லகம் முழுக்க நூற்றுக்கணக்கான ஸ்டார்ட்அப்கள் தொடங்கப்பட்டாலும், அவற்றில் வெற்றிபெறும் ஸ்டார்ட்அப்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். ஆனால், நிறுவனத்தைத் தொடங்கிய நான்கே ஆண்டுகளில் யூனிகார்ன் (1 பில்லியன் டாலர் மதிப்பு கொண்ட நிறுவனம்) நிறுவனத்தை உருவாக்கி சாதனை படைத்திருக்கிறார் ஜெயபிரகாஷ் விஜயன் (சுருக்கமாக, ஜெய் விஜயன்). இவரது டெகியான் (Tekion) நிறுவனம் சீரீஸ் சி (Series C) ஃபண்டிங்கில் 15 கோடி டாலர் முதலீட்டைத் திரட்டியிருக்கிறது. அமெரிக்காவில் மிக பிஸியாக இருந்த ஜெய், நமக்கு நேரம் ஒதுக்கித் தந்து, நம் கேள்விகள் அனைத்துக்கும் பதில் சொன்னார். இதோ அவர் நமக்களித்த பேட்டி…

உங்கள் ஆரம்ப காலம் குறித்து..?

‘‘பிறந்தது வளர்ந்தது எல்லாமே சென்னையில்தான். பிரெசிடென்சி கல்லூரியில் பி.எஸ்ஸி படித்தேன். ஏ.சி டெக் கல்லூரியில் எம்.எஸ்ஸி படித்தேன். கணிப்பொறி அறிமுகமாகி இருந்த நேரம் அது. அப்போது என் அப்பா கம்ப்யூட்டர் பயிற்சி மையம் ஒன்றைத் தொடங்கினார். கல்லூரி படிக்கும்போதே இந்த மையத்திலும் கவனம் செலுத்திவந்தேன். வங்கியில் கடன் வாங்கி இந்த மையத்தை வளர்க்க நினைத்தார் என் அப்பா. ஆனால், அது நடக்கவில்லை. வங்கிக் கடனை அடைக்க வேண்டும்; நானும் அடுத்தகட்டத்துக்குச் செல்ல வேண்டும் என்றால், வெளிநாட்டில் வேலைக்குச் செல்வதுதான் என்று நினைத்தேன்.

ஓமனில் உள்ள பவான் சைபர்டெக் என்னும் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. அதற்கடுத்து, சிட்டி டெவலப்மென்ட் என்னும் சிங்கப்பூர் நிறுவனத்துக்குச் சென்றேன். அப்போது ஆரக்கிள் படித்துவந்தேன். ஆசியாவில் ஆரக்கிள் முடித்த ஒரு சிலரில் நானும் ஒருவன். அதனால் ஆரக்கிள் நிறுவனத்திடமிருந்தே அழைப்புவந்தது. அப்போது அமெரிக்காவில் உள்ள நண்பர்களிடம் கேட்டபோது, யோசிக்காமல் சேரும்படி சொன்னார்கள். அதனால் சிங்கப்பூரிலிருந்து ஆரக்கிள் தலைமையகத்தில் (ஜூலை 1999) வேலைக்குச் சேர்ந்தேன். ஆரக்கிள் நிறுவனத்தில் இருக்கும் வரை இந்தியாவில் தொழிலுக்காக வாங்கிய கடனை அடைத்தேன்.

‘இந்தியாவில் வாங்கிய கடனை அமெரிக்காவுக்கு வந்த பிறகும் ஏன் திரும்பக் கட்டுகிறாய்’ என்று பலர் கேட்டார்கள். வாங்கிய கடனைத் திரும்பச் செலுத்த வேண்டும் என்ற பொறுப்பை உணர்ந்தவன் நான். ஒருபோதும் அதை நான் தட்டிக்கழிக்க நினைத்ததில்லை. எனவே, 2006 வரை நான் வாங்கிய சம்பளத்தில் பெரும் தொகை கடன் கட்டவே செலவானது.’’

ஆரக்கிள் பெரிய நிறுவனம். இருந்தாலும் அப்போது சிறிய நிறுவனமாக இருந்த டெஸ்லாவில் ஏன் இணைந்தீர்கள்?

