டுத்தடுத்து இரண்டு சிறிய வங்கிகளில் அதிர்ச்சி அலைகள் எழுந்து ஓய்ந்திருக்கிறது. லக்ஷ்மி விலாஸ் பேங்கில் கடந்த காலத்தில் முறைகேடு நடந்ததாகவும், இப்போது அந்த வங்கி நிதிச் சிக்கலில் இருப்பதாகவும், பஞ்சாப் நேஷனல் பேங்க் அதை வாங்க வாய்ப்புண்டு என்றும் கடந்த வாரத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டது. இதேபோல, தனலட்சுமி வங்கியின் தலைமைப் பொறுப்பில் இருந்தவர்கள் தொடர்ந்து அந்தப் பதவியில் நிலைக்க முடியாமல் தவித்ததும் செய்தியாக வெளிவந்து வங்கிப் பங்குகளில் முதலீடு செய்திருந்தவர்களைப் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

அனைவரும் விரும்பும் துறை

பொதுவாக, முதலீட்டாளர்களுக்குப் பிடித்தமான துறைகளில் ஒன்று வங்கித்துறை. காரணம், மற்ற எல்லாத் துறைகளையும்விட வங்கித்துறையை சாதாரண முதலீட்டாளர்களாலும் எளிதில் புரிந்துகொள்ள முடியும். தவிர, அனைவருக்கும் வங்கி சார்ந்த தேவைகள் எப்போதும் இருந்துகொண்டே இருக்கின்றன. கல்விக் கடன், விவசாயக் கடன், நகைக் கடன், தொழில் கடன், ஃபிக்ஸட் டெபாசிட், ரெக்கரிங் டெபாசிட், மாதச் சம்பளம், பென்ஷன், இவை தவிர நிதி சார்ந்த சேவைகள் என வங்கியைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே வருகிறது. பெருவாரியான மக்கள் வங்கி என்ற அமைப்புக்குள் வருகிற வரை சேவைக்கு முக்கியத்துவம் தரப்பட்டதால், வருமானம் அல்லது லாபம் பற்றி வங்கிகள் பெரியளவில் நினைத்துப் பார்க்கவில்லை. ஆனால், தாராளமய மாக்கலுக்குப் பின் தனியார் வங்கிகள் வந்த பின், கட்டணத்துடன்கூடிய நல்ல சேவை அறிமுகமாக, பொதுத்துறை வங்கிகளும் கணிசமான லாபம் ஈட்டத் தொடங்கின. இதனால் வங்கிப் பங்குகள் நல்ல லாபம் தந்தன.

வங்கி

வங்கி

வங்கிகளின் லாபம் அதிகரித்த அதே நேரத்தில், வாராக்கடன், முறைகேடு போன்ற பிரச்னைகளும் அதிகரிக்கவே செய்துள்ளன. இந்த இரு பிரச்னைகளும் பொதுத்துறை வங்கிகளில் கொஞ்சம் அதிகம். தவிர, லாபமும் குறைவு. இதனால்தான், பொதுத்துறை வங்கிகளைவிட தனியார் வங்கிகளையே முதலீட்டாளர்கள் அதிகம் விரும்புகின்றனர். அவற்றிலும் எல்லா தனியார் வங்கிகளையும் முதலீட்டாளர்கள் விரும்புகின்றனர் என்று சொல்ல முடியாது. இந்தியாவில் பட்டியலிடப்பட்ட 21 தனியார் வங்கிகள் உள்ளன. ஆனால், இதில் சில வங்கிகள் முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பை பெருமளவுக்குக் கரைத்துவிட்டன.

சிக்கலில் சிறிய வங்கிகள்..! - முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

தனியார் வங்கிகளின் சந்தை மதிப்பில் முதலிடத்தில் ஹெச்.டி.எஃப்.சி வங்கி இருக்கிறது. இதன் சந்தை மதிப்பு ரூ.6.3 லட்சம் கோடி. தனியார் வங்கிகளின் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் தனலட்சுமி வங்கியின் சந்தை மதிப்பு சுமார் 300 கோடி மட்டுமே. ரூ.5,000 கோடிக்கும் கீழான சந்தை மதிப்பில் எட்டு தனியார் வங்கிகள் உள்ளன. இந்த வங்கிகளில் எத்தனை இன்னும் ஐந்து அல்லது 10 ஆண்டுகளில் தப்பிப் பிழைக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க முடியும்.

கோவிட் ஏற்படுத்திய பாதிப்பு..!

தனியார் வங்கிகள், அதிலும் குறிப்பாக சிறிய வங்கிகளின் சிக்கலுக்கு என்ன காரணம் என ஈக்னாமிக்ஸ் நிறுவனத்தின் ஜி.சொக்கலிங் கத்திடம் கேட்டோம்.

சிக்கலில் சிறிய வங்கிகள்..! - முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

‘‘கடந்த ஆண்டு யெஸ் பேங்க் மற்றும் டி.ஹெச்.எஃப்.எல் உள்ளிட்ட நிதி சார்ந்த அமைப்புகளில் சிக்கல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து வங்கிகள்மீது முதலீட்டாளர்கள் மட்டுமல்லாமல் டெபாசிட்தாரர்களின் நம்பிக்கையும் குறைந்தது. இதனால் வங்கிகளின் டெபாசிட் வளர்ச்சி குறைந்தது.

