`பொதுத்துறை வங்கிகளில் அரசின் வசமிருக்கும் பங்குகளைக் குறைக்க வேண்டும்’ என்கிற வாதம் அவ்வப்போது எழுந்து ஓய்வது உண்டு. ஆனால், தற்போது ரிசர்வ் வங்கியிடமிருந்தே அப்படி ஒரு பரிந்துரை வந்திருப்பது எல்லோரையும் ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது.

`ஆறு பொதுத்துறை வங்கிகளிலுள்ள பங்குகளை 51 சதவிகிதமாகக் குறைக்கும்பட்சத்தில், ரூ.43,000 கோடிவரை மத்திய அரசுக்கு நிதி கிடைக்கும் வாய்ப்பிருக்கிறது’ என ரிசர்வ் வங்கி கணித்திருக்கிறது. எஸ்.பி.ஐ., பஞ்சாப் நேஷனல் வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, கனரா வங்கி, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் பேங்க் ஆஃப் இந்தியா ஆகிய வங்கிகள் இதற்கு அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும், ஆர்.பி.ஐ-யின் இந்தப் பரிந்துரையை அரசாங்கம் ஏற்றுக்கொண்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. பொதுத்துறை வங்கிகளில் அரசிடம் இருக்கும் பங்கை விற்க வேண்டிய அவசியம் இப்போது ஏன் வந்தது?

மூன்று காரணங்கள்!

தற்போதைய சூழலில் மத்திய அரசுக்குக் கூடுதல் நிதி தேவைப்படுவதுதான் முதல் காரணம். மத்திய அரசாங்கம் நடப்பு நிதியாண்டில் கடன் வாங்கத் திட்டமிடப்பட்ட தொகை ரூ.7,60,000 கோடி. ஆனால், கொரோனா சிக்கல் காரணமாக கடன் வாங்கும் தொகை ரூ.12,00,000 கோடியாக உயர்ந்திருக்கிறது. இதைச் சமாளிக்கத்தான் இந்த நடவடிக்கை.

பொதுத்துறை வங்கிகளில் அரசாங்கத்தின் பங்கு அதிகமாக இருப்பதால், வங்கி நடைமுறைகளில் அரசின் பங்களிப்பு அதிகமாக இருக்கிறது. இதனால் மேம்பட்ட அமைப்பாக வங்கிகளால் செயல்பட முடியவில்லை. அரசாங்கத்தின் தலையீடு குறைந்து, வெளி நிறுவனங்கள் மற்றும் துறைசார்ந்த வல்லுநர்கள் இயக்குநர்குழுவில் அதிகம் இடம்பெறும்பட்சத்தில், வங்கி நிர்வாகம் சிறப்பாக இருக்கும் எனக் கருதப்படுவது இரண்டாவது காரணம்.

கடந்த சில ஆண்டுகளாகப் பொதுத்துறை வங்கிகளில் அரசாங்கத்தின் முதலீடு தொடர்ந்து உயர்ந்துவருகிறது. 2015-ம் ஆண்டு சில பொதுத்துறை வங்கிகளில் 60% அளவுக்கு அரசாங்கத்தின் பங்கு இருந்தது. 2018 மற்றும் 2019-ம் நிதியாண்டுகளில் ரூ.1,96,000 கோடிக்குப் பொதுத்துறை வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. இதனால் அரசாங்கத்தின் பங்கு கடந்த சில ஆண்டுகளில் கணிசமாக உயர்ந்திருக்கிறது. இருந்தாலும், `நிதி நிலைமையில் ஸ்திரத்தன்மை ஏற்படவில்லை’ என்னும் கருத்து இருப்பதால், பொதுத்துறை வங்கிகள் இணைக்கப்பட்டுவருகின்றன. இதன் தொடர்ச்சியாகத்தான் பொதுத்துறை வங்கிகளில் அரசாங்கத்தின் பங்குகளைக் குறைப்பதற்கான பரிந்துரை வெளியாகியிருப்பதாகச் சொல்லப்படுவது மூன்றாவது காரணம்.

சிறப்பாகச் செயல்பட முடியும்!

ரிசர்வ் வங்கின் இந்தப் பரிந்துரை குறித்து ஈக்னாமிக்ஸ் ரிசர்ச் அண்ட் அட்வைஸரி (Equinomics Research & Advisory) நிறுவனத்தின் நிறுவனர் ஜி.சொக்கலிங்கத்திடம் கேட்டோம். ‘‘பொதுத்துறை வங்கிகளில் அரசாங்கத்தின் பங்குகளைக் குறைக்கும் முடிவு நல்ல முடிவு. இதன் மூலம் வெளிப்படைத்தன்மை உருவாகும். வங்கித்துறையில் ஆர்வம் இருப்பவர்கள் இயக்குநர்குழுவில் இணைவார்கள். இதனால் வங்கிகளின் திறன் உயர்ந்து, சிறப்பாகச் செயல்பட முடியும்.

