கார்பன் ஃபைபர் குறித்து ஏதேனும் ஐடியா உங்களுக்கு உள்ளதா?
இதைப் பற்றி பெரும்பாலானவர்களுக்கு தெரிவதற்கு வாய்ப்பு இல்லை. குறைந்த எடையும், அதிக உறுதியும் கொண்ட மெட்டிரீயல் தான் கார்பன் ஃபைபர் (Carbon fibre). பல மடங்கு எடை குறைவாகவும் ஸ்டீலை விட பல மடங்கு உறுதி உடையது கார்பன் ஃபைபர். புரிதலுக்காக இந்த உதாரணத்தை எடுத்துக்கொள்வோம். ரிமோட் கண்ட்ரோல் எடை குறைவு என்பதால் சீக்கீரம் உடைகிறது. ஒரு வேலை அதே எடையில் உடையாத ரிமோட் என்றால் அதுதான் கார்பன் ஃபைபர்.
ட்ரோன், விமானத்துறை, ராக்கெட், ஆட்டோமொபைல் துறைக்கு தேவையான உறுதிபாகங்கள் என பல இடங்களில் கார்பன் ஃபைபர் பயன்படுகிறது. ஆனால் இதுவரை கார்பன ஃபைபர்கள் கைவினைப் பொருட்கள் போலவே செய்யப்பட்டு வந்தது. மெஷின்களைக் கொண்டு தயாரிக்கப்படுவதில்லை. 3டி பிரிண்டிங் போல இதனை ஏன் நாம் தயாரிக்கக் கூடாது என்னும் எண்ணத்தில் உருவானது தான் Fabheads என்னும் ஸ்டார்ட்-அப் நிறுவனம்.
ஐஐடியில் படித்த தினேஷ் கனகராஜ் ஐடியாவில் உருவானதுதான் ஃபேப்ஹெட்ஸ்’. இந்த நிறுவனம், ஸ்டார்ட் அப்’ களுக்கு மத்திய அரசு நடத்திய Prarambh ஸ்டார்ட் அப் இந்தியா சர்வதேச மாநாட்டில் காட்சிப்படுத்தப்பட்டு, ஸ்டார்ட் அப் பிரிவில் மத்திய அரசின் விருதான சில வாரங்களுக்கு முன்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில் தினேஷிடம் உரையாடினோம்.
தன்னுடைய ஆரம்பகாலம் குறித்து பேசத் தொடங்கினார் தினேஷ். ஐஐடி மெட்ராஸில் ஏரோஸ்பேஸ் இன்ஜினீயரிங் முடித்தேன். அதனை தொடர்ந்து இஸ்ரோவில் கேம்பஸ் மூலம் மூன்று ஆண்டுகள் (திருவனந்தபுரம்) பணியாற்றினேன். எங்களது பிரிவில் இருந்து மூன்று நபர்கள் மட்டுமே தேர்வாகி இருந்தோம். மூன்று ஆண்டுகள் இஸ்ரோவில் பணியாற்றினேன். அங்கு பல அனுபவங்கள் கிடைத்தால், எதோ நாம் நினைத்ததை செய்ய முடியாமல் இருப்பதாகவே உணர்ந்தேன். அதனால் இஸ்ரோ வேலையை விட்டேன். ஆனால் குடும்பத்தில் இருந்து நண்பர்கள் வரை கடுமையான எதிர்வினை இருந்தது. ஆனாலும் வேலையை விட்டுவிட்டேன். இருந்தாலும் உடனடியாக நிறுவனம் தொடங்கவில்லை. சுமார் ஓர் ஆண்டு வரை அதற்கான திட்டமிடலில் கவனம் செலுத்தினேன். காரணம் சர்வதேச அளவில் இதுபோன்ற பிரிவில் ஆறு நிறுவனங்கள் மட்டுமே உள்ளன.
