கொஞ்சமாவது நீங்கள் ரிஸ்க் எடுக்க வேண்டும் – ராஜு வெங்கடராமன் சிறப்புப் பேட்டி
புதிதாக தொழில் துவங்குவதற்கே அச்சப்படுகிற தற்போதைய நிலையில், தொடர் தொழில்முனைவோர் (Serial Entrepreneur) என்ற வார்த்தையே உற்சாகம் கொடுக்கிறது. இரண்டு பிஸினஸ்களை துவங்கி, அதை வெற்றிகரமாக நடத்தி, இப்போது மூன்றாவது பிஸினஸை நடத்திக்கொண்டிருக்கும் ராஜு வெங்கட்ராமனை சந்தித்தோம்.
ஒரு தொழிலை நடத்தியவரிடம் பேசுவதற்கே நிறைய விஷயங்கள் இருக்கும் போது, ராஜுவிடம் பேச நிறையவே இருக்கிறது.
பிஸினஸ் பற்றி பேசும் முன்பு அவருடைய ஆரம்ப காலத்தை அவர் சொல்லவே கேட்போம்…
திருநெல்வேலி என் சொந்த ஊராக இருந்தாலும், நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாமே மும்பைதான். ஐ.ஐ.டி.யில் கெமிக்கல் என்ஜினியரிங் படித்தேன்.
மும்பையில் அப்பா என்ன செய்தார்?
மும்பையில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் அப்பா வேலை செய்தார். இருந்தாலும் மாலை வேலைகளில் தனியாக பிஸினஸும் செய்துவந்தார். அகர்பத்தி, சோப் உள்ளிட்ட பொருட்களை தயாரித்து விற்றுவந்தார். அந்த சமயத்தில் அவரிடம் நிறைய கற்றுக்கொண்டேன்.
அவர் பொருட்களை சப்ளை செய்துவிடுவார். எனக்கு கிடைக்கும் நேரத்தில் நான் கடைகளுக்கு பணம் வாங்க செல்வேன்.
இப்போது ‘‘வொய்ட் லேபிள்” என்று சொல்கிறார்கள். அப்போது இந்த பெயர் கூட எங்களுக்கு தெரியாது. ஒரு பெரிய நிறுவனத்துக்கு அவர்களது பெயரில், பொருட்களை உற்பத்தி செய்துவந்தோம்.
அப்போது கற்றுக்கொண்ட முக்கியமான பாடம் எதாவது?
நிறைய கற்றுக்கொண்டேன். கேட்டவுடன் channel conflict நினைவுக்கு வருகிறது. ஒரு வாடிக்கையாளருக்கு நாங்கள் இரண்டு பொருட்களை கொடுத்தோம். ஒன்று அதிக விலை உள்ள பொருள், இன்னொரு பொருள் மிக மிக விலை குறைவு.
உதாரணத்துக்கு ஒரு பொருள் 300 ரூபாய் என்று வைத்துக்கொண்டால், இன்னொரு பொருள் 10 ரூபாய்தான் இருக்கும். வாங்குபவர் 10 ரூபாய் பொருளை இலவசமாகக் கேட்டார்.
நாம் தயாரிக்கும் பத்து ரூபாய் பொருள் அத்தனையும் எங்களுக்கு செலவுதான். அதிலிருந்து லாபம் ஏதும் இல்லை, அதே சமயம், 300 ரூபாய் பொருளில் கிடைக்கும் லாபமும் குறையும். அப்போதுதான் என்ன செய்ய கூடாது என்பதை கற்றுக்கொண்டேன்.
என்ஜினியரிங் படித்த பிறகு என்ன செய்தீர்கள்?
படித்து முடித்த பிறகு கேட்பரி நிறுவனத்தில் மேனேஜ்மென்ட் டிரெய்னி யாக வேலைக்கு சேர்ந்தேன். அங்கு இருக்கும்போதுதான், கேட்பரி நிறுவனம், ஐஐஎம். ஆமதாபாத்தில் எக்ஸிகியூட்டிவ் எம்.பி.ஏ படிக்க அனுப்பியது. அதன் பிறகு அமெரிக்காவில் இருக்கும் இ.டி.எஸ். நிறுவனத்தில் சேர்ந்தேன்.
எப்போது தொழில் முனைவோராக மாறினீர்கள்?
