யுவர் ஸ்டோரி நடத்திய ’தமிழ்நாடு ஸ்டோரி’ மாநாடு கடந்த 26-ம் தேதி சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தில் உள்ள தொழில்முனைவோர்கள், முதலீட்டாளர்கள், தூதரக அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியின் விருந்தினராக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

தமிழகம் தொழில்துறையில் சிறந்து விளங்க பல கொள்கைகளை உருவாக்கி இருக்கிறோம். “ஐடி புதிய கொள்கை, ஏரோஸ்பேஸ் கொள்கை, எலெக்ட்ரிக் வாகன கொள்கை உள்ளிட்ட பல கொள்கைளை வெளியிட்டு இருக்கிறோம். தவிர ஒற்றைச் சாரள முறை மூலம் தொழில் தொடங்க இருக்கும் நிறுவனங்களுக்கான விதிமுறையை வேகப்படுத்தி இருக்கிறோம்,” என்றார்.

தொழில்முனைவோர்களை ஊக்குவிக்க மறைந்த முதலமைச்சர் NEEDS என்னும் திட்டத்தை அறிவித்தார். இதன் மூலம் 522 நபர்களுக்கு ரூ.277 கோடி அளவுக்கு நிதி உதவி அளிக்கப்பட்டிருக்கிறது. தற்போதைய முதலமைச்சர், முதலீடுகளை பெறுவதற்காக அமெரிக்காவுக்கு சென்றிருந்தார். இதன் மூலம் ரூ 8,835 கோடி ரூபாய் முதலீட்டை தமிழகம் பெற்றிருக்கிறது. 41 நிறுவனங்கள் இந்த முதலீட்டை செய்ய இருக்கின்றன.

தமிழ்நாட்டில் திறன் வாயந்த மனித வளம், மின்சாரம், சட்டம் ஒழுங்கு கட்டுப்பாடு காரணமாக  தொழில் தொடங்குவதற்கான சூழல் மேம்பட்டிருக்கிறது. சர்வதேச அளவில் உள்ள முக்கியமான நிறுவனங்களில் தமிழர்கள் முக்கிய பொறுப்புகளில் உள்ளனர். அவர்களை ஒருங்கிணைப்பதற்கு ஏற்ப ’யாதும் ஊரே’ என்னும் பெயரில் தளம் அமைக்கப்பட்டிருக்கிறது. வெளிநாட்டுல் உள்ள தமிழர்கள், இங்கு முதலீடு செய்வதற்கான வரவேற்கும் விதமாக இத்திட்டம் வடிவமைக்கப்பட்டிருகிறது,” என்றார் அமைச்சர்.

இந்திய அளவில் இரண்டாவது பெரிய பொருளாதாரமாகவும், நாட்டின் ஜிடிபியில் தமிழகத்தின் பங்கு 8.4 சதவீதமாகவும் இருக்கிறது. இந்த நிலையை மேம்படுத்தும் அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு செய்து வருகிறது என அமைச்சர் குறிப்பிட்டார்.

சி.கே ஏஞ்சல்ஸ் அறிமுகம்

இதனைத் தொடர்ந்து ’சிகே ஏஞ்சல்’ எனும் ஏஞ்சல் முதலீடு திட்டம் அறிமுக நிகழ்ச்சியும் நடைபெற்றது. நேச்சுரல்ஸ் நிறுவன இணை நிறுவனர் சி.கே.குமரவேல், ‘ck angels’ எனும் இந்தியாவின் முதல் நுகர்வோர் தொழில் முதலீட்டு திட்டத்தை தொடங்கியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “ஏஞ்சல் முதலீடு பெரும்பாலும் டெக்னாலஜி சார்ந்த நிறுவனங்களுக்கே வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் நுகர்வோர் பிரிவில் செயல்படும் நிறுவனங்களுக்கு பெரிய அளவில் முதலீடுகள் கிடைப்பதில்லை. அதனால் இந்தப் பிரிவில் செயல்படும் நிறுவனங்களில் முதலீடு செய்ய முடிவெடுத்தோம்,” என்றார்.

