தற்போது உயிருடன் இருப்பவர்கள் யாரும் இதுபோன்ற ஒரு நெருக்கடியை இதற்கு முன்பு சந்தித்திருக்க மாட்டார்கள் என்பதே நிஜம். போர், மழை, வெள்ளம், நிலநடுக்கம் போன்றவையும் ஆபத்தானதுதான். ஆனால் அருகில் இருக்கும் மனிதனே ஆபத்தானவனாக மாறியுள்ள இப்போதைய சூழல் மிகத் துயரமானது. கொரோனா, மருத்துவப் பிரச்சினை என்னும் நிலைமையைத் தாண்டி பொருளாதாரப் பிரச்சனையை சில மாதங்களுக்கு முன்பே ஏற்படுத்திவிட்டது.

கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கவலை தருவதாக இருக்கும் அதே சூழலில் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்படுபவர்களின் நிலைமையும் அதிகரித்து வருகிறது. மார்ச் 25-ம் தேதி தொடங்கி 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மேலும் பிரதமர், மக்களவை உறுப்பினர்களின் சம்பளம் குறைக்கப்பட்டிருக்கிறது. அரசு பணியாளர்களின் சம்பளத்தை தெலுங்கானா அரசு குறைத்திருக்கிறது. தொழில் முடக்கத்தால் நிறுவனங்களின் வருமானம் பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் நிறுவனங்கள் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து பல துறையைச் சார்ந்த நிறுவனங்கள், ஸ்டார்ட்-அப்’களின் தலைவர்களிடம் உரையாடினோம். பெரும்பாலானவர்களின் கருத்து இப்போதைக்கு ஊதிய உயர்வு என்னும் பேச்சுக்கே இடம் இல்லை என்பதுதான்.

50 சதவீத சம்பளக் குறைப்பு

பங்குச்சந்தை தரகு நிறுவனமான Zebu Shares and Wealth Management நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி விஜயகுமாரிடம் பேசினோம். அவர் கூறியதாவது, “கொரோனாவை pandemic என்று உலக சுகாதார மையம் அறிவித்ததில் இருந்து பங்குச்சந்தை தொடர்ந்து சரிந்தது. தவிர கச்சா எண்ணையும் கடுமையாக சரியத் தொடங்கியாதல் முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்களின் எண்ணிக்கைக் குறைந்தது. இந்த சூழலில் லாக்டவுன் அறிவிக்கப்பட்டதால் பங்கு வர்த்தகத்தின் எண்ணிக்கை மேலும் குறைந்தது. இதனால் நிறுவனத்தின் வருமானமும் குறைந்திருக்கிறது.” தற்போதைய சூழலில் 100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இருந்தாலும் 50 சதவீத பணியாளர்கள் மட்டுமே போதுமானது. ஆனால் தற்போதைய சூழலைப் பயன்படுத்தி மீதமுள்ள ஊழியர்களை, அவர்களின் செயல்பாட்டினைக் காரணமாகக் காண்பித்து நீக்க முடியும்.

ஆனால் சந்தை இருக்கும் சூழலில் அவர்களை நீக்கும் பட்சத்தில் மற்ற நிறுவனங்களில் வேலை கிடைக்கும் வாய்ப்பு குறைவு என்பதால் ஊதியக் குறைப்பு செய்ய திட்டமிட்டோம். மார்ச் கடைசி வாரத்தில் ஊரங்கு அறிவிக்கப்பட்டதால் மார்ச் மாதச் சம்பளத்தை முழுவதும் கொடுத்துவிட்டோம். ஆனால் ஏப்ரல் மாதத்தில் 50 சதவீத சம்பள குறைப்பை அனைத்து ஊழியர்களுக்கும் அமல்படுத்த முடிவெடுத்திருக்கிறோம், என்றார். ஆனால் இயல்பு நிலைக்குத் திரும்பிய பிறகுதான் ஒட்டுமொத்த தொழில்துறையிலும் பெரிய அளவிளான மாற்றங்கள் நடக்கும் என்றே நினைக்கிறேன். இன்னும் சில மாதங்களுக்குப் பிறகு அத்தியாவசியமற்றத் தேவைகளுக்கு மக்கள் செலவு செய்வது குறையும். அப்போது அந்தத் துறைகள் மேலும் கடுமையாக பாதிக்கப்படும். இன்னும் சில மாதங்களுக்குப் பிறகு தொழில்துறையில் நடக்கும் மாற்றங்கள் முழுமையாக தெரியவரும் என்று கூறினார்.

