சிசிடிவி கேமரா என்பது இதுவரை குற்றங்களைக் கண்டுபிடிக்கும் கருவியாக மட்டுமே நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் சிசிடிவி மூலம் அனல்டிக்ஸ் செய்ய முடியும் என்பதையும் அதனை தொழில் விரிவாக்கத்துக்கு பயன்படுத்த முடியும் என்பதை ‘Tangoeye’ ‘டாங்கோ ஐ’ எனும் நிறுவனம் செய்து காட்டியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு இதன் நிறுவனர் சுரேந்தரைச் சந்தித்தேன்.

கல்லூரி படிப்பு மற்றும் இந்த நிறுவனத்துகான ஐடியா, தற்போதைய தொழில் சூழல் குறித்து உரையாடினேன். Tangoeye நிறுவனர் சுரேந்தர் கோவையில் பிறந்து வளர்ந்தேன். பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் இளங்கலை நிர்வாக படிப்பு முடித்தேன். அதனைத் தொடர்ந்து கிரெட் சூஸ் நிறுவனத்தில் ஐந்தாண்டுகள் பணியாற்றினேன். கடந்த 2017-ம் ஆண்டு டாங்கோ ஐ என்னும் நிறுவனத்தைத் தொடங்கினேன். தற்போது சென்னையைத் தலைமையாகக் கொண்டு இந்த நிறுவனத்தை நடத்தி வருகிறோம், என்றார் சுரேந்தர்.

சீனாவுக்கு அடுத்தபடியாக அதிகளவுக்கு சிசிடிவியை பயன்படுத்தும் நாடாக இந்தியா இருக்கிறது. ஆனால் இந்த கண்காணிப்புக் கேமராக்கள் குற்றம் நடந்த பிறகு கண்டுபிடிக்க மட்டுமே பயன்படுகிறது. செயற்கை நுண்ணறிவு மூலம் இந்த கேமிராக்களை பிஸினஸ் வளர்ச்சிக்கு எப்படி பயன்படுத்த முடியும் என்பதுதான் எங்களுடைய தொழில்நுட்பம். ரீடெய்ல் துறையின் வளர்ச்சிக்கு எங்களுடைய தொழில்நுட்பம் பெரிதும் பயன்படும். தொழிலுக்கு எப்படி பயன்படுத்த முடியும் என்பது மட்டுமல்லாமல் ஒருவேளை திருட்டு நடைபெரும் சூழல் இருந்தால் அதனையும் தவிர்க்க முடியும் என கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறும்போது, “ஒரு ரீடெய்ல் ஸ்டோரில் சிசிடிவி கேமராவுடன் எங்களுடைய அனல்டிக்ஸை பயன்படுத்தும் போது முதலில் செக்மண்ட் செய்துகொள்ள முடியும். ஒரு கடையில் எந்த சமயத்தில் அதிக ஆட்கள் வருகிறார்கள், எப்போது அதிக வியாபாரம் நடக்கிறது, எப்போது அதிக பணியாளர்கள் தேவை என்பது உள்ளிட்டவற்றை பல தகவல்களை நம்மால் அறிந்துகொள்ள முடியும். இதன் மூலம் நம் தேவைக்கேற்ப செயல்பட முடியும்.” அதேபோல கடைகளுக்கு பாதுகாப்பினையும் வழங்க முடியும். வாடிக்கையாளர்களின் நடவடிக்கைகளை நாங்கள் தொடர்ந்து கண்டறிந்து வருகிறோம். 20-க்கும் மேற்பட்ட நடவடிக்கைகளை நாங்கள் கண்காணித்திருக்கிறோம். இதன் மூலம் ஒரு வாடிக்கையாளரின் நடவடிக்கையில் மாற்றம் தெரிந்தால் அவரை மட்டும் கண்காணித்து திருட்டு உள்ளிட்ட அசம்பாவிதங்களை இந்த தொழில்நுட்பம் மூலம் நடக்காமல் தடுக்க முடியும்.