CK Angels அறிமுக விழாவில் சிகே குமாரவேல் இதற்காக ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்திருக்கிறோம். ரூ.10 லட்சம் முதல் அதிகபட்சம் ஒரு 1 கோடி வரை முதலீடு செய்ய முடிவெடுத்திருக்கிறோம். அதிக தொகையை ஒரே நிறுவனத்தில் முதலீடு செய்வதை விட குறைந்தத் தொகையை அதிக நிறுவனங்களில் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளோம்.  தற்போது ரெட்பாக்ஸ், புட் கடலை மற்றும் கோழி விலாஸ் ஆகிய மூன்று நிறுவனங்களில் சிகே ஏஞ்சல்ஸ் முதலீடு செய்திருக்கிறது. அடுத்த பத்தாண்டுகளில் இந்த பிரிவில் 10,000 தொழில்முனைவோர்களை உருவாக்க வேண்டும். இதன் மூலம் லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாகும் என குறிப்பிட்டார்.

வாடிக்கையாளர் பணமே சிறந்தது

இதனைத் தொடர்ந்து கருத்தரங்கு ஒன்றும் நடைபெற்றது. சமீப காலத்தில் நிறுவனங்களில் ஏற்படும் மிகப்பெரிய பிரச்சினை நிறுவனர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்படுவதுதான். ஆனால் குடும்ப நிறுவனமாக இருந்தாலும் இந்த பிரச்சினையை எப்படி கையாளுகிறீர்கள் என அடையார் ஆனந்தபவன் நிர்வாக இயக்குநர் ஸ்ரீனிவாச ராஜாவிடம் கேட்கப்பட்டது. ”தற்போது மூன்றாவது தலைமுறையை சார்ந்தவர்களும் தொழிலுக்குள் வந்துவிட்டனர்.

ஒவ்வொருவருக்கும் தனித்தனி பொறுப்புகள் வழங்கப்பட்டிருக்கிறது. தவிர குடும்பத்துக்கு என பிரத்யேக கொள்கைகளை நிர்ணயம் செய்திருக்கிறோம். மேலும் ஒவ்வொரு காலாண்டிலும் பிஸினஸில் என்ன நடக்கிறது என்பதை விவாதிப்பதை போல, குடும்பத்தில் என்ன நடக்கிறது என்பதையும் தொடர்ந்து விவாதித்து வருவோம்,” என குறிப்பிட்டார். முதலீட்டாளர் விசேஷ் ராஜாராம் கூறும்போது, முதலீடு கிடைத்தால்தான் ஸ்டார்ட் அப் வெற்றி என நினைக்க வேண்டாம். தொழில்முனைவோர்கள் முதலீட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். முதலீட்டாளரிடம் வாங்குவதை விட வாடிக்கையாளரிடம் வருவாய் பெறுவதே சிறந்தது என்பதை தொழில்முனைவோர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என கூறினார்.

ஏன் தமிழ்நாடு?

இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் ஏன் முதலீடு செய்ய வேண்டும் என்னும் கருத்தரங்கு நடைபெற்றது. முதலாவதாக உலக வங்கியின் இந்திய பிரிவு தலைவர் சுனில் குமார் பேசினார். 2001-ம் ஆண்டு இந்தியாவில் உலக வங்கியின் பிரிவு தொடங்கப்பட்டது. இதற்கு காரணம் தமிழ்நாட்டில் திறன்மிக்க பணியாளர்கள் உள்ளனர். தொழிலுக்கு ஏற்ற கொள்கையும், வசிப்பதற்கு ஏற்ற சூழலும் தமிழ்நாட்டில் உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள வாய்ப்புகள் ஏராளம். தொழில்துறையை பொருத்தவரை தமிழ்நாடு என்பது தங்கச்சுரங்கம் என குறிப்பிட்டார்.