‘‘ஆரக்கிள் பெரிய நிறுவனம்தான், நல்ல வேலைதான். என்றாலும், அந்த நேரத்தில் விஎம்.வேர் (VMWare) என்னும் நிறுவனத்திலிருந்து அழைப்பு வந்தது. மிகப்பெரிய ஐ.பி.ஓ வந்தநேரத்தில் அவர்களுடைய ஒரு புராஜெக்ட் பெரிய தோல்வியடைந்தது. அந்த புராஜெக்ட்டைச் சரிசெய்வதற்கான நபரைத் தேடினார்கள். அந்தப் பொறுப்புக்கு நான் சென்றேன். ஓராண்டில் அந்த புராஜெக்ட்டை சரிசெய்தோம். அதன் பிறகு, அந்த நிறுவனத்தில் அடுத்தடுத்து வளர்ச்சி இருந்தது.

அப்போதுதான் டெஸ்லாவிடமிருந்து அழைப்பு வந்தது. இப்போதுபோல, டெஸ்லா பெரிய நிறுவனம் கிடையாது. டெஸ்லாவின் முக்கிய அதிகாரிகளுடனும் இறுதியாக டெஸ்லா தலைவர் எலான் மஸ்க்குடன் பேசினேன். 2010-ம் ஆண்டிலேயே இ-வெஹிக்கிள் குறித்து தெளிவான திட்டம் வைத்திருந்தார். ஆனால், அதை மிகப்பெரிய அளவில் வளர்த்தெடுக்க முடியுமா என்ற சந்தேகம் அவருக்கிருந்தது. ஒரு சிறிய பிரிவில் முக்கியமான நிறுவனமாக இருக்கும் என்று மட்டுமே நான் நினைத்தேன். ஆனால், டெஸ்லா தற்போது அடைந்துள்ள வளர்ச்சியை நான் அப்போது எதிர்பார்க்கவில்லை.

இருந்தாலும் டெஸ்லா நிறுவனம் கொடுத்த பேக்கேஜ் எனக்குத் திருப்தியாக இல்லை. 20 லட்சம் டாலர் அளவுக்கு விஎம்.வேர் பங்குகள் என்னிடம் இருந்தன. அதைப் பணமாக்க வேண்டும் என்றால், இன்னும் சில காலம் அங்கு இருக்க வேண்டிய கட்டாயம். அதே போல, சம்பளமும் விஎம்.வேரில் வாங்கியதை விடக் குறைவாகவே கிடைக்கும் என டெஸ்லாவில் சொன்னார்கள். ஆனால், அதிகமான பங்குகளைத் தருவதாகக் கூறினார்கள். சம்பளத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டாம் என நான் நினைத்ததால், டெஸ்லா வேலையை வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்.’’

ஜெயபிரகாஷ் விஜயன்

ஜெயபிரகாஷ் விஜயன்

மீண்டும் அந்த வாய்ப்பு எப்படிக் கிடைத்தது?

‘‘ஓராண்டுக்குப் பிறகு, 2011-ம் ஆண்டு மீண்டும் டெஸ்லா ஹெச்.ஆர் அழைத்தார். ‘என்ன?’ என்று கேட்டேன். ‘எலான் உங்களைச் சந்திக்க வேண்டும் எனச் சொன்னார். ஆனால், எதற்காக என எனக்குத் தெரியாது. நீங்கள் நேரடியாகப் பேசிக்கொள்ளுங்கள்’ என ஹெச்.ஆர் கூறினார்.

இந்த முறையும் எலான் மஸ்க்குடன் நிறைய பேசினேன். போன முறை பேசியதைவிட இந்த முறை கொஞ்சம் பெரிய பதவி. டெஸ்லா நிறுவனத்தின் மொத்த டெக்னாலஜியையும் பார்த்துக்கொள்ள வேண்டும். அதாவது, டெஸ்லாவின் கார், டெஸ்லாவின் தொழில்நுட்பத்திலே இயங்க வேண்டும் என்றார்.

இந்த முறையும் சம்பளத்தைக் கொஞ்சம் குறைத்துக்கொள்ள வேண்டியிருந்தது. (ஒரு மில்லியன் டாலருக்கு மேல் இழப்பு). ஆனால், டெஸ்லாவின் பங்குகள் அதிகமாகக் கிடைத்தன. இடைப்பட்ட ஓராண்டுக் காலத்தில் டெஸ்லா குறித்து நிறைய தெரிந்து கொண்டேன். அதனால் ரிஸ்க் எடுத்து டெஸ்லாவில் சேர முடிவெடுத்தேன். ஆனால், அப்போதும் வேறு வழியில் சிக்கல் வந்தது.