இந்த நிலையில், கோவிட் குறித்த தகவல்கள் வெளியாகின. இதனால் வங்கிகளில் கடன் வாங்கியவர்கள் மறுசீரமைப்பு செய்யும் பணியைச் செய்தனர். ஏற்கெனவே வங்கிகளில் வாராக்கடன் அதிகரித்து வந்த சூழலில் மேலும் வாராக்கடன் அதிகரித்தது. இந்த அனைத்துக் காரணங்களால் வங்கித் துறையில் முதலீட்டாளர்கள் மற்றும் டெபாசிட்தாரர் களுக்கு ஏற்பட்ட அச்சம் காரணமாக வங்கித் துறை பங்குகள் சரிந்தன.

சிக்கலில் சிறிய வங்கிகள்..! - முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

சிறிய தனியார் வங்கிகள் மட்டுமல்லாமல் நடுத்தரத் தனியார் வங்கிகளும் சரிவை சந்தித்தன. ஓரிரு தனியார் வங்கிகளைத் தவிர, மற்ற வங்கிகளில் பெரிய பிரச்னை இல்லை. தனியார் வங்கிகள் கடந்த காலங்களில் பல சிக்கல்களைக் கடந்து வந்துள்ளன. தவிர. இது ஒரு சுழற்சி (Cycle) என்றே சொல்ல வேண்டும். குறிப்பிட்ட ஆண்டு காலத்துக்கு ஒருமுறை இப்படி நடப்பதைத் தவிர்க்க முடியாது. இன்னும் சில ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த வங்கிகளின் நிலைமை மாறும்.

அவசரப்பட்டு விற்கத் தேவையில்லை!

வங்கிப் பங்குகளைப் பொறுத்தவரை, குறிப்பிட்ட எந்த வங்கியின் பெயரையும் நான் பரிந்துரை செய்ய முடியாது. ஆனால், நிகர வாராக்கடன் 4.5 சத விகிதத்துக்குக்கீழ் உள்ள, சீரான டெபாசிட் வளர்ச்சி மற்றும் பாசிட்டிவ் நெட்வொர்த் இருக்கும் வங்கிப் பங்குகளை அவசரப்பட்டு விற்கத் தேவையில்லை’’ என்றார்.

வருமானத்தைக் குறைத்த அரசின் சலுகைகள்!

இது தொடர்பாக பங்குச் சந்தை நிபுணர் ரெஜி தாமஸிடம் பேசினோம்.

ஜி.சொக்கலிங்கம், ரெஜி தாமஸ்

‘‘கடந்த ஓராண்டாக பங்குச் சந்தையில் கணிசமான ஏற்றம் இருந்தது. ஆனால், வங்கித்துறை பங்குகள் மட்டும் குறைவான வளர்ச்சியைத் தந்தன. கோவிட்டுக்கு முன்பிருந்தே வங்கி களின் செயல்பாடுகள் சரியில்லாமல் இருந்தன. கோவிட்டுக்குப் பிறகு, வங்கிகளின் நிதிநிலை மேலும் பாதிப்படைந்துள்ளது.

வங்கிகளின் முக்கியமான வருமானமே வட்டிதான். ஆனால், அரசு அறிவித்துள்ள சலுகைகள் காரணமாக நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் கடன் மறுசீரமைப்பைச் செய்திருக்கின்றன. கோவிட் காரணமாக நிறுவனங்களுக்கு சிக்கல் ஏற்பட்டு, அதனால் பலர் வேலை இழந்துள்ளனர். நிறுவனம் அல்லது தனிநபர்களின் வருமான எதிர்பார்ப்பை அடிப்படையாக வைத்துதான் கடன் வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், இப்போது அனைத்து எதிர்ப்பார்ப்புகளும் பொய்த்துவிட்டதால், வங்கிகளின் வருமானம் பாதிக்கப்பட்டிருக்கிறது. இன்னும் மூன்று காலாண்டுகளுக்குப் பிறகே, வங்கிகளின் வாராக்கடன் குறித்த முழுமையான நிலவரம் தெரியவரும். அதுவரை இதுபோன்ற சிக்கல் இருக்கும்.

கவனிக்க வேண்டிய வங்கிப் பங்குகள்

பெரிய வங்கிகளின் வளர்ச்சியே சிக்கலாக இருக்கும்போது, சிறிய வங்கிகளின் வளர்ச்சி சொல்லும்படி இருக்காது. பெரிய வங்கிகளில் ஹெச்.டி.எஃப்.சி வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி மற்றும் ஆக்ஸிஸ் வங்கி நடுத்தர வங்கிகளில் சிட்டி யூனியன் வங்கி, ஏயு ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் ஆகிய வங்கிப் பங்குகள் வளர்ச்சிக்கு வாய்ப்புள்ளன.

முதலீட்டாளர்கள், இதர தனியார் வங்கி பங்குகளில் செய்துள்ள முதலீட்டை மேலே உள்ள பங்குகளில் மாற்றிக்கொள்ளும் பட்சத்தில் மேலும் சரிவைத் தடுக்க முடியும். மற்றும் நீண்ட காலத்தில் நிலையான வளர்ச்சியைப் பெற முடியும். வங்கிப் பங்குகள் எப்போதும் பாதுகாப்பானது என்னும் மாயையில் இருந்து முதலீட்டாளர் வெளியே வர வேண்டும்’’ என்றார் ரெஜி தாமஸ்.

விலை குறைவாகக் கிடைக்கிறதே என்பதற்காக பொதுத்துறை மற்றும் தனியார் துறை சார்ந்த வங்கிப் பங்குகளை வாங்காமல் இருப்பதே நல்லது!