சிறு தொழில்கள் நிலையான வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாக TiE மற்றும் Game (Global Alliance for Mass Entrepreneurship) நடத்திய ஆய்வில் தெரியவந்திருக்கிறது. இது தொடர்பாக டை அமைப்பின் தலைவர் சி.கே.ரங்கநாதன் செய்தியாளர்களை சந்தித்து உரையாடினார். இந்த சர்வே முடிவுகளும் அதனைth தொடர்ந்து சி.கே.ரங்கநாதன் கூறியதும் இதோ!

Mass Entrepreneurship அதாவது ’பெருந்திரள் தொழில்முனைவு’ என்னும் வார்த்தை புதிதாக இருக்கலாம். ஆனால் நாம் தினமும் சந்திக்கும் சிறிய தொழில்முனைவுகளைத் தான் Mass Entrepreneurship என அழைக்கிறோம். நம்மைச் சுற்றி சிறிய பேக்கரி, ஓட்டல், லேத் உள்ளிட்ட உள்ளூர் தேவைகளைப் பூர்த்தி செய்பவர்கள்தான் அதிக எண்ணிக்கையிலான நிலையான வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருபவர்கள் இவர்கள். தமிழகத்தில் இவர்களின் நிலை என்னவாக இருக்கிறது என்பது குறித்து அறிவதற்காக சர்வே ஒன்றை நடத்தியுள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள 21 மாவட்டங்களில் உள்ள 455 சிறு நிறுவனங்களிடம் இந்த சர்வே நடத்தப்பட்டது. 9 கல்லூரிகளில் உள்ள 247 மாணவர்கள் மூலம் இந்த ஆய்வு செய்யப்பட்டது.

ஒவ்வொரு மாணவரும் 2 முதல் 5 தொழில் முனைவோரை சந்தித்து அவர்களிடம் உரையாடி தகவல்களைப் பெற்றனர். இதில் பெரும்பாலானவை வர்த்தகம் மற்றும் சேவைத் துறையை சேர்ந்தவர்களே இருந்தனர். உற்பத்தித் துறையை சார்ந்த சிறு தொழில்முனைவோர்கள் மிகவும் குறைவாகவே இருந்தார்கள்.

ஆய்வு முடிவுகள் மற்றும் தேவையான மாற்றங்கள்:

இந்த நிறுவனங்கள் சராசரியாக 13 ஆண்டுகளாக தொழிலில் உள்ளன. இந்த சர்வேயில் உள்ள 50 சதவீதத்துக்கும் மேலான நிறுவனங்கள் பத்து ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றன. சர்வதேச அளவில் சிறு நிறுவனங்கள், முதல் சில ஆண்டுகளிலேயே தோற்றுப்போகும் சூழலில், இந்த நிறுவனங்களில் பெரும்பாலும் பத்து ஆண்டுகளுக்கு மேல் செயல்பாட்டில் இருப்பதால் நிலையான வேலை வாய்ப்பினை உருவாக்கி வருகின்றன எனத் தெரிய வந்தது.

சிக்கல்கள் என்ன?

இந்த நிறுவனங்கள் நிலையான செயல்பாடுகள் கொண்டிருந்தாலும் இவர்களுக்கென சில பொதுவான சில சிக்கல்கள் உள்ளன. பெரும்பாலான நிறுவனங்கள் இன்னும் ரொக்கத்தை கையாளுகின்றன. வங்கிக் கணக்கு மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனை போன்றவை இவர்களுக்கு இன்னும் எட்டாமலே உள்ளன.

என்ன செய்யலாம்?

இந்த நிறுவனங்களுக்கு குறுகிய காலம் மற்றும் நீண்ட காலத்தில் உதவி செய்வதன் மூலம் இந்த நிறுவனங்கள் மேலும் வளர்ச்சியடையும் வாய்ப்பு இருக்கிறது.

  • பெரும்பாலான நிறுவனங்களின் உரிமையாளர்கள் ஸ்மார்ட் போன் பயன்படுத்துகிறார்கள். ஆனால் அவர்களுக்கு டிஜிட்டல் மார்கெட்டிங் குறித்த புரிதல் குறைவாக இருக்கிறது. அதனால் டிஜிட்டல் மார்கெட்டிங் குறித்த வகுப்பு எடுக்கலாம்.
  • மேலும் தொழில்முனைவோர் மாநாடு சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் நடக்கிறது. இதனைத் தவிர்த்து சிறு நகரங்களிலும் இவர்களுக்கு பிரத்யேகமான கருத்தரங்குகளை நடத்தலாம். மொத்தமாக நடத்தாமல் பேக்கரி வைத்திருப்பவர்கள் என்றால் பேக்கரி தொழிலில் என்ன செய்யலாம் என்பது குறித்து பிரத்யேகமான வகுப்புகள் மூலமாக இவர்களை அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்ல முடியும்.
  • நீண்ட கால அடிப்படையில் மொபைல் மூலம் கணக்குகளை பதிவேற்றுவது, சிறு தொழில்களுக்கு ஏற்றவாறு மொபைலில் கண்டெண்ட்களை உருவாக்குவது உள்ளிட்டவற்றை செய்யலாம்.
  • அரசாங்கமும் இவர்களுக்கென பிரத்யேகக் கொள்கைகளை உருவாக்கலாம். உதாரணத்துக்கு ’ஸ்கில் இந்தியா’ திட்டத்தின் கீழ், இவர்களை போன்றவர்களை மேம்படுத்த ஒரு குறிப்பிட்டத் தொகையை ஒதுக்கலாம்.

மொத்தமாக தொழில்களை மேம்படுத்துவது என அணுகாமல், ஒவ்வொரு தொழிலில் உள்ள சிக்கல்கள் வாய்ப்புகள் குறித்து தமிழில் விளக்கும் போது இந்த தொழில்கள் மேலும் வளர்ச்சியடையும் வாய்ப்பு இருக்கிறது என சி.கே.ரங்கநாதன் குறிப்பிட்டார். மேலும் இந்த தொழில்கள் வளர்ச்சியடையும் போது வேலைவாய்ப்பு மேலும் உருவாகும், தவிர உள்ளூர் பொருளாதாரமும் வளர்ச்சியடையும் என கூறினார். இந்த ஆய்வினை ’பூர்ணதா’ (Poornatha) என்னும் அமைப்பு மூலம் நடத்தப்பட்டு, இந்த சர்வே வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் தமிழக அரசின் தொழில்முனைவு மேம்பாட்டு கழகத்தின் (Entrepreneurship Development & Innovation Institute) பங்கும் இதில் இருக்கிறது. ஆவிச்சி கல்லூரி, சி.கே. பொறியியல் கல்லூரி, டிஜி வைஷ்ணவா கல்லூரி, லிபா, ஜேபியார் மாமல்லன் பொறியியல் கல்லூரி, பிஎஸ்ஜி டெக், ஷாசன் ஜெயின் கல்லூரி, தியாகராஜர் நிர்வாக கல்லூரி மற்றும் வேல்ஸ் பல்கலைக்கழக மாணவர்கள் இந்த ஆய்வினை நடத்தினார்கள். இவர்களுக்கு சம்பந்தப்பட்ட கல்லூரி பேராசிரியர்கள் ஆலோசனையும் வழங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி : யுவர் ஸ்டோரி தமிழ்