‘என்னால் நெம்பர் 2-வாக இருக்க முடியாது’

22 வயதில் 15,000 ரூபாயுடன் பிஸினஸ் செய்ய ஆரம்பித்தார், பல கஷ்டங்களை அனுபவித்தார். இன்று இவரது நிறுவனத்தின் வருமானம் ரூ.1000 கோடிக்கு மேல் என்ற செய்தி நம் அனைவருக்கும் தெரியும்.

இதை தாண்டியும் சி.கே.ஆரிடம் பேசுவதற்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன. ஒரு காலைபொழுதில் அவரிடம் பேசியதிலிருந்து…

22 ‘பிஸினஸ் டு பிஸினஸ்’ என்பதை விட ‘பிஸினஸ் டு கஸ்டமர்’ என்பது கொஞ்சம் கஷ்டம் தான். நிறைய வாடிக்கையாளர்கள், கடைகள் என பலரையும் சந்திக்க வேண்டி இருக்குமே? எப்படி இருந்தது உங்களின் ஆரம்ப காலம்.?

ஆரம்ப காலத்தில் ரொம்பவும் கஷ்டப்பட்டோம் என்பதெல்லாம் உண்மைதான். ஆனால் அப்போது நான் செய்வது ‘பிஸினஸ் டு கஸ்டமரா’ அல்லது ‘பிஸின்ஸ் டு பிஸினஸா’ என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. நான் யார் கீழேயும் வேலை செய்யவில்லை. எனக்கு பிடித்த வேலை. எனக்கு இருந்த சுதந்திரம். நான் பிஸினஸ் செய்கிறேன் என்ற எண்ணம் மட்டுமே இருந்தது.

ஆரம்பகால பணச்சிக்கலை எப்படி சமாளித்தீர்கள்?
எஃப்.எம்.சி.ஜி. பிஸினஸில் உற்பத்தி செலவுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் மார்க்கெட்டிங் மற்றும் விளம்பரத்துக்கும் கொடுத்தாக வேண்டும். இருந்தாலும் என்னால் அதிக பணத்தை செலவு செய்ய முடியாது. அப்போது டி.வி. பிரபலமாகாத காலம். செய்தித்தாள்களில் தான் விளம்பரம் கொடுப்பார்கள். எனக்கு இருக்கும் 300 கடைகளுக்கு செய்தித்தாளில் விளம்பரம் கொடுப்பது தேவை இல்லாத செலவு. அதே சமயத்தில் போஸ்டர் அடித்தால் கூட 5,000 போஸ்டருக்கு மேல்தான் அடிக்க முடியும். அப்போது ஸ்கிரீன் பிரிண்டிங் இருந்தது. அதில் அவ்வப்போது தேவையான அளவுக்கு எடுத்துக்கொண்டு விளம்பரம் செய்தோம்.

எப்போது உங்களது நிறுவனத்தின் ஸ்டைலை மாற்றினீர்கள்?
என்னுடன் ஆரம்பத்தில் இருந்த அனைவரும் புதிய ஆட்கள், சக்தி மிகுந்த ஆட்கள். ஆனால் அனைவருக்கும் இந்த தொழில் புதிது. ஒரு கட்டத்தில் எங்களுடைய நேரம் வீணாகிக் கொண்டிருந்தது தெரிந்தது. அப்போதுதான் கொஞ்சம் வேலை தெரிந்தவர்களை எடுக்க ஆரம்பித்தேன். ஆரம்ப காலத்தில் நாங்கள் கடைக்காரரிடம் பணம்தான் வாங்கிக்கொண்டிருந்தோம். இதனால் எங்கள் சேல்ஸ்மேன் சம்ப்பந்தபட்ட ஊருக்குப் போய் வாங்கி வரவேண்டும். அங்குபோனால் கடைக்காரர் ஓரிரு நாளைக்கு இழுத்தடிப்பார். அதுவரைக்கும், எங்களது பிரதிநிதி அங்கேயே தங்கி இருந்து வாங்கினால் நிறுவனத்துக்கு கூடுதல் செலவு.

இந்த சமயத்தில் புதிய ஆட்கள் வந்து, இதெல்லாம் தேவை இல்லாத செலவு, எல்லா இடத்திலேயும் செக் வாங்கி கொள்ளலாம். கடைக்காரர் நமக்கு இல்லாவிட்டாலும் செக்குக்கு பதில் சொல்லி ஆகவேண்டும். பவுன்ஸ் ஆனாலும் பிரச்னை இல்லை. அது அவருடைய பிரச்னை என்று சொன்னபோது எங்களுக்கு நேரம் மீதமானது. அதன்பிறகு ஏ.எஃப்.பெர்குசன் என்ற கன்சல்டிங் நிறுவனத்திடம் பேசி எங்களுக்கான ஒரு சிஸ்டத்தை வடிவமைக்கச் சொல்லி கேட்டோம். என்னால் இவ்வளவுதான் முடியும். இந்த பட்ஜெட்டுக்குள் முடித்துக்கொடுங்கள் என்று கேட்டேன். அவர்களும் எங்களுக்காக இதை செய்துகொடுத்தார்கள்.

திருப்புமுனை எப்போது?

1993-ம் ஆண்டு சிறிய நிறுவனங்களுக்கும் 105 சதவிகிதம் உற்பத்தி வரி விதித்தது மத்திய அரசு. எங்களைப் போன்ற சிறிய நிறுவனங்களுக்கு இது மிகப்பெரிய கஷ்டம். வரி கட்டிவிட்டு பிஸினஸ் செய்ய முடியாது. இல்லை என்றால் வரிகட்டாமல் ‘நெம்பர் 2’வாