடிக்கையாளர்களைக் கவர வேண்டும், செலவினைக் குறைக்க வேண்டும், புதிய உத்தியை வகுக்க வேண்டும், லாப பாதைக்கு திரும்ப வேண்டும் என பல `வேண்டும்’களை ஸ்நாப்டீல் செய்ய வேண்டும்.
ஸ்நாப்டீல் நிறுவனம் தன்னை நிரூபித்து கொள்ள மேலும் ஒரு வாய்ப்பு உருவாகி உள்ளது. அந்த வாய்ப்பை பயன்படுத்தி சாதிக்குமா? சறுக்குமா? காத்திருப்போம்.
நன்றி: தி இந்து
Recent Comments