அதிக சம்பளம்; அதிக இழப்பு

விஜயகுமார் கூறியதை போலவே InkMonk நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஐசக்கும் கூறினார். இப்போதைக்கு வேலை இழப்பு என்னும் கடினமான முடிவை எடுக்க வேண்டாம் என முடிவெடுத்திருக்கிறோம். அடுத்த சில மாதங்களுக்குத் தேவையான தொகை மட்டுமே பெரும்பாலான நிறுவனங்களிடம் இருக்கும் நிச்சயமற்ற சூழலில், இந்த தொகையை சிக்கனமாகச் செலவு செய்வது அவசியம். மொத்தமாக அனைவருக்கும் ஒரே சதவீத சம்பளக் குறைப்பு என்பதை நாங்கள் அமல்படுத்தவில்லை. குறைவாக சம்பளம் வாங்குபவர்களுக்கு குறைந்த சதவீதமும், அதிக சம்பளம் வாங்குபவர்களுக்கு அதிக சதவீத தொகையையும் பிடித்தம் செய்திருக்கிறோம். 5% முதல் 60% வரை கூட சம்பளக் குறைப்பு செய்திருக்கிறோம், என்றார். 2008-ம் ஆண்டு சூழலும் தற்போதையச் சூழலும் முற்றிலும் வேறு. அப்போது அதிக சம்பளம் வாங்குபவர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டனர். ஆனால் தற்போது குறைவாக சம்பளம் வாங்குபவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். லாக்டவுன் முடிந்த அடுத்த 4 மாதங்களுக்குப் பிறகே இயல்பு நிலைக்கு எங்களது நிறுவனம் செல்லும் என நினைக்கிறேன் என ஐசக் கூறினார்.

பிபிஓவுக்கு பாதிப்புக் குறைவு

ஐசோர்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் சிவகுமார் சடையப்பனிடமும் இது குறித்து உரையாடினோம். அவர், “அனைத்து நிறுவனங்களிலும் வருமானம் குறைந்திருக்கிறது. ஆனால் மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது எங்களுக்குக் குறைவான பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது எனக் கூறலாம். நாங்கள் பிபிஓ துறையில் குறிப்பாக ஹெல்த்கேர் பிரிவில் செயல்பட்டு வருகிறோம் என்பதால் எங்களுக்குப் பெரிய அளவுக்கு பாதிப்பில்லை.” அதே சமயத்தில் எங்களின் அனைத்துப் பிரிவுகளும் சிறப்பாகச் செயல்படவில்லை. சில பிரிவுகளில் வருமானம் குறைந்திருக்கிறது. அந்த பிரிவில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வேறு திறனை கற்றுக்கொடுத்து வருகிறோம். தற்போது ஐடிஇஎஸ் துறையின் வருமானம் 181 பில்லியன் டாலர். இந்த வருமானம் 20% குறைந்தால் கூட, இழந்த வருமானத்தை மீண்டும் தொட இரு ஆண்டுகள் கூட ஆகலாம். அடுத்த சில மாதங்களுக்கு பிறகே உண்மையான நிலவரம் தெரியவரும் எனக் கூறினார்.

நிதி சார்ந்த முடிவுகளை எடுக்க இது நேரமல்ல

அமெக்ஸ் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி தாமோதரன் கூறும்போது, இப்போதைக்கு எந்த முக்கியமான முடிவும் எடுப்பது சரியாக இருக்காது. பிரச்சனையின் தீவிரம் குறைந்த பின்பே நிதி சம்பந்தமான முடிவுகளை எடுக்க முடியும். இப்போதைக்கு இருக்கும் வாடிக்கையாளர்களுக்கான சேவையை எப்படி சரியாக வழங்குவது, அவர்கள் மூலம் கூடுதல் வருமானம் பெற முடியுமா என்பது குறித்து திட்டமிட்டு வருகிறோம். அதே சமயத்தில் புதிய திட்டங்களை நிறுத்தி வைத்திருக்கிறோம். ஊழியர் நலனில் செய்யக் கூடிய இதர செலவுகளை குறைத்துவைத்திருக்கிறோம். தற்போதைய சூழலில் 10 சதவீதம் அளவுக்கு வருமானம் குறையும் என கணிக்கிறோம். இன்னும் சில நாட்களுக்கு பிறகுதான் என்ன நடக்கும் என்பது தெரியும். கல்லூரி முடித்தவர்களை நாங்கள் வேலைக்கு எடுத்துவிட்டோம். ஆனால் அவர்களுக்கு இன்னும் பயிற்சி அளிக்க முடியவில்லை. இந்த சூழ்நிலையில் கல்லூரி முடித்த வேலை ஆஃபர்கள் பெற்ற மாணவர்களுக்கு வேலை கிடைக்குமா என்னும் சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது எனக் கூறினார்.

