நாட்டின் வளர்ச்சிக்கு வங்கிகளின் பங்களிப்பு முக்கியமானது. ஆனால், சமீபகாலமாக இந்திய வங்கிகள் தொடர்ந்து சிக்கலில் தவித்துவருகின்றன. சில மாதங்களுக்கு முன்பு யெஸ் வங்கி; தற்போது லக்ஷ்மி விலாஸ் வங்கி சிக்கலில் சிக்கியிருக்கிறது.

கடந்த செப்டம்பர் 25-ம் தேதி வங்கியின் இயக்குநர் குழுவை மறுநியமனம் செய்வதற்கு பங்குதாரர்கள் அனுமதி வழங்கவில்லை (10 இயக்குநர்களில் ஏழு நபர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதில் கடந்த ஜனவரியில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட தலைமைச் செயல் அதிகாரிக்கும் வாய்ப்பில்லை!). 60% பங்குதாரர்கள் இந்தத் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்திருக்கின்றனர்.

சிக்கலில் லக்ஷ்மி விலாஸ் பேங்க்..! - இனி என்ன ஆகும்?

மேலும், வங்கியின் இயக்குநர் குழுவைத் தற்காலிகமாக ரத்து செய்ய வேண்டும் என்னும் பொதுநல வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வங்கியின் முன்னாள் ஊழியர் தாக்கல் செய்துள்ள இந்த வழக்கை நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டுள்ளது.

நிராகரிப்பு, கைது..!

ரிசர்வ் வங்கி அனுமதி அளித்த இயக்குநர் குழுவைப் பங்குதாரர்கள் நிராகரித்திருப்பது இதுவே முதல் முறை. இந்த நிலையில், இயக்குநர்கள் கமிட்டி (committee of directors) என்னும் புதிய அமைப்பை உருவாக்கி, அதன் மூலமே இந்த வங்கி செயல்பட்டு வருகிறது. தவிர, வங்கியின் இரண்டு முன்னாள் ஊழியர்களை டெல்லி பொருளாதாரக் குற்றப்பிரிவு கைது செய்துள்ளது. ரெலிகர் நிறுவனத்தின் ஃபிக்ஸட் டெபாசிட்டில் (ரூ.729 கோடி) முறைகேடு செய்ததுக்காக இந்தக் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மோசமான நிதிநிலையே காரணம்..!

பங்குதாரர்களின் இத்தகைய எதிர்ப்புக்கு நிதிநிலைமையே காரணம் என்கிறார்கள் விஷயம் தெரிந்தார்கள். கடந்த 10 காலாண்டு களாக வங்கி நஷ்டத்தையே சந்தித்து வருகிறது. 2018-ம் நிதி ஆண்டில் ரூ.580 கோடி, 2019-ம் நிதி ஆண்டில் ரூ.890 கோடி மற்றும் 2020-ம் நிதி ஆண்டில் ரூ.840 கோடி அளவுக்கு வங்கியின் நஷ்டம் இருக்கிறது.

இந்த வங்கியின் வாராக்கடன் அளவும் கட்டுக்கடங்காமல் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. 2018-ம் நிதி ஆண்டு முடிவில் வங்கியின் மொத்த வாராக்கடன் 5.8 சத விகிதமாக இருந்தது. கடந்த மார்ச் முடிவில் 25.39% அளவுக்கு மொத்த வாராக்கடன் இருக்கிறது. வங்கியின் மூலதனத் தன்னிறைவு விகிதம் 0.17 சதவிகிதமாக மட்டுமே இருக்கிறது. (ஜூன் 30 நிலவரப்படி). ஆனால், ரிசர்வ் வங்கியின் விதிமுறைப்படி, 10.875% அளவுக்கு இந்த விகிதம் இருக்க வேண்டும். இதுபோல, வங்கியின் எந்தவொரு நிதி சார்ந்த தகவல்களும் ஆரோக்கியமாக இல்லை.

2006-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை இந்த வங்கியின் செயல்பாடுகள் சிறப்பாக இருந்திருக்கிறது. 2016-ம் ஆண்டுக்குப் பிறகு, அதிக வளர்ச்சியை இலக்காகக் கொண்டு பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதனால் பல கடன்கள் வாராக்கடன்களாக மாறியிருக்கின்றன எனப் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ள முன்னாள் ஊழியர் தெரிவித்திருக்கிறார்.

சென்னைக்கு வந்த பிறகே…

1926-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த வங்கி 2014-ம் ஆண்டு வரை கரூரை தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வந்தது. 2014-ம் ஆண்டு தலைமையிடம் சென்னைக்கு மாற்றப்பட்டது அப்போது முதல் இறங்குமுகம் தொடங்கிவிட்டதாகக் கருதும் ஊழியர்களும் இருக்கிறார்கள்.