டெஸ்லாவில் உடனடியாக வேலையில் சேர வேண்டும் என்றார்கள். வி.எம்.வேரில் முக்கியமான புராஜெக்ட்டில் இருந்தேன். அதனால் குறைந்தபட்சம் நான்கு வாரங்கள் தேவை எனச் சொன்னேன். அதுவே அதிகம் எனச் சொன்னார்கள். அதனால் `ஓவர் லேப்’ முறையில் வேலை செய்தேன். இரு வாரங்கள் விஎம்.வேரில் வேலை செய்துகொண்டே டெஸ்லாவிலும் வேலை செய்தேன். இரு நிறுவனங்களும் வெவ்வேறு துறைகளைச் சார்ந்தவை என்பதால், ஒரே சமயத்தில் வேலை செய்வதில் பிரச்னை இல்லை.’’

எலான் மஸ்க் உடன் வேலை செய்த அனுபவம் எப்படி இருந்தது?

‘‘ஆரம்பகாலங்களில் முன்பு செய்த வேலையைப்போல நான்கு மடங்கு வேலை அதிகமாக இருந்தது. கிட்டத்தட்ட நிறுவனத்துக்கான மொத்த சாஃப்ட்வேரையும் உருவாக்க வேண்டும். திடீரென ஒரு நாள் அழைத்து, ‘மூன்று மாதங்களில் மொத்த காரும் தயார் செய்ய வேண்டும்’ என்றார். தயார் செய்ய முடியாது என்பதல்ல, ஆனால், அதிக ரிஸ்க் இருந்தது. சாஃப்ட்வேர் தயார் செய்வது ஒரு வேலை என்றால், அதை ஹார்டுவேருடன் ஒருங்கிணைத்து காரைத் தயார் செய்வது வேறு வேலை. எனக்கு மட்டுமல்லாமல், எலான் மஸ்க்குடன் நேரடியாகத் தொடர்புகொள்ளும் 12 நபர்களுக்கும் அந்த ரிஸ்க் இருந்தது. தவிர, பட்டியலிடப்பட்ட நிறுவனம் என்பதால், இலக்கை எட்ட முடியவில்லை என்றால், பங்குச் சந்தையிலும் இதன் தாக்கம் இருக்கும் என்பதும் தெரியும்.

டெஸ்லா To டெகியான் சென்னைத் தொழிலதிபரின் யூனிகார்ன் ஸ்டார்ட்அப்! - ஓர் அசாத்திய சாதனை

இருந்தாலும் எலான் மஸ்க் கூறிய பிறகு மறுபேச்சுக்கு இடமில்லை. ‘இந்த வேலையை செய்துமுடிப்பதற்கான வாய்ப்பு குறைவு. அதே நேரத்தில், வேலையை விட்டு நீக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகம்’ என்னும் மனநிலையில்தான் வேலையைத் தொடங்கினோம். மூன்று மாதம் கால அவகாசம் கொடுத்தார்கள். சோதனை செய்வதற்கு ஒரு மாதம் கூடுதலாகச் செலவானது. இறுதியாக, எங்களுடைய சாஃப்ட்வேரிலேயே கார் தயாரானது. இப்போதும் அதே சாஃப்ட்வேரில் டெஸ்லா இயங்குகிறது. தற்போது ஒரு காலாண்டுக்கு இரண்டு லட்சம் கார்கள் டெஸ்லாவில் தயாரிக்கப்படுகிறது.’’

டெகியான் நிறுவனத்தின் ஆரம்பம் எப்படி?