உதாரணத்துக்கு ஒரு கடையில் நுழையும் வாடிக்கையாளர் கூட்டம் இல்லாத பகுதியில் அதிக நேரம் செலவிடுவது,  ஊழியர்களிடன் உரையாடுவதை தவிர்ப்பது, பதற்றமாக இருப்பது உள்ளிட்ட இயல்பு இருப்பவர்கள், கடையில் உள்ள பொருட்களை திருடும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. இது போன்ற சுபாவம் உள்ளவர்கள் திருடாமல் கூட இருக்கலாம். ஆனால் இத்தகைய இயல்பு உள்ளவர்கள் கடையில் இருக்கும் போது பணியாளர்களை எங்களது தொழில்நுட்பம் எச்சரிக்கும். அதனால் திருட்டு நடைபெறாமல் பார்த்துக்கொள்ள முடியும். மேலும் ஊழியர்கள் திறனையும் இதில் ஆராய முடியும். அதன் மூலம் பணியாளர்களை எந்த சமயத்தில் சிறப்பாக பயன்படுத்த முடியும் என்பதை கண்டறியலாம்.

 சமூக இடைவெளியில் சிசிடிவி தொழில்நுட்பம்

கொரோனா பரவலைத் தடுப்பதற்கு சமூக இடைவெளி அவசியம். இந்த சமூக இடைவெளி என்பது இன்னும் சில ஆண்டுகளுக்கு நீடிக்கலாம் என்பதே வல்லுநர்களின் கருத்தாக இருக்கிறது. எங்களுடைய தொழில்நுட்பத்தை பயன்படுத்தும்போது ரீடெய்ல் ஸ்டோர்களில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுகிறதா என்பதையும் உறுதிசெய்ய முடியும். சமூக இடைவெளி குறையும் பட்சத்தில் நமக்கு எச்சரிக்கை வரும். இதன் மூலம் கடைகளில் சமூக இடைவெளியை நாம் கண்காணிக்கலாம். ரீடெய்ல் கடைகளில் மட்டுமல்லாமல் மால், பொதுமக்கள் கூடும் இடங்கள் என அனைத்து இடங்களிலும் எங்களுடைய டெக்னாலஜியைப் பயன்படுத்தி சமூக இடைவெளியை உறுதி செய்ய முடியும்.

நிதி திரட்டல்

கிரெட் சூஸ் மற்றும் டெமாசெக் ஹோல்டிங் நிறுவனத்தில் பணியாற்றிய என்னுடைய ஆலோசகர்கள் டாங்கோ ஐ நிறுவனத்தில் ஏஞ்சல் முதலீடு செய்திருக்கிறார்கள். இதுவரை சென்னை, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் 500-க்கும் மேற்பட்ட ரீடெய்ல் கடைகளில் எங்களுடைய தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் பல ரீடெய்ல் ஸ்டோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். தற்போதைய ஆண்டு வருமானம் ஒரு கோடி ரூபாய் அளவில் இருக்கிறது. இந்த நிலையில் அடுத்தக் கட்ட நிதித் திரட்டல் இறுதிக்கட்டத்தில் இருக்கிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த நிதி திரட்டல் இன்னும் முடிவடையவில்லை.

சமூக இடைவெளியை உறுதி செய்வதற்கு மட்டும் ஒரு ரீடெய்ல் நிறுவனத்துக்கு ஆண்டுக்கு சுமார் 25,000 ரூபாயை ஆண்டு கட்டணமாக வசூலித்து வருகிறோம்.  தற்போதைய அசாதரண சூழலில், சமூக இடைவெளியை உறுதி செய்யும் தொழில்நுட்பத்தை மட்டும் அடுத்த மூன்று மாதத்துக்கு இலவசமாக பயன்படுத்திக்கொள்ள முடியும் என சுரேந்தர் தெரிவித்தார்.  உங்களிடம் உள்ள சிசிடிவியை தொழிலுக்கும் பயனுள்ளதாக மாற்றிக்கொள்ள முடியுமா என்பது குறித்து யோசியுங்கள்.

நன்றி :யுவர் ஸ்டோரி தமிழ்