ஹெச்.டி.எஃப்.சி வங்கியில் தனிப்பட்ட முறையில் பெரிய அளவுக்குப் பங்குகளை யாரும் வைத்திருக்கவில்லை. ஆனால், சிறப்பாகச் செயல்படுகிறது. காரணம், `பங்குதாரர்களுக்குச் சிறப்பான செயல்பாடுகளை வழங்கியாக வேண்டும்’ என்னும் கட்டாயம் வங்கி நிர்வாகத்துக்கு இருக்கிறது.

தற்போதைய சூழலில் பொதுத்துறை வங்கிகளின் சந்தை மதிப்பு குறைவாக இருக்கிறது. அதனால்தான் இது வாங்குவதற்குச் சரியான தருணம் என நினைக்கிறேன். நம்முடைய பார்வையில் சந்தை மதிப்பு குறைவாக இருக்கும். முதலீட்டாளர்கள் பார்வையில் சந்தை மதிப்பு கவர்ச்சிகரமாக இருக்கும். இந்தச் சூழலில் பங்குகளை விற்க முடியாவிட்டால் வேறு சந்தர்ப்பம் கிடைக்காது. அதற்காக அரசாங்கத்தின் அனைத்துப் பங்குகளையும் விற்க வேண்டிய அவசியம் இல்லை. பொதுத்துறை வங்கிகளில் அரசாங்கம் 26% பங்குகளை வைத்துக் கொள்ளலாம். உதாரணம் சொல்ல வேண்டுமென்றால், ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்தின் பங்குகளை சுமார் 18 ஆண்டுகளுக்கு முன்னர் மத்திய அரசு விற்றது. 45% பங்குகளை ரூ.769 கோடிக்கு மத்திய அரசு விற்றது. தற்போது 29.5% பங்குகள் அரசு வசம் உள்ளன. இந்தப் பங்குகளின் தற்போதைய மதிப்பு ரூ.26,000 கோடிக்குமேல். அதனால் நீண்டகால அடிப்படையில் அரசாங்கத்தின் பங்குகளைக் குறைப்பதால், நிறுவனத்தின் செயல்பாடுகளில் மாற்றம் ஏற்படும்.

“அரசு வங்கிகளின்பங்குகளை விற்க வேண்டும்!” - ஆர்.பி.ஐ பரிந்துரை சரியா?

வங்கித்துறையைப் பொறுத்தவரை, அடுத்த 12 மாதங்கள் சவாலானதாகவே இருக்கும். கடன் சீரமைப்பு நடவடிக்கை அதிகமாக இருப்பதால், வாராக்கடன் அதிகரிக்கும் சூழல் இருக்கிறது. கடன் வளர்ச்சி விகிதம் குறையும் அபாயமும் உள்ளது. தடுப்பூசி கண்டுபிடித்தாலும் வங்கித்துறையில் உடனடி மாற்றம் நிகழும் வாய்ப்பு குறைவு” என்றார் அவர்.

பங்கு விற்பனை சரியல்ல!

பொதுத்துறை வங்கிகளில் அரசின் வசமிருக்கும் பங்குகளை விற்க ஆர்.பி.ஐ பரிந்துரை செய்திருந்தாலும், அதற்கு எதிரான விமர்சனங்களும் கிளம்பவே செய்துள்ளன. ‘‘பொதுத்துறை வங்கிகளைப் பொறுத்தவரை, யாரிடம் பெரும்பான்மையான பங்குகள் இருக்கின்றன என்பது முக்கியமல்ல. `அரசிடம் அதிக பங்குகள் இருப்பதால்தான் செயல்பட முடியாத சூழல் இருக்கிறது; தனியாரிடம் அதிக பங்குகள் இருந்தால் சிறப்பாகச் செயல்படும்’ என்ற வாதத்தை ஏற்க முடியாது. அப்படியானால் யெஸ் வங்கியில் ஏன் பிரச்னை ஏற்பட்டது, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியில் எப்படிச் சிக்கல் வந்தது? எனவே, இது சரியான முடிவல்ல.

பொதுத்துறை வங்கிகள் சிறப்பாகச் செயல்பட வேண்டுமென்றால், தலைமைப் பொறுப்பில் இருப்பவர் நேர்மையானவராக இருப்பதுடன், அந்தத் தொழிலை நன்கு கற்றறிந்த புரொஃபஷனலாகவும் இருப்பது அவசியம்’’ என்கிறார்கள் விமர்சனக் குரல் எழுப்புபவர்கள்.

பொதுத்துறை வங்கிகள் லாபம் ஈட்ட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அதே நேரத்தில், பொதுத்துறை வங்கிகளுக்கு சமூகப் பொறுப்பும் இருக்கிறது என்பதை அரசாங்கம் மறந்துவிடக் கூடாது.

நன்றி : நாணயம் விகடன்