என்னுடைய 32 வயதில், 1991-ம் ஆண்டு வெட்ரி சிஸ்டத்தை ஆரம்பித்தேன். புத்தகங்களை ஆன்லைனில் மாற்றுவது உள்ளிட்ட பல வேலைகளை செய்தோம். சில வருடங்களில் எங்கள் நிறுவனத்தை இன்னொரு நிறுவனம் வாங்கியது. அந்த நிறுவனத்துக்காக உலகின் பல இடங்களில் நிறுவனஙகளை அமைத்து, கையகப்படுத்தி 100 மில்லியன் டாலர் நிறுவனமாக மாற்றினேன். நான் ஒய்வு பெறுகிறேன் என்று சொல்லிய காலத்துக்குப் பிறகு அந்த நிறுவனத்தில் மூன்று ஆண்டுகள் வேலை செய்து 2002-ம் ஆண்டு இந்தியாவுக்கு வந்தேன்.
என்னது ஓய்வா? சீக்கிரமாக ஏன்?
ஆமாம், 40 வயதில் ஓய்வு பெற வேண்டும் என்ற நினைப்பில்தான் அந்த நிறுவனத்தில் வேலை செய்தேன். சில வேலைகள் பாக்கி இருந்ததால், 43 வயதில்தான் அங்கிருந்து விலக முடிந்தது. ஓரளவுக்கு பணம் இருந்தது. அதனால் சமூக சேவை செய்யலாம் என்ற எண்ணத்தில் இந்தியாவுக்கு வந்தேன்.
இந்தியாவுக்கு வந்து மீண்டும் நிறுவனம் ஆரம்பித்தது இருக்கட்டும். இந்தியாவுக்கு வரும் முடிவை உங்கள் குடும்பம், நண்பர்கள் எப்படி பார்த்தார்கள்? எல்லாரும் அமெரிக்காவுக்கு சென்று கொண்டிருக்கும் போது ஏன் இந்தியா வந்தீர்கள்?
ஆரம்பத்தில் சில மாற்றுக்கருத்துகள் இருந்ததுதான். ஆனால் இந்தியாவுக்கு போவது நல்லது என்பதற்கான காரணங்களை விளக்கினேன். 1990-களின் ஆரம்பத்தில் இந்தியர்களின் இமேஜ் மாறியது. அப்போது படித்தவர்களுக்கு நல்ல வேலை கிடைத்தது. இந்தியர்களுக்கு வேலை கொடுத்தார்கள். ஆனால் 2000-ம் ஆண்டுகளில் இந்தியாவின் இமேஜ் முழுவதும் மாறியது.
முதலீடு செய்வதற்கான நாடாக இந்தியா மாறியது. பல பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவை நோக்கி வந்துக்கொண்டிருக்கும் போது நாம் ஏன் இந்தியா போக கூடாது என்று நினைத்தேன்.
நான் பிஸினஸ் ஆரம்பிக்க இந்தியா வரவில்லை என்றாலும், குழந்தைகளின் எதிர்காலம் போன்ற எல்லாவற்றுக்கும் இந்தியாவில் நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று நம்பினேன்.
குழந்தைகள் அமெரிக்காவில் வாழ்ந்துவிட்டால் அதன் பிறகு வேறு எங்கேயும் வாழ முடியாது. ஆனால் இந்தியாவுக்கு வந்துவிட்டால், இங்கு இல்லாவிட்டாலும், வேறு எங்கு வேண்டுமானாலும் வாழ முடியும்.
சமூக சேவை செய்யும் எண்ணம் என்னவாயிற்று?
என்.ஜி.ஒ.வில் பணியாற்ற வேண்டும் என்பதுதான் என் எண்ணம். ஆனால் நான் பார்த்த சில என்.ஜி.ஓ.க்களின் செயல்பாடு சரியில்லை. அதனால் பிஸினஸ் துவங்கலாம் என்று முடிவெடுத்தேன். அதன்பிறகு Rev IT Systems நிறுவனத்தை ஆரம்பித்தேன்.
அது என்ன Rev IT?
இது vetri என்ற பெயரின் anagram.(அதாவது வார்த்தையில் இருக்கும் எழுத்தை மாற்றி புதிய வார்த்தையை உருவாக்குவது). ஆனால் வெற்றி என்ற பெயரை கண்டுபிடிப்பதற்கு சில போட்டிகளை நடத்தினோம்.
பேப்பரின் தேவையைக் குறைப்பதுதான் எங்களின் வேலை. அப்போது இதே வேலையை வேறு சில வடிவங்களில் xerox, canon உள்ளிட்ட நிறுவனங்கள் செய்துவந்தன.
அதனால் நிறுவனத்தின் பெயர் ஐந்து எழுத்துகளில்தான் இருக்க வேண்டும், அந்த வார்த்தை அர்த்தம் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்து அறிவித்த போது, இந்தியர் ஒருவர் வெற்றி என்ற பெயரை பரிந்துரை செய்தார். இந்த பெயர் பிடித்திருந்ததால் வைத்தோம். இதையே மாற்றி புதிய நிறுவனத்துக்கும் பெயர் வைத்தோம்.