ரெலிகர், ஜெட் ஏர்வேஸ், காக்ஸ் அண்ட் கிங்ஸ், நீரவ் மோடி, காபி டே, ரிலையன்ஸ் ஹவுஸிங் ஃபைனான்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட கடன் சுமார் ரூ.2,000 கோடிக்கு மேல் இருக்கும். இவை தற்போது பெரும் சிக்கலில் இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். தவிர, தவறான நடவடிகைகளும், பல தகவல்கள் பொதுமக்களுக்குத் தெரிவிக்கவில்லை என்றும் அவர் கூறியிருக்கிறார். 2017-ம் ஆண்டு செப்டம்பர் காலாண்டில் 10 கோடி அளவுக்கு லாபம் என அறிவிக்கப் பட்டிருக்கும். ஆனால், அந்தக் காலாண்டில் சுமார் ஏழு கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டிருக்கும் என்றும் முன்னாள் ஊழியர் குற்றம் சாட்டியிருக்கிறார்.

உடனடித் தேவை ரூ.1,500 கோடி..!

இந்த வங்கியில் பல சிக்கல்கள் இருந்தாலும் இப்போதைக்கு உடனடித் தேவை ரூ.1,500 கோடி எனத் தெரிகிறது. இந்தத் தொகை இருக்கும் பட்சத்தில்தான் வங்கி இயல்பு நிலைக்குத் திரும்பும் என்கிறார்கள். தற்போது இந்தத் தொகையைத் திரட்டும் நடவடிக்கையில் இயக்குநர் கமிட்டி திட்டமிட்டு வருகிறது.

சிக்கலில் லக்ஷ்மி விலாஸ் பேங்க்..! - இனி என்ன ஆகும்?

லக்ஷ்மி விலாஸ் வங்கியின் சிக்கல் சில காலாண்டுகளாக இருந்து வருவதால், நிதி திரட்டுதல் அல்லது இணைப்பு நடவடிக்கையை பல மாதங்களாகவே எடுத்துவருகிறது. பிளாக்ஸ்டோன், பெயின் மற்றும் டி.பி.ஜி ஆகிய பிரைவேட் ஈக்விட்டி நிறுவனங்கள் சுமார் ரூ.2,000 கோடி அளவுக்கு முதலீடு செய்யத் திட்டமிட்டன. ஆனால், லக்ஷ்மி விலாஸ் வங்கி வாராக்கடனுக்காக அதிக ஒதுக்கீடு செய்ய வேண்டியிருக்கும் என கே.பி.எம்.ஜி நிறுவனம் அறிக்கை வெளியிட்டதைத் தொடர்ந்து அந்தத் திட்டம் முடிவுக்கு வந்தது. அடுத்து, வங்கித் துறையில் ஆர்வமாக இருந்த இந்தியாபுல்ஸ் நிறுவனம் வாங்குவதாக இருந்தது. ஆனால், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்த இணைப்புக்கு ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கவில்லை.

கடந்த ஜூன் மாதத்தில் கிளிக்ஸ் கேப்பிடல் நிறுவனத்துடன் இணைவதற்காக ஒப்பந்தத்தில் இந்த வங்கி கையொப்பமிட்டது. ஆனால், அந்த இணைப்பு இதுவரை முழுமை அடையவில்லை.

இந்த நிலையில், லக்ஷ்மி விலாஸ் வங்கியை மற்ற வங்கி அல்லது நிதி நிறுவனத்துடன் இணைக்கவே ரிசர்வ் வங்கி திட்டமிடும் எனத் தகவல்கள் தெரியவருகின்றன. ஒருவேளை, கிளிக்ஸ் கேப்பிடல் இணைப்பு கைகூடவில்லை என்றால், பஞ்சாப் நேஷனல் வங்கி வாங்கத் திட்டமிட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. மற்றொரு வங்கியும் லக்ஷ்மி விலாஸ் வங்கியின் நிதி சார்ந்த தகவல்களை ஆராய்ந்து வருவதாகத் தெரிகிறது.

பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு மத்திய, மேற்கு, கிழக்கு என இந்தியாவின் பெரும்பான்மையான பகுதிகளில் போதுமான அளவுக்கு கிளைகள் உள்ளன. லக்ஷ்மி விலாஸ் வங்கியைத் தன்னுடன் இணைத்துக்கொள்ளும்பட்சத்தில் தமிழகத்தில் மட்டுமல்லாமல், தென்னிந்திய சந்தையையும் கைப்பற்ற முடியும் எனத் திட்டமிடுவதாகத் தெரிகிறது.

பணம் போட்டவர்களின் கதி..?

வங்கியின் நிதி நிலைமை மோசமாக இருந்தாலும் டெபாசிட்தாரர்களுக்கு பிரச்னை ஏதும் இல்லை என வங்கியின் இயக்குநர் கமிட்டி தெரிவித்திருக்கிறது. வங்கிகளின் நலனைச் சொல்லும் முக்கியமான அளவீடான லிக்விடிட்டி கவர் ரேஷியோ (liquidity coverage ratio) 262% அளவுக்கு இருக்கிறது. ரிசர்வ் வங்கி விதிமுறைப்படி, 100% இருந்தாலே போதுமானது. அதேபோல, புரொவிஷன் கவரேஜ் ரேஷியோ (Provision coverage ratio) 72.6 இருக்கிறது. ரிசர்வ் வங்கி விதிமுறைப்படி, இது 70% இருந்தாலே போதுமானது. இதனால் முதலீட்டாளர்கள் பதற்றம் அடையத் தேவையில்லை. ஆனால், இவையெல்லாம் தற்காலிக சந்தோஷம் மட்டும்தான். நீண்டகால அடிப்படையில் புதிய முதலீட்டாளர்கள் வருவதோ, வங்கியை வேறு வங்கியுடன் இணைப்பதோ மட்டும்தான் இது சரியான தீர்வாக இருக்க முடியும் என்கிறார்கள் வங்கித் துறை நிபுணர்கள்.