‘‘டெஸ்லாவில் இருந்து கொஞ்சம் பிரேக் எடுக்கலாம் எனத் திட்டமிட்டேன். அப்போது எலான் உடன் பேசும்போது, ‘தேவைப்பட்டால் ஒரு வாரம் எடுத்துக்கொள்ளுங்கள்’ எனக் கூறினார். ‘போதாது; கூடுதல் நாள்கள் தேவை’ எனக் கூறி பிரேக் எடுத்தேன். அப்போது ஏர்பஸ் நிறுவனத்திடமிருந்து அழைப்புவந்தது. கிட்டத்தட்ட அந்த நிறுவனத்தின் சி.ஐ.ஓ பணிதான். ஏர்பஸ் தலைமையகம் சென்று அவர்களுடைய மொத்த அலுவலகத்தையும் சுற்றிப் பார்த்தேன். புதிதாகத் தயாரிக்கப்பட்ட விமானத்தில் சில மணி நேரம் பயணம் செய்தேன். இருந்தாலும் அப்போது என் மனதில் டெகியான் குறித்த சிந்தனை இருந்ததால், ஏர்பஸ்ஸில் சேரவில்லை.’’

2006-ம் ஆண்டு வரை கடன்; டெஸ்லாவில் குறைந்த சம்பளம். இந்த நிலையில், புதிய நிறுவனம் தொடங்க நினைத்தது ரிஸ்க் இல்லையா?

‘‘ரிஸ்க்தான், இருந்தாலும் இந்த பிசினஸ் மாடல் வெற்றியடையும் என நம்பிக்கை இருந்தது. தவிர, சர்வதேச அளவில் பெரிய நிறுவனங்களில் வேலை செய்திருந்ததால், நிறுவனத்தை நடத்த முடியும் என நம்பிக்கை இருந்தது. ஒருவேளை, தோல்வியடைந்தாலும் வேறு நல்ல வேலை கிடைக்கும் என்னும் நம்பிக்கை இருந்தது.’’

டெகியான் பிசினஸ் மாடல் என்ன?

‘‘தற்போது, வீட்டுக்குப் பிறகு கார் என்பது முக்கியமான விஷயமாக மாறியிருக்கிறது. ஆனால், கார் வாங்குவதில் இருந்து சர்வீஸ் வரை பல விஷயங்கள் உள்ளன. அந்த அனுபவம் பலருக்கு இனிமையானதாக இல்லை. காரணம், ஆட்டோமொபைல் துறை ஒருங்கிணைக்கப்படவில்லை. இதற்கேற்ப ஒரு மென்பொருளை உருவாக்க வேண்டும் எனத் திட்டமிட்டோம், இதுதான் டெகியான் நிறுவனத்தின் அடிப்படை. உதாரணத்துக்கு, ஒரு ஷோரூமுக்கு செல்கிறீர்கள்; ஒரு மாடல் கார் பிடித்திருக்கிறது. ஆனால், நீங்கள் விரும்பும் கலரில் அங்கே கார் இல்லையென்றால், அந்த கலரில் உள்ள கார் எங்கே இருக்கிறது, எத்தனை நாளில் அது உங்களுக்குக் கிடைக்கும் என்பது உள்ளிட்ட தகவல்களை ஒருங்கிணைத்து உடனுக்குடன் தெரிவிக்க முடியும். அதேபோல, ஒரு கார் பழுதடைந்துவிட்டால், அந்த காரில் என்ன பிரச்னை என்பதைத் தொழில்நுட்பம் மூலமே தெரிந்துகொண்டு, அந்த உதிரிபாகங்கள் எப்போது கிடைக்கும், பழுது எப்போது சரியாகும் என்பது வரையிலான அனைத்துத் தகவல்களையும் எங்களது மென்பொருள் வழங்கும். எங்களுடைய மென்பொருளை ஆட்டோமொபைல் தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் டீலர்கள் பயன்படுத்துவார்கள்.

அமெரிக்காவில் கார் விற்பனை மட்டும் 800 பில்லியன் டாலர் சந்தை. விற்பனைக்குப் பிறகான சேவையைச் சேர்த்தால், ஆண்டுக்கு ஒரு ட்ரில்லியன் டாலர் சந்தை. இதில் பெரிய வாய்ப்பு இருக்கிறது என்பதால், இந்த நிறுவனத்தைத் தொடங்கினோம்.’’

முதல் முதலீடு எப்போது கிடைத்தது?

