சிறு தொழில் தொடங்க கடன் சேவை வழங்கும் நிறுவனம் நடத்தும் சொக்கலிங்கம் பழனியப்பன்!
வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்பவர்கள் இந்தியாவுக்கு மீண்டும் திரும்பி வருவது கடினம். அதுவும் அமெரிக்காவில் பணிபுரிவர்கள் எவ்வளவு நாளைக்கு அங்கேயே தங்க முடியுமோ அவ்வளவு ஆண்டுகள் தங்க முயற்சிப்பார்கள். இதற்கு பல காரணங்கள். சம்பளம், திரும்பி இந்தியாவுக்கு வந்தால் இதே போல வேலை கிடைக்குமா, குழந்தைகளின் கல்வி முறை என பல சிக்கல்கள் இருக்கிறது.
ஆனால் இதையும் தாண்டி வெளிநாடுகளில் பணிபுரிபவர்கள் தற்போது இந்தியா திரும்ப தொடங்கி இருக்கிறார்கள். சில நாட்களுக்கு முன்பு இந்திய தொழிலக கூட்டமைப்பின் (சிஐஐ) தொழில் முனைவோர் மாநாடு நடந்தது. இதில் ஆந்திர அரசின் உயரதிகாரி வின்னி பட்ரோ கலந்து கொண்டார். அமெரிக்காவில் முக்கிய நிறுவனங்களில் உயர் பதவியில் இருக்கும் பலர் ஆந்திராவுக்கு திரும்பி தொழில் தொடங்குவது குறித்து அரசிடம் விவாதித்து வருகிறார்கள் என குறிப்பிட்டார்.
ஆனால் பத்தாண்டுகளுக்கு முன்பே அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பினார் சொக்கலிங்கம் பழனியப்பன். தற்போது நவரத்னா ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான இவரிடம் யுவர்ஸ்டோரி நடத்திய உரையாடலில் இருந்து…
புதுக்கோட்டை அருகே என்னுடைய சொந்த ஊர். என்னுடைய பள்ளிக்கல்வியை தமிழ் மற்றும் ஆங்கில வழியில் படித்தேன். அதனை தொடர்ந்து நேஷனல் இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜியில் (ஜாம்ஷெட்பூர்) மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் முடித்தேன். ஹிண்டால்கோ நிறுவனத்தில் கார்ப்பரேட் வாழ்க்கையை தொடங்கினேன்.
ஈரான், கிரீஸ் உள்ளிட்ட நாடுகளில் மின் துறை சம்பந்தப்பட்ட திட்டங்களில் பணிபுரிந்தேன். அப்போதைய வேலை வாய்ப்புகளில் எம்பிஏ படித்தவர்களுக்கான ஆரம்பகட்ட சம்பளம் அதிகமாக இருப்பதை உணர்ந்தேன். அதனால் எம்பிஏ படிக்க வேண்டும், அதுவும் அமெரிக்காவில் படிக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்தேன். காரணம் சர்வதேச அளவில் பல முக்கியமான எம்பிஏ கல்வி நிறுவனங்கள் அமெரிக்காவில் அதிகமாக இருந்தன.
இதனால் வேலையை விட்டு புதுக்கோட்டை வந்து எம்பிஏ படிப்பதற்கான நுழைவு தேர்வுக்கு தயாராகினேன். தேர்வுக்கு தயாரான போது எனக்கு திருமணமாகி முதல் குழந்தை பிறந்திருந்தது.
குழந்தை பிறந்த பிறகு படிக்க வேண்டுமா என்னும் கேள்விகள் எனக்கு வந்தன. ஆனாலும் எம்பிஏ படிக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தேன். அதுவரை சேமித்த பணத்தை வைத்து அமெரிக்காவுக்கு குடும்பத்துடன் சென்றோம். தண்டர்பர்ட் ஸ்கூல் ஆப் குளோபல் மேனேஜ்மெண்டில் (Thunderbird School of Global Management) எம்பிஏ படித்தேன். அமெரிக்காவில் நீங்கள் விரைவாக படிக்க நினைத்தால் படிக்க முடியும். 2 ஆண்டுகள் படிப்பை நான் ஒரே ஆண்டில் முடித்தேன்.
அதனை தொடர்ந்து அங்கேயே ஆர்தர் டி லிட்டில் என்னும் நிறுவனத்தின் ஆலோசகராக பணியாற்றினேன். அங்கேயே என்னுடைய இரண்டாவது பையன் பிறந்தான். 2000-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை அமெரிக்காவில் பணியாற்றினே. அங்கே வீடு, கார் என அமெரிக்கர்களாக வாழ்ந்தோம்.