இந்த வங்கியின் பங்குகளில் பல ஆண்டு களாக முதலீட்டைத் தொடரும் முதலீட் டாளர்கள் மற்றும் டெபாசிட்டைத் தொடரும் வாடிக்கையாளர்கள் இந்த வங்கியின் செயல்பாடுகளைத் தொடர்ந்து கண்காணிப்பது அவசியம்.

பங்கை விற்கலாமா?

ரு காலத்தில் முதலீட்டாளர்களின் விருப்பமான பங்காக இருந்தது லக்ஷ்மி விலாஸ் பேங்க் பங்குகள். 2017-ம் ஆண்டு ஒரு பங்கின் விலை ரூ.187 என்னும் உச்சபட்ச விலைக்குச் சென்றது. ஆனால், தற்போது 18 ரூபாய் என்னும் அளவில் வர்த்தகமாகி வருகிறது.

சிக்கலில் லக்ஷ்மி விலாஸ் பேங்க்..! - இனி என்ன ஆகும்?

இந்தப் பங்குகளை ஏற்கெனவே வாங்கியவர்கள் தொடர்ந்து வைத்திருக்கலாமா அல்லது விற்றுவிடலாமா என்ற கேள்வியை பங்குச் சந்தை நிபுணர் ஏ.கே.பிரபாகரிடம் கேட்டோம்.

‘‘வங்கிகளைப் பொறுத்தவரை, நிலையான நிர்வாகக் குழு இருக்க வேண்டும். வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டும். அதே நேரம், எந்தத் தனிநபரையும் சார்ந்து இருக்காமல் விதிமுறைகளின்படி செயல்பட வேண்டும். ஆனால், இந்த விஷயங்களில் சிறிய வங்கிகள் வெளிப்படைத்தன்மை இல்லாமலே செயல்பட்டு வந்தன. கடந்த சில ஆண்டுகளாகவே நிலையான மற்றும் சரியான தலைமை வங்கிக்கு அமையவில்லை.

ரகுராம் ராஜன் வந்த பிறகுதான் வாராக்கடன் குறித்த வெளிப்படையான தோற்றம் நமக்கு முழுமையாகத் தெரிந்தது.

லக்ஷ்மி விலாஸ் வங்கியை மட்டுமல்ல, மேலும் சில சிறிய வங்கிகளின் செயல்பாடு சொல்லிக் கொள்ளும்படி இல்லை. இதுபோன்ற சிறிய வங்கிகள் கடந்த சில ஆண்டுகளாகவே முதலீட்டாளர்களுக்கு லாபம் கொடுக்கவில்லை. இதுபோன்ற பங்குகளில் முதலீடு செய்வதை நான் விரும்ப மாட்டேன். ஒருவேளை, தெரியாமல் முதலீடு செய்திருந்தால்கூட வெளியேறிவிடுவேன்’’ என்றார்.

தனலட்சுமி பேங்கிலும் பிரச்னை!

க்ஷ்மி விலாஸ் வங்கிப் பிரச்னை தொடர்பான பரபரப்பு அடங்குவதற்குள், தனலட்சுமி வங்கி பிரச்னை தொடங்கிவிட்டது. தனலட்சுமி வங்கியின் தலைமைச் செயல் அதிகாரியின் (Sunil Gurbaxani) மறு நியமனத்தைப் பங்குதாரர்கள் நிராகரித் திருக்கிறார்கள். கடந்த புதன்கிழமை 93-வது ஆண்டு பொதுகுழுக் கூட்டம் நடந்தது. இதில் 10 தீர்மானங்கள் ஓட்டெடுப்புக்கு வந்தன. இதில் தலைமைச் செயல் அதிகாரியின் நியமனத்துக்கு மட்டும் 90% பங்குதாரர்கள் எதிர்ப்பு தெரிவித்திருக் கிறார்கள்.

கலாசார ரீதியிலான கருத்து வேறுபாடுகள் இருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜூன் மாதத்திலிருந்து மூன்று இயக்குநர்கள் வங்கியிலிருந்து விலகியிருக்கிறார்கள்.

சுனில் வங்கித் துறையில் 35 ஆண்டுக்கால அனுபவம்மிக்கவர். பங்குதாரர்கள் எதிராக வாக்களித்தாலும், இன்னும் ராஜினாமா செய்யவில்லை. ரிசர்வ் வங்கியின் முடிவுக்காகக் காத்திருக்கிறேன் என சுனில் தெரிவித்திருக்கிறார்.