‘‘முதல் இரு ஆண்டுகள் கடினமாக இருந்தது. சில தனிநபர்கள், நண்பர்கள் எனப் பலரும் முதலீடு செய்தார்கள். மூன்று மில்லியன் டாலர் இருந்தால், புரோட்டோடைப் தயார் செய்ய முடியும் என்பதால், ஆரம்பகட்டத்தில் இந்தத் தொகை போதுமானதாக இருந்தது. ஸ்டாம் வென்ச்சர் என்னும் முதலீட்டு நிறுவனம் முதல் முதலீடு செய்தது. அதைத் தொடர்ந்து சீரீஸ் ஏ (Series A) முதலீட்டை இண்டெக்ஸ் வென்ச்சர்ஸ் (10 மில்லியன் டாலர்) முதலீடு செய்தது. டீலர் மற்றும் ஓ.இ.எம் நிறுவனங்களிடம் எங்களுடைய சாஃப்ட்வேரைக் காண்பித்தோம். அனைவருக்கும் பிடித்திருந்தது. ஆனால், முதல் இரு ஆண்டுகளுக்கு பெரிய பிசினஸ் இல்லை. பிறகு ஆட்டோமொபைல் துறையைச் சேர்ந்த முதலீட்டு நிறுவனங்கள் வந்தன. பி.எம்.டபிள்யூ, நிஸான், ஜெனரல் மோட்டார்ஸ், ஏர்பஸ் உள்ளிட்ட பல நிறுவனங்கள் முதலீடு செய்தன. சமீபத்தில் சீரீஸ் சி முதலீட்டைப் பெற்றோம். 150 மில்லியன் டாலர் நிதியை ஒரு பில்லியன் டாலர் சந்தை மதிப்பில் பெற்றோம்.’’

நீங்கள் தனிப்பட்ட முறையில் முதலீடு செய்திருக்கிறீர்களா?

‘‘அமெரிக்காவில் சில ஸ்டார்ட்அப்களில் முதலீடு செய்திருக்கிறேன். பட்டியலிடப்பட்ட இரு நிறுவனங்களின் இயக்குநர் குழுவில் இருக்கிறேன். இந்தியாவைப் பொறுத்தவரை, பெங்களூரில் செயல்பட்டுவரும் இதெர் எனர்ஜி நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கிறேன்.’’

இந்தியாவில் தொழில் செய்வதற்கும் அமெரிக்காவில் தொழில் செய்வதற்கும் என்ன வித்தியாசம்?

‘‘அமெரிக்காவில் தொழில் செய்வது மிகவும் எளிது. இந்தியாவில் தொழில் சூழல் முன்பைவிட தற்போது மேம்பட்டு வருவது மகிழ்ச்சியளிக்கிறது. முன்பு மென்பொருள் என்றால், சேவை சார்ந்த நிறுவனங்கள்தான் இருந்தன. தற்போது புராடக்ட் நிறுவனங்கள் பலவும் செயல்பட்டுவருகின்றன.’’

ஆட்டோமொபைல் துறையைப் பொறுத்தவரை இந்தியாவும் சீனாவும் மிகப்பெரிய சந்தை. டெகியானின் திட்டம் என்ன?

‘‘சீனாவுக்கென பெரிய திட்டம் இல்லை. ஆனால், அடுத்த ஆண்டு இந்தியாவில் எங்களுடைய சேவை கிடைக்கும். இந்தியாவில் சென்னை, பெங்களூரில் அலுவலகம் இருப்பதால், எங்களால் உடனடியாகச் செயல்பட முடியும். ஆட்டோமொபைல் நிறுவனங்களும் ஆர்வம் காட்டி வருகின்றன.’’

எப்போது லாபம் ஈட்ட திட்டம்?

‘‘திட்டமிட்டால் அடுத்த ஆண்டுகூட லாபப் பாதைக்கு திரும்ப முடியும். ஆனால், வளர்ச்சி தடைபடும். வளர்ச்சிக்கான வாய்ப்பு இருப்பதால், லாபத்தை தற்போது முக்கியமாகக் கருதவில்லை. தவிர, வளர்ச்சிக்குத் தேவையான நிதி இருப்பதால், வளர்ச்சியில் கவனம் செலுத்துகிறோம். 2022-ம் ஆண்டு லாபப் பாதைக்குத் திரும்புவோம். இப்போது சேல்ஸ்ஃபோர்ஸ் (Salesforce) மாதிரி 20 ஆண்டுகள் கழித்து டெகியான் இருக்கும்’’ என உற்சாகமாகப் பேசி முடித்தார் ஜெய் விஜயன்.

சென்னையிலிருந்து மீண்டுமொரு உலக நிறுவனம் என்பதை நினைத்து நாம் பெருமைப்படலாம்!