இவரைத் தொடர்ந்து பேசிய ஆண்டனி லோபோ (honorary consul of spain) மேலும் பல புள்ளிவிவரங்களுடன் தமிழ்நாட்டில் ஏன் முதலீடு செய்ய வேண்டும் என்பதை விளக்கினார். தமிழகம் கல்வியில் முன்னணியில் இருக்கிறது. சென்னையை சுற்றி 3,500க்கும் மேற்பட்ட கல்லூரிகள் உள்ளன. இதன் மூலம் நிறுவனங்களுக்கு தரமான பணியாளர்கள் கிடைக்கின்றனர். மேலும் தமிழகத்தில் ஆங்கிலம் என்பது பொது மொழியாக இருப்பதால் சர்வதேச நாடுகளுடன் உரையாட முடிகிறது.நான்கு துறைமுகங்கள் இருப்பதால் ஏற்றுமதிக்கான வாய்ப்புகளும் தமிழகத்தில் உள்ளன,” என்றார்.

ஸ்பெயினைச் சேர்ந்த ரோகா நிறுவனம் இங்கு மிகப்பெரிய அளவில் செயல்பட்டு வருகிறது. சர்வதேச அளவில் இந்த நிறுவனம் பல நாடுகளில் இருந்தாலும் அங்கெல்லாம் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவர்தான் தலைவராக இருப்பார். ஆனால் இந்தியாவில், தமிழ்நாட்டைச் சேர்ந்த ரங்கநாதன் தலைமைச் செயல் அதிகாரியாக இருக்கிறார். தவிர கமேசா என்னும் எனர்ஜி நிறுவனம் பெரிய அளவில் செயல்பட்டு வருகிறது. ரீடெய்ல் பிரிவில் Zara-வும்  மேலும் பல ஆட்டோமொபைல்  உதிரி பாக நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன என குறிப்பிட்டார்.

இந்தியா என்றாலே மும்பை, டெல்லி போன்ற நகரங்கள் மட்டுமே இருப்பதாக பலர் நினைக்கின்றனர். ஆனால் அந்த எண்ணத்தை சென்னை மாற்றி இருக்கிறது என மார்க் வென் டி ரீகென் (consul general of Belgium to South India) கூறினார். கே7 நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி புருஷோத்தமன் கூறும்போது, தமிழகத்தில் 15 ஆண்டுகளாக அரசுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறேன். அனைத்து அரசுகளும் தொழில்முனைவுக்கு குறிப்பாக ஐடி துறை மேம்பாட்டுக்கு பல பணிகள் செய்திருக்கின்றன. தமிழ்நாட்டில்தான் முதல் முதலாக ஐடி கொள்கை உருவாக்கப்பட்டது. ஒற்றை சாரள முறை புதிய நிறுவனங்களுக்கு பயனுள்ளதாக இருந்தது,” என்றார்.

இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமையகம் பெங்களூருவாக இருக்கலாம். ஆனால் பெங்களூருவை விட அதிக பணியாளர்கள் சென்னையில்தான் இருக்கிறார்கள். அதேபோல பல ஐடி நிறுவனங்களின் தலைமையகம் மற்ற நகரங்களில் இருந்தாலும், தலைமை அலுவலகத்தை விட சென்னையில் அதிக ஊழியர்கள் இருப்பார்கள். தமிழகத்தில் உள்ள கல்விச் சூழலே இதற்குக் காரணமாகும் என குறிப்பிட்டார். இதனைத் தொடர்ந்து 100 ஆண்டுகள் நிறைவடைந்தை அடுத்து நல்லி நிறுவனம் சார்பில் நல்லி குப்புசாமி அவர்களுக்கும், ரூ.1,000 கோடி வருமானத்தை எட்டிய அடையார் ஆனந்தபவன் நிறுவாக இயக்குனர் ஸ்ரீனிவாசா ராஜா அவர்களுக்கும் விருதுகள் வழங்கி கெரவித்தது யுவர்ஸ்டோரி.

நன்றி : யுவர் ஸ்டோரி தமிழ்