அதனால் எங்கள் நிறுவனத்துக்கான வடிவமைப்புக்கு அதிகக் கவனம் எடுத்துக்கொண்டோம். இதற்கான 3டி பிரிண்டிங் மெஷின்களை வடிமைக்கத் தொடங்கினோம். ஆரம்பத்தில் எங்களுக்கு பொருளாதார ரீதியில் பல சவால்கள் இருந்தன. காரணம் ஒரு கிலோ ஸ்டீல் என்பது ரூ.600-க்கு கிடைக்கும். ஆனால் கார்பன் ஃபைபரின் ஒரு கிலோ என்பது ரூ.8,000 வரை செலவாகும். அதாவது நாங்கள் ஒரு விஷயத்தை தயாரிக்கவே அதிகத் தொகை தேவைப்பட்டது. இதற்கு பிறகுதான் விற்பனை. சரியான அவுட்புட் கிடைத்தால்தான் விற்பனை செய்ய முடியும் என்பதால் ஆராய்ச்சிக்கே (R&D) அதிக பொருளாதாரம் எங்களுக்குத் தேவைப்பட்டது.
இதற்காக ஐஐடி எங்களுக்கு 30 லட்ச ரூபாய் ஃபண்டிங் வழங்கியது. இதனை அடிப்படையாகக் கொண்டு சில காலம் நிறுவனத்தை நடத்தினோம். அதனை தொடர்ந்து ஏஞ்சல் முதலீட்டாளர்களிடம் இருந்து சுமார் 4 கோடி ரூபாய் அளவுக்கு நிதியைத் திரட்டினோம். இதுவரை கைவினைப் பொருட்களைப் போல இருந்த கார்பன் ஃபைபர்களை வெற்றிகரமாக 3டி பிரிண்டிங் மூலம் கொண்டுவந்துவிட்டோம். தற்போது ட்ரோன், பாதுகாப்பு உள்ளிட்ட நிறுவனங்களுக்குத் தேவையான உதிரிபாகங்களை வழங்கி வருகிறோம். இதன் அடுத்தகட்டமாக 3டி பிரிண்டிங் மெஷின்களையே விற்பனை செய்யத் திட்டமிட்டிருக்கிறோம் என்றார்.
மெஷின்களை விற்பனை செய்யாமல், உதிரிபாகங்களை மட்டும் விற்பனை செய்தால் நிறுவனத்தின் வருமானம் அதிகரிக்குமே என்னும் கேள்விக்கு, விளக்கமாக பதில் அளித்தார் தினேஷ். 3டி பிரின்டிங் மெஷின்களை விற்பனை செய்வதும் எங்களுடைய ஒரு உத்திதான். ஆனால் இந்த மெஷின்கள் 15 லட்சம் முதல் ரூ.1.5 கோடி வரை விலை நிர்ணயம் செய்திருக்கிறோம். இந்தவகையான மெஷின்களை விற்க வேண்டும் என்றால் வாடிக்கையாளர் திருப்தி முக்கியம். அதனால் இதுவரை அந்த நிறுவனங்களுக்கு சில சாம்பிள்கள் வழங்கினோம். திருப்தி அடைந்த பிறகு அந்த மெஷினையே விற்கிறோம். இந்த மெஷினகளை விற்கும் தொகையை அடிப்படையாக வைத்துதான் இதனைவிட பெரிய விலையுள்ள மெஷின்களை தயாரிக்கத் திட்டமிட்டுள்ளோம். இந்த பெரிய மெஷினின் விலை ரூ.5 கோடிக்கு மேல். இந்த மெஷின்களை சந்தையில் விற்கும் எண்ணம் இல்லை. ஆனால் இந்த மெஷின் மூலம் தயாரிக்கப்படும் மூலப்பொருட்களை விற்கத் திட்டமிட்டிருக்கிறோம். இதற்காக அடுத்தகட்ட நிதி திரட்டலுக்கு திட்டமிட்டுவருகிறோம். விரைவில் இது தொடர்பாக இறுதி வடிவம் கிடைக்கும். இதுவரை 16 நபர்கள் எங்களுடைய நிறுவனத்தில் பணியாற்றுகிறார்கள்.