புதிய புராஜக்ட்கள் இல்லை

ரியல் எஸ்டேட் துறையில் நடக்கும் விஷயங்களை அறிந்துகொள்ள பாரதி ஹோம்ஸ் நிறுவனத்தின் அருண் பாரதியிடம் பேசினோம். அனைத்து கட்டுமானப் பணிகளும் நிறுத்தப்பட்டதால் ஏற்கெனவே நிர்ணயம் செய்யப்பட்ட காலத்தைவிட 5 மாதங்கள் அளவுக்கு கால அவகாசத்தை ரெரா (Real Estate Regulatory Authority) நீட்டித்து வழங்கி இருக்கிறது.

பணிகள் ஏதும் நடைபெறாததால் வீடு முன்பதிவு செய்திருப்பவர்கள் பதற்றத்தில்  இருக்கிறார்கள். சம்பந்தப்பட்டவர்களின் வீடு எந்த நிலைமையில் இருக்கிறது என்பதை  அவர்களைத் தொடர்பு கொண்டு தெரிவித்து வருகிறோம். வேலை நின்றுவிட்டதால் கட்டிடப் பணியாளர்களுக்கு எந்தத் தொகையும் வழங்க முடியாத சூழலில் இருக்கிறோம். அதே சமயத்தில் கட்டிட வேலை நடக்கும் இடங்களில் பணியாளர்களை தங்க வைத்து அவர்களுக்கு உணவு வழங்கி வருகிறோம். எங்களின் நிரந்தர பணியாளர்களுக்கு மார்ச் மாத சம்பளத்தை வழங்கிவிட்டோம். ஏப்ரல் மாதத்தில் அவர்களின் பணிக்கு ஏற்ப ஊதியம் வழங்க திட்டமிட்டிருக்கிறோம். லாக்டவுன் காலம் முடிந்தாலும், மூலப்பொருட்கள் கிடைப்பதில் (செராமிக், செங்கல்) உள்ளிட்ட பல தட்டுபாடு இருக்கும்.

இந்த சூழலில் இப்போதைக்கு இருக்கும் புராஜக்ட்களில் கவனம் செலுத்துவதால் அடுத்த சில மாதங்களுக்கு ரியல் எஸ்டேட் துறையில் புதிய புராஜக்ட்கள் வர வாய்ப்பு இல்லை என அருண் பாரதி தெரிவித்தார்.

இந்திய தொழிலகக் கூட்டமைப்பு (சிஐஐ) நடத்திய ஆய்வில் 200-க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் கலந்து கொண்டிருக்கின்றனர். பெரும்பாலானவர்கள் வருமான இழப்பு ஏற்படும் என்றும், 52 சதவீத தலைமைச் செயல் அதிகாரிகள் வேலை இழப்புகள் நடக்கும் வாய்ப்பு இருக்கும் என தெரிவித்திருக்கிறார்கள். ரீடெய்ல் துறையில் 20 சதவீதத்துக்கு மேல் வேலை இழப்பு உருவாகும் என இந்திய ரீடெய்ல் சங்கம் தெரிவித்திருக்கிறது. கொரோனாவுக்குப் பிறகு 13 கோடி வேலை வாய்ப்புகள் ஆபத்தில் இருப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் சில நிறுவனங்கள் தற்போதைய லாக்டவுன் காலத்தை விடுமுறையாக எடுத்துக்கொள்ள ஊழியர்களுக்கு அறிவுறுத்தி இருப்பதாகவும் தெரிகிறது. முறைப்படுத்தப்பட்டத் துறைகளிலே இவ்வளவு பிரச்சினைகள் என்றால் முறைப்படுத்தப்படாதத் துறையில் இருக்கும் சிக்கல்களை புரிந்துகொள்வதே கடினமாக இருக்கும். இந்த சமயத்தில் அரசு உதவ வேண்டும் என்பதை வலியுறுத்தும் அதே சமயத்தில், பொதுமக்களும் சேமிப்பையும் உயர்த்த வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற பேரிடர் காலங்களில் இருந்து தற்காத்துக்கொள்ள முடியும்.

நன்றி : யுவர் ஸ்டோரி தமிழ்