கடந்த வாரம் இரண்டு முக்கிய நிகழ்வுகளில் ஒன்று ஏர்செல் திவால் நடவடிக்கைக்கு மனு செய்தது. அடுத்தது கார்த்தி சிதம்பரம் கைது. ஏர்செல் விஷயம் எதிர்பார்த்த ஒன்றுதான். ஆனால் கார்த்தி சிதம்பரம் கைதுதான் யாரும் எதிர்பார்க்காதது. ஐஎன்எக்ஸ் மீடியாவுக்கு வெளிநாட்டில் இருந்து நிதி திரட்டும் விஷயத்தில் கார்த்தி சிதம்பரம் ஆதாயம் அடைந்ததுதான் இந்த வழக்கு. 2007-ம் ஆண்டு குற்றம் நடந்ததாக கூறப்படும் இந்த வழக்கில் 2018-ம் ஆண்டில் இந்த கைது நடந்திருக்கிறது. ஒரு நாள் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. அதனை தொடர்ந்து மார்ச் 6-ம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
அந்நிய முதலீடுகளை கவர்வதற்காக உருவாக்கப்பட்டதுதான் அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் (எப்ஐபிபி). குறிப்பிட்ட தொகை வரை நேரடியாக நிறுவனங்களில் முதலீடு செய்ய முடியும். அதற்கு மேல் முதலீடு செய்யும் பட்சத்தில் எப்ஐபிபி அனுமதி தேவை.1991-ம் ஆண்டு இந்தியா தாராளமயக் கொள்கையை பின்பற்றத் தொடங்கியபோது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உடனடியாக எடுத்த நடவடிக்கை அந்நிய முதலீடுகளை இருகரம் நீட்டி வரவேற்றதுதான். இதனால் வெளிநாட்டு நிறுவனங்களுக்கான கதவுகள் திறந்துவிடப்பட்டன. முதலீடுகளும் வந்துகொண்டிருந்தன. இந்த அமைப்பு மூலம் 2007-ம் ஆண்டு நடந்த ஒரு நிதி திரட்டல்தான் தற்போது சர்ச்சையாகி இருக்கிறது.
பீட்டர் முகர்ஜி மற்றும் இந்திராணி முகர்ஜி (தற்போது இவர்கள் இருவரும் வேறு வழக்குக்காக சிறையில் இருக்கின்றனர்) ஆகியோர் ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்தின் உரிமையாளர்கள். இந்த நிறுவனத்துக்காக வெளிநாட்டில் இருந்து நிதி திரட்டுவதற்கு தேவையான நடவடிக்கை எடுத்திருக்கின்றனர். அப்போதைய விதிமுறைகளின்படி அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் (எப்ஐபிபி) மூலமே அந்நிய முதலீட்டினை கொண்டு வர முடியும். தற்போது இந்த வாரியம் கலைக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட துறையே அந்நிய முதலீட்டு முடிவினை எடுக்க முடியும். விஷயத்துக்கு வருவோம்.
2007-ம் ஆண்டு மே மாதத்தில் அந்நிய முதலீட்டுக்கு ஐஎன்எக்ஸ் மீடியா விண்ணப்பித்திருக்கிறது. ஆனால் எப்ஐபிபி ரூ.4.62 கோடி ரூபாய்க்கு மட்டுமே அனுமதி வழங்குகிறது. ஆனால் விதிமுறைகள் மாற்றி அமைக்கப்பட்டு ரூ.305 கோடி அளவுக்கு வெளிநாட்டில் இருந்து நிதி திரட்டப்படுகிறது. கார்த்தி சிதம்பரம் தன்னுடைய செல்வாக்கினை பயன்படுத்தி, விதிமுறைகளை மாற்றி அமைத்து வெளிநாட்டில் இருந்து நிதி திரட்டிக்கொடுத்தாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதற்கு பலனாக கார்த்தி 10 லட்சம் டாலர் பெற்றிருக்கிறார். கார்த்தியின் (மறைமுக கட்டுப்பாட்டில்) அட்வாண்டேஜ் ஸ்டிராடஜிக் கன்சல்டிங் நிறுவனத்துக்கு ரூ.10 லட்சம் வழங்கப்பட்டதற்கான ரசீதினை சிபிஐ கைப்பற்றி இருக்கிறது.
இந்திராணி வாக்கு மூலம்
ப.சிதம்பரத்தின் ஆலோசனையின் பேரில் அவரின் மகனை டெல்லியில் உள்ள ஹயாத் ஓட்டலில் சந்தித்தோம். அவர் எங்களிடம் குறிப்பிட்ட தொகையை அளிக்குமாறு கேட்டு அதை பெற்றுகொண்டார் என விசாரணையில் இந்திராணி கூறியிருக்கிறார். இதற்கிடையே கார்த்தியின் வீடு, அலுவலகம் என 14 இடங்களில் சோதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வெளிநாடு செல்லக்கூடாது என லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதற்கு வழக்கு தொடர்ந்து நீதிமன்ற அனுமதியுடன் வெளிநாடு சென்று, இந்தியா திரும்பிய சமயத்தில் இவரது கைது நடந்திருக்கிறது.
அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையா?
ப.சிதம்பரம் இதனை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என கூறியிருக்கிறார். ஆனால் சுப்ரமணியன் சாமி, ப.சிதம்பரம் நிதி அமைச்சராக பதவி வகித்த காலத்தில் வழங்கப்பட்ட அத்தனை அனுமதிகளும் விசாரிக்கப்பட வேண்டும் என கூறுகிறார். இந்த இடத்தில் பல கேள்விகள் தொக்கி இருக்கின்றன. 2007-ம் ஆண்டு நடந்த குற்றத்துக்கு 2015-ம் ஆண்டு சிபிஐ முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்கிறது. ஏற்கெனவே அரசு அதிகாரிகள் முடிவெடுக்க தாமதமாகும் சூழலில் முன்தேதியிட்டு விசாரணை தொடங்கும் பட்சத்தில் அரசின் முடிவெடுக்கும் நடவடிக்கை பாதிக்கப்படாதா?
சரி குற்றம் நடந்தது என ஒப்புக்கொண்டாலும் அப்போது தலைவராக இருந்த சுப்பாராவ் மற்றும் இதர ஐஏஎஸ் அதிகாரிகளை ஏன் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரிக்கவில்லை என்று காங்கிரஸ் எழுப்பும் கேள்விக்கு இதுவரை பதில் இல்லை. குற்றம் நடந்திருப்பது உண்மை எனில் முதல் தகவல் அறிக்கையில் ஏன் அவர்கள் பெயர்கள் இடம் பெறவில்லை. தவிர இந்த முடிவுகளை தனிநபர் எடுக்க முடியாது. அனைத்து செயலாளர்களும் ஒன்றாக சேர்ந்துதான் எடுக்க முடியும் என ப.சிதம்பரம் கூறியிருக்கிறார்.
எப்ஐபிபி தலைவராக சுப்பாராவ் (பின்னாளில் ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்தவர்) மற்றும் அசோக் சாவ்லா (பின்னாளில் போட்டி ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக இருந்தவர்) ஆகியோர் இருந்திருக்கின்றனர். சுப்பாராவுக்கும், சிதம்பரத்துக்கும் என்ன உறவு இருந்தது என அனைவருக்கும் தெரியும். 2012-ம் ஆண்டு ரிசர்வ் வங்கி வட்டியை குறைக்காத போது பொதுவெளியிலேயே காரசார விவாதம் நடந்தது. வளர்ச்சிக்காக அரசாங்கம் தனியாகதான் செல்ல வேண்டும் என்றால் அதற்கும் தயார் என ப.சிதம்பரம் கூறியிருந்தார். அதற்கு, ரிசர்வ் வங்கியின் செயல்பாட்டுக்கு சிதம்பரம் ஒரு நாள் நன்றி சொல்வார் என சுப்பாராவ் கூறியிருந்தார். இப்படி பொதுவெளியில் மோதிக்கொண்டவர்கள் எப்படி 2007-ம் ஆண்டு சமரசமாக இருந்திருக்க முடியும் என்னும் கேள்வி எழாமல் இல்லை.
குற்றங்கள் இங்கு நியாயப்படுத்தப்படவில்லை. குற்றத்தில் சிறிய குற்றம் பெரிய குற்றம் என்னும் பாகுபாடு காட்டத்தேவையில்லை. கார்த்தி சிதம்பரம் குற்றம் செய்திருந்தது நிரூபிக்கப்பட்டால் தண்டனை வழங்கட்டும். அதில் யாருக்கும் எந்த மாற்றுக்கருத்து இருக்கப்போவதில்லை. ஆனால் ஏற்கெனவே நீரவ் மோடி, விக்ரம் கோத்தாரி உள்ளிட்டோர் பல ஆயிரம் கோடி மோசடி செய்திருக்கும் சூழலில், இவர்களின் குற்றச்சாட்டுகளை சிறிதாக்கி, ப.சிதம்பரம் சார்ந்த விஷயத்தை ஊதிப்பெருக்குவதன் மூலம் பொதுமக்களின் கவனத்தை திசை திருப்பும் முயற்சி நடக்கிறதா?
காங்கிரஸ் கடந்த முறை தோற்பதற்கு 2ஜி பிரச்சினையும் ஒரு முக்கிய காரணம். அதேபோல இப்போது ஐஎன்எக்ஸ் மீடியா பிரச்சினையை கையில் எடுத்தால், தேர்தல் சமயத்தில் அல்லது இந்த வழக்கு முற்றும் சூழலில் தேர்தலை நடத்தும் திட்டமா என்பதும் தெரியவில்லை. இந்த கேள்விகளுக்கெல்லாம் எப்போது பதில் கிடைக்கும்?
Recent Comments