நாங்கள் டெக்னாலஜி நிறுவனம் என்பது எப்படி உண்மையோ அதேபோல நாங்கள் உற்பத்தித் துறை சார்ந்த நிறுவனமும் கூட. அதனால் லாக்டவுன் காலத்தில் விற்பனை இல்லை. ஆனால் கடந்த காலாண்டில் கணிசமான விற்பனை நடந்தது. அடுத்தடுத்த காலங்களில் இந்த பிரிவின் வளர்ச்சி கணிசமாக இருக்கும். பாதுகாப்பு, ட்ரோன், விமானம் உள்ளிட்ட பிரிவுகள் வேகமாக வளர்ச்சி அடைகின்றன, இந்த வளர்ச்சியில் எங்களின் பங்கும் இருக்கும் என குறிப்பிட்டார். இதனை தொடர்ந்து மத்திய அரசின் விருது குறித்து உரையாடினோம். ஓர் ஆண்டுக்கு முன்பு ஸ்டார்ட் அப் விருதுக்கு விண்ணப்பித்தோம். ஒவ்வொரு கட்டமாக கடந்து, இறுதியாக சில வாரங்களுக்கு முன்பு எங்களுக்கு அவ்விருது வழங்கப்பட்டது. இதில் ரொக்கப் பரிசு கிடைத்து என்பது மகிழ்ச்சிதான் என்றாலும் அதைவிட பல சாதகங்கள் எங்களுக்குக் கிடைத்தன.
ஸ்டார்ட் அப் பிரிவில் செயல்படும் பலரும் ஒரு குழுவாக செயல்பட்டோம். எதேனும் சிக்கல் என்றால் ஒருவருடன் ஒருவர் உரையாட முடியும். வெற்றியாளர்கள் மட்டுமல்லாமல், இறுதி கட்டத்துக்கு வந்தவர்களுடனும் தொடர்பில் இருக்கிறோம். நிதி சார்ந்த தேவைக்கு யாரை அணுகுவது என்பதில் தொடங்கி பல விஷயங்களைத் தெரிந்து கொண்டோம். எங்களுடைய குழுவில் ஸ்டார்ட் அப் இந்தியாவின் இணை செயலாளர் அனில் அகர்வாலும் இருக்கிறார். ”எங்களுக்கு விருது கிடைத்தது மட்டுமல்லாமல் மத்திய அரசு ஏற்பாடு செய்திருந்த ஸ்டார்ட் அப் மாநாட்டில் கலந்து கொண்டு பிரதமருடன் உரையாடும் வாய்ப்பும் கிடைத்தது.
வெற்றியடைந்த ஸ்டார்ட் அப் நிறுவனர்களின் தலைவர்கள் பிரதமரிடம் உரையாற்றினோம். நாங்கள் செய்துவரும் சில விஷயங்களை பற்றிவிவரித்தோம். நிகழ்ச்சியின் இறுதியில் மொத்தமாக ஸ்டார்ட் அப்’கள் வளர்ச்சி அடைவது மகிழ்ச்சிகுரியது என பிரதமர் குறிப்பிட்டார்.” ஸ்டார்ட்-அப் இந்தியா மாநாட்டில் பிரதமர் உடன் உரையாடும் தினேஷ் கனகராஜ் அதேபோல சமீபத்தில் இந்திய விமானப்படைக்கு ஹெலிகாப்டர் பிளேட்களை தயாரிக்கும் பணிகளுக்கான பேச்சுவார்த்தையை தொடங்கியிருப்பது மகிழ்ச்சி என தினேஷ் கூறினார்.
இஸ்ரோ வேலை கிடைப்பது கடினம். அந்த வேலையை விடுவது அதைவிட கடினம். தவிர அதிக விலையுள்ள மூலப்பொருட்களை (கார்பன் ஃபைபர்) தேர்ந்தெடுத்து அதில் அடுத்தகட்டத்துக்கு செல்வது சாதாரண விஷயம் அல்ல. வாழ்த்துகள் தினேஷ்.
நன்றி யுவர் ஸ்டோரி தமிழ்
Recent Comments