Rev IT என்னவாயிற்று?
ஹெல்த்கேர் துறையில் மட்டுமே செயல்படும் பி.பி.ஓ. நிறுவனம் இது. இந்த நிறுவனத்தை ஐ.சி.ஐ.சி.ஐ. ஒன்சோர்ஸ் நிறுவனம் முழுமையாக வாங்கியது. ஒன்றினைந்த அந்த நிறுவனத்திலும் முக்கிய பொறுப்பில் இருந்தேன். 23,000 பேர் வேலை செய்யும் நிறுவனமாக அதை மாற்றினேன். இருந்தாலும் 2009-ம் ஆண்டு மெட்ஆல் நிறுவனத்தை ஆர்மபித்தேன்.
ஹெல்த்கேர் துறையில் ஆரம்பிக்க காரணம் என்ன?
ஏற்கெனவே செய்த இரு பிஸினஸ்களும் ஹெல்த்கேர் துறையில்தான். அதனால் அந்த துறையை பற்றிய அறிவு இருக்கிறது. மேலும் எடுத்தவுடனேயே டையகனஸ்டிக் மையத்தை ஆரம்பிக்கவில்லை. மருத்துவமனை வேண்டாம், பார்மஸி வேண்டாம் என்று ஒவ்வொன்றாக கழித்துகட்டிய பிறகுதான் மெட்ஆல் நிறுவனத்தை ஆரம்பித்தேன்.
சரி அடுத்தது என்ன?
அடுத்தது என்ன என்பது தெரியவில்லை. ஆனால் இறுதியாக நான் செய்ய விரும்புவது விவசாயம்தான்.
இந்தியாவில் இப்போது தொழில்முனைவு எப்படி இருக்கிறது?
முன்பு போல மோசமாக இல்லை என்றே நினைக்கிறேன். டை (The Indus Entrepreneurs) மூலம் நடத்திய சர்வேயில் 15 முதல் 18 சதவிகித பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் தொழில்முனைவோராக மாறுவதை ஊக்குவிக்கிறார்கள் அல்லது எந்தவிதமான எதிர்ப்பும் இல்லாமல் இருக்கிறார்கள்.
தொழில்முனைவோர்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீகள்?
வேலை கிடைக்கவில்லை, அதனால் தொழில் துவங்கப் போகிறேன் என்ற ஸ்டேட்மென்ட் இப்போது பேஷனாக மாறி வருகிறது. ஆனால் இது நல்லதல்ல. அப்படி வருபவர்கள் பிஸினஸில் ஜெயிக்க முடியாது.
ஒரு தொழிலை வெளியில் இருந்து பார்ப்பதற்கு நன்றாக இருக்கும். ஆனால் பிஸினஸை கொஞ்சமாவது தெரிந்து கொள்வது நல்லது. மேலும், உங்கள் மீது ரிஸ்க் எடுக்க வங்கிகள், வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனங்கள் தயாராக இருக்கும் போது, கொஞ்சமாவது நீங்கள் ரிஸ்க் எடுக்க வேண்டும். நான் எந்த ரிஸ்க்கும் எடுக்க மாட்டேன், ஆனால் மற்றவர்கள் என்மீது ரிஸ்க் எடுக்க வேண்டும் என்று நினைப்பது நியாயமல்ல.
தொழில் துவங்க ஆரம்பகால தடைகள் பெரிதாக ஏதும் இப்போது இல்லை. ஐடியா கொடுக்கும் பட்சத்தில் பணம் கிடைக்கிறது. சில கல்லூரிகள் தொழில்முனைவை ஊக்குவிக்கிறார்கள். ஆனால் உங்களின் தேடலும் கொஞ்சம் இருக்க வேண்டும்.
Money is a byproduct என்று நீங்கள் சொல்லி இருக்கிறீர்கள்? பிறகு ஏன் தொழில்முனைவோராக மாறினீர்கள்?
இன்றைய நிலைமையில் பணம் சம்பாதிக்க பங்குச்சந்தை உள்ளிட்ட சில வழிகள் இருக்கிறது. தொழில்முனைவோராக மாறினால், பணம் கிடைக்கும். ஆனால் அதற்காக நான் தொழில்முனைவோராக மாறவில்லை. நாம் சொந்த காலில் நிற்க முடியும். நிறைய வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும். கூடவே பணமும் சம்பாதிக்க முடியும். ஆனால் அதற்கு சில வருடங்கள் கஷ்டபட வேண்டி இருக்கும்.
நன்றி ‘தி இந்து
Recent Comments