டாடா குழுமத்துக்கும் சைரஸ் மிஸ்திரிக்கும் இடையேயான யுத்தம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. உச்ச நீதி மன்றத்தில் இரு குழுமங்களுக்கும் இடையேயான யுத்தம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த நிலையில், தற்போதைய யுத்தம் என்ன என்று பார்க்குமுன் ஒரு சிறிய ஃபிளாஷ்பேக்.
மிஸ்திரி என்ட்ரியும் எக்ஸிட்டும்…
டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து ரத்தன் டாடா ஓய்வுபெற்றதை அடுத்து அந்தக் குழுமத்தில் 18.4% பங்குகளை வைத்திருக்கும் சைரஸ் மிஸ்திரி, டாடா குழுமத்தின் தலைவராக (2012-ம் ஆண்டு) அதாவது, டாடா சன்ஸ் தலைவராகப் பொறுப்பேற்றார். ஆனால், கருத்து வேறுபாடு அதிகரித் ததைத் தொடர்ந்து 2016-ம் ஆண்டு டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
இந்த நீக்கத்தை எதிர்த்து என்.சி.எல்.டி-யில் மிஸ்திரி குழுமம் வழக்கு தொடுத்தது. ஆனால், மிஸ்திரிக்கு எதிராகவே தீர்ப்பு கிடைத்தது. அடுத்த கட்டமாக, என்.சி.எல்.டி தீர்ப்பாயத்துக்கு இந்த வழக்கு சென்றது. சைரஸ் மிஸ்திரி நீக்கப்பட்டது செல்லாது என்று தீர்ப் பாயம் தீர்ப்பளித்தது.
டாடா குழுமம் தற்போது உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்தது. தவிர, சைரஸ் மிஸ்திரி தலைவராக இருந்த காலத்தில் டாடா குழுமத்தின் பிராண்ட் மதிப்பு சரிந்துவிட்டதாகவும் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கின் விசாரணை நடந்து வருகிறது.
மிஸ்திரி சொத்தின் மதிப்பு…
இதற்கிடையே, டாடா சன்ஸ் தலைவர் பதவியிலிருந்து நீக்கப் பட்டது செல்லாது என அறிவிக் கப்பட்டாலும் மீண்டும் அந்தப் பொறுப்பை விரும்பவில்லை என சைரஸ் மிஸ்திரி அறிவித்தார். அதே சமயம், டாடா சன்ஸ் நிறுவனத்தில் உள்ள 18.4% பங்குகளை விற்கத் திட்டமிட்டிருப்பதாகவும் அறிவித்தார். தற்போது இந்தப் பங்குகளின் மீதான சந்தை மதிப்பில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.
தன்வசம் உள்ள பங்குகளுக்கு ரூ.1.75 லட்சம் கோடி அளவுக்கு சைரஸ் மிஸ்திரி நிறுவனம் மதிப்பீடு செய்திருக்கிறது. ஆனால், மிஸ்திரி வசம் இருக்கும் பங்குகளின் மதிப்பு ரூ.80,000 கோடி மட்டுமே என உச்ச நீதி மன்றத்தில் டாடா குழுமம் தெரிவித்தது. (வேறு சிலர் இது ரூ.94,000 கோடி என மதிப்பிட்டு உள்ளனர்). எப்படி இருந்தாலும் சைரஸ் மிஸ்திரி எதிர்பார்க்கும் தொகையைவிட இது மிக மிகக் குறைவு என்பதால், அவர் சொத்தை விற்றுவிட்டு வெளியேற முடியாத சூழல் இருக்கிறது.
மோதிக்கொள்ளும் வழக்கறிஞர்கள்…
இந்த வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் இரு குழுமங்களுக்கு இடையே பெரும் வார்த்தைப் போர் நடந்துவருகிறது. இரு குழுமங்களும் மூத்த வழக்கறிஞர்களை நியமனம் செய்திருக்கிறது. டாடா குழுமம் ஹரிஷ் சால்வே மற்றும் அபிஷேக் மனு சிங்வியைத் தங்கள் தரப்புகாக வாதாட நியமனம் செய்திருக்கிறது. சைரஸ் மிஸ்திரி சார்பாக சென்னையைச் சேர்ந்த ஆரியமா சுந்தரம் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.
மிஸ்திரியின் விமர்சனங்கள்…
‘‘டாடா குழுமம் ரத்தன் டாடாவால் நிர்வாகம் செய்யப் படுகிறது. டாடா அறக்கட்டளை தலைவர் ரத்தன் டாடா தனக்கு ஆதரவாகச் செயல்படுபவர்களை டாடா சன்ஸ் இயக்குநர் குழுவில் இயக்குநர்களாக நியமித்து அதன் மூலம் நிறுவனத்தை நடத்துகிறார். டாடா சன்ஸில் 66% பங்குகள் டாடா அறக்கட்டளைக்கு உள்ளது. மிஸ்திரி குழுமத்துக்கு 18.4% பங்குகள் உள்ளன. லாப நோக்கம் இல்லாத அறக்கட்டளை இவ்வளவு பெரிய குழுமத்தை சட்ட பூர்வமாக நடத்த முடியாது;
மேலும், டாடா குழுமத்தில் சிறு முதலீட்டாளர்கள் நலன்கள் பாதுகாக்கப்படவில்லை. பட்டியலிடப்பட்ட நிறுவனங் களில் எந்த நெருக்கடியும் இல்லாமல் முடிவெடுக்க வேண்டும். ஆனால், இங்கு முடிவெடுப்பதில் தலையீடு உள்ளது. இது குடும்ப பிரச்னை யாகக் கருதினால் பொது நிறுவனமாக மாற்றி இருக்கக் கூடாது’’ என மிஸ்திரி தரப்பு வழக்கறிஞர் சுந்தரம் வாதிட்டார்.
ரூ.69 கோடி டு ரூ.58,000 கோடி…
‘‘1969-ம் ஆண்டு டாடா சன்ஸில் மிஸ்திரி குடும்பத்தின் பங்குகளின் மதிப்பு ரூ.69 கோடி மட்டுமே. ஆனால், அதன் மதிப்பு 2016-ம் ஆண்டு நிலவரப்படி ரூ.58,000 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது. பங்குகளின் மதிப்பு இவ்வளவு உயர்ந்தும் குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடாவின் நிர்வாகம் சரியில்லை எனக் கூறுவது எப்படி, 2016-ம் ஆண்டிலிருந்து நான்கு ஆண்டுகளுக்கும் இதன் சந்தை மதிப்பு ரூ.58,000 கோடி யிலிருந்து ரூ.1.75 லட்சம் கோடியாக எப்படி உயரும்?’’ டாடா குழுமத்தின் வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே.
இரு நிறுவனங்களுக்கு கடந்த வாரம் முழுவதும் உச்ச நீதிமன்றத்தில் தங்கள் தரப்பு நியாயங்களை முன்வைத்து வாதாடின. இந்த வழக்கின் முடிவில் ஜெயிக்கப்போவது ரத்தன் டாடாவா அல்லது மிஸ்திரியா என்பதைக் காண மொத்த கார்ப்பரேட் உலகமும் காத்திருக்கிறது.
ஏர் இந்தியா ஏலத்தில் டாடா!
ஏர் இந்தியாவைத் தனியார்மயமாக்கும் நடவடிக்கையை மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளாகவே எடுத்துவருகிறது. ஆனால், இதுவரை எடுத்த நடவடிக்கைகள் அனைத்தும் தோல்வியில் முடிவடைந்திருக்கின்றன. 2018-ம் ஆண்டு இதே போன்ற நடவடிக்கையை எடுத்தது. ஆனால், அப்போது ஏர் இந்தியாவுக்கு யாரும் விண்ணப்பிக்கவில்லை.
தற்போது ஏர் இந்தியாவை வாங்க டாடா குழுமம் விண்ணப் பித்திருக்கிறது. தவிர, இன்டர்அப்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஏர் இந்தியா பணியாளர்கள் குழுவும் விண்ணப் பித்திருக்கிறது. ஜனவரி 5-ம் தேதி விண்ணப்பதாரர்கள் குறித்த அடுத்த அறிவிப்பை மத்திய அரசு அறிவிக்கும்.
ஏற்கெனவே விஸ்தாரா மற்றும் ஏர் ஏசியா ஆகிய இரு நிறுவனங்கள் டாடா குழுமம் வசம் இருக்கிறது. இந்த நிலையில், ஏர் இந்தியாவும் இணையும்பட்சத்தில் இந்தியாவில் முக்கியமான விமான நிறுவனமாக மாற முடியும். அதேபோல, ஏர் இந்தியா வசம் பல சர்வதேச வழித்தடங்கள் இருப்பதால், உடனடியாக சர்வதேச சந்தையிலும் டாடா குழுமம் தடம்பதிக்க முடியும் என்பதும் டாடா குழுமத்துக்கு சாதகமான விஷயமே. மூன்று நிறுவனங்கள் இணையும்பட்சத்தில் ஒட்டுமொத்த சந்தையில் 22.9% டாடா குழுமத்துக்கு வரும்.
ஆனால், ஏற்கெனவெ இருக்கும் இரு விமான நிறுவனங் களும் கடும் சிக்கலில் இருக்கும்போது, மிகப்பெரிய கடனில் இருக்கும் ஏர் இந்தியாவை வாங்குவது சிக்கலை அதிகரிக்கலாம் என்றே வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். மேலும், விஸ்தாரா நிறுவனத்தில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பங்கு இருக்கிறது. ஆனால், ஏர் இந்தியாவுக்காக டாடா குழுமம் மட்டுமே விண்ணப்பித்திருக்கிறது. ஒருவேளை, டாடா குழுமத்துக்கு ஏர் இந்தியா கிடைத்துவிட்டால், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அதை ஒப்புக்கொள்ளுமா, இல்லையா என்பதையும் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விஷயமாக இருக்கிறது!
Recent Comments