ஒரு கட்டத்தில் இந்தியா திரும்ப வேண்டும் என எண்ணம் தோன்றியது. இந்தியா திரும்பியதும் மீண்டும் வேலை செய்வது சரியாக இருக்காது. தொழில் தொடங்கலாம் என முடிவெடுத்தோம். அதனால் அமெரிக்காவில் இருக்கும் அத்தனை சொத்துகளையும் விற்றுவிட்டு இந்தியா வந்தோம்.
அதே சமயத்தில் இந்தியா திரும்ப வேண்டும் என முடிவெடுத்தவுடன் அதிகம் யோசிக்கவில்லை, உடனடியாக அதற்கான வேலையை செய்யத்தொடங்கினோம். காரணம் பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் குழந்தைகளுக்கு 10 வயதுக்கு மேல் ஆகிவிட்டால் அவர்களால் இங்கிருக்கும் சூழல் ஏற்றுக்கொள்ள முடியாமல் போகும் வாய்ப்பு இருக்கிறது.
இதை விட முக்கியம் இந்தியாவின் வளர்ச்சி மற்றும் நம்பிக்கை. தற்போது வளர்ந்த நாடுகள், 30 – 40 ஆண்டுகளுக்கு முன்புக்கு என்ன சூழ்நிலை இருந்ததோ அந்த நிலைமையில் இந்தியா இருக்கிறது என்பதை பல வல்லுநர்கள் கூறிவந்தனர். தொழில் ஆலோசனையில் நான் இருந்ததால் எனக்கும் அந்த நம்பிக்கை இருந்தது. அதனால் விரைவாக திரும்ப முடிவெடுத்தோம். ஒரு குழந்தைக்கு 10 வயது முதல் 20 வயது வரைக்கும் மாற்றங்கள் அதிகமாக இருக்கும். தற்போதைய இந்தியா அந்த நிலையில் இருக்கிறது. அந்த கால கட்டத்தில் இந்தியாவில் இருக்க வேண்டும் என்பதால் உடனடியாக திரும்பினோம். வளர்ந்த நாடுகள் என்பது 40 வயதுக்கு மேலானவர்களை போல. அவர்களிடம் பெரிய மாற்றத்தை காண முடியாது.
இந்தியா வந்தவுடன் பிரகலா வெல்த் மேனேஜ்மெண்ட் என்னும் நிறுவனத்தை தொடங்கினோம். போர்ட்போலியோ மேனேஜ்மெண்ட் தொடங்கலாம் என நினைத்தோம். நாங்கள் தொடங்க நினைத்த போது அதற்கான உரிமை கட்டணம் ரூ.25 லட்சமாக இருந்தது. நாங்கள் விண்ணப்பிக்கும் போது ரூ. 50 லட்சமாக உயர்ந்துவிட்டது. இருந்தாலும் ரூ. 50 லட்சம் செலுத்தி உரிமம் வாங்கிவிட்டோம்.
தொடர்ந்து இதற்கான கட்டணம் உயர்த்தப்பட்டு வந்ததால், அதற்கான உரிமத்தை திருப்பி கொடுத்துவிட்டோம். அதனை தொடர்ந்து தனிநபர்களுக்கான நிதி ஆலோசனையில் ஈடுபட்டோம்.
எந்த தொழிலும் முதல் சில ஆண்டுகளுக்கு நெருக்கடியானதுதான். அதில் நாங்களும் விதிவிலக்கல்ல. சில ஆண்டுகளில் தொழில் ஸ்திரமானது. எங்களது வாடிக்கையாளர் மற்றும் நட்பு வட்டம் பெரிதானது. அடுத்து என்ன செய்யலாம் யோசித்த போது வங்கி அல்லாத நிதி நிறுவனம் தொடங்க முடிவெடுத்தோம்.
நவரத்னா ஃபைனான்ஷியல் சர்வீஸஸ் லிட் என்னும் பெயரில் கடன் சேவை நிறுவனம் தொடங்கினோம். தமிழ்நாட்டில் சிறு நகரங்களை மையமாகக் கொண்டு இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. வழக்கமாக வங்கி சேவை கிடைக்காத வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் சேவை வழங்குகிறோம். இங்கு சிறுதொழில் கடன், வாகனக் கடன், தங்க நகைக்கடன், தனிநபர் கடன் ஆகியவற்றை வழங்குகிறோம்.
சிறு தொழில் தொடங்க, விவசாயம், மற்றும் சில்லறை வர்த்தகம் புரிபவர்களுக்கு குறிப்பாக சிறு ஊர்களில் வசிக்கும் தொழில்முனைவோர்களுக்கு குறைந்த வட்டியில் கடன் சேவை வழங்குகிறோம்.
சிறு தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்க வேண்டும் என்பதற்காகவே இந்த நிறுவனத்தை தொடங்கினோம். இதில் நாங்கள் ரூ.20,000 கூட கடன் வழங்குகிறோம். இந்த குறைந்த தொகை கடன் வங்கிகளிலோ அல்லது பெரிய வங்கி அல்லாத நிதி நிறுவனங்களிலோ கிடைக்காது. அதனால் கடன் கிடைக்காதவர்களுக்காக இந்நிறுவனம் மூலம் அளிக்கிறோம்.
தற்போது சென்னை, மதுரை, திருச்சி, கோவை, ஒரத்தநாடு, பொன்னமராவதி, சிவகாசி, புதுக்கோட்டை, அலங்காநல்லூர், சிவகாசி உள்ளிட்ட 11 இடங்களில் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இன்னும் ஐந்து ஆண்டுகளில் 100 கிளைகளை தொடங்க திட்டமிட்டு வருகிறோம். இந்த கிளைகளில் பெரும்பாலும் சிறு நகரங்களில் இருக்கும்.
இந்த 10 கிளைகள் மூலம் 4,500 சிறு தொழில் நிறுவனங்களுக்கு கடன் கொடுத்திருக்கிறோம். குறைந்தபட்சம் ரூ.20,000 முதல் அதிகபட்சம் ரு.2 லட்சம் வரை கடன் வழங்கி இருக்கிறோம். மொத்தம் 18 கோடி அளவுக்கு சிறு தொழில்கடன் மட்டுமே வழங்கி இருக்கிறோம். இன்னும் ஐந்தாண்டுகளில் 500 கோடி அளவுக்கு சிறு தொழில் கடன் வழங்க வேண்டும் என்பதை இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறோம்.
இதன் நீட்சியாக சிலர் வீட்டுக்கடன் கேட்டனர். ஆனால் வங்கி அல்லாத நிதி நிறுவனத்தில் வீட்டுக்கடன் வழங்குவதில் சில அசௌகரியங்கள் உள்ளன. அதனால் அதற்கென பிரத்யேகமாக நவரத்னா ஹவுசிங் பைனான்ஸ்நிறுவனத்தை தொடங்கினோம்.
இந்த நிறுவனம் தொடங்க வாடிக்கையாளர் தேவை மட்டும் காரணம் அல்ல. 2022-க்குள் அனைவருக்கும் வீடு என்னும் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்திருக்கிறது. தவிர இந்தியாவில் சொந்த வீடு இருப்பவர்கள் எண்ணிக்கை சதவீத அடிப்படையில் மிக மிக குறைவு.
ஒரு வேளை வீட்டுக் கடன் கிடைத்தாலும் கூட கிராமபுரங்களில், ரூ.5 லட்சம் , ரூ. 10 லட்சம் வீட்டுக் கடன் கேட்பவர்களுக்கு பெரிய வங்கிகள் சேவை வழங்க முடியாத சூழல் இருந்தது. தேவை, சந்தை, நிதி சார்ந்த அனுபவம் இருப்பதால் இரு ஆண்டுக்கு முன்பு நவரத்னா ஹவுசிங் பைனான்ஸ் தொடங்கினோம்.
தற்போது சுமார் ரூ.10 கோடி அளவுக்கு வீட்டுக்கடன் வழங்கி இருக்கிறோம். இன்னும் ஐந்தாண்டுகளில் குறைந்தபட்சம் ரூ. 500 – 1,000 கோடிக்கு மேல் வீட்டுக்கடன் வழங்குவதை திட்டமாக கொண்டு செயல்பட்டு வருகிறோம். மிகப்பெரிய இலக்கு இருக்கும் போது நம்முடைய சொந்த முதலீட்டை மட்டுமே வைத்து விரிவடைய முடியாது என்பதால் நிதி திரட்டும் பணியில் இருக்கிறோம்.
நாங்கள் ஒவ்வொரு புதிய முயற்சி எடுக்கும் போதும் சூழ்நிலை முற்றிலும் அதற்கு எதிராக இருக்கும். தற்போது வங்கி அல்லாத நிதி நிறுவன பங்குகள் கடுமையாக சரிந்து வருகிறது. இதனால் முதலீட்டை திரட்டுவது கொஞ்சம் சவலாக இருக்கிறது.
ஒவ்வொரு நெருக்கடியிலும் புதிய வாய்ப்புகள் எங்களுக்கு கிடைத்து வருகிறது. தற்போதைய அடுத்த வாய்ப்புகாக காத்திருக்கிறோம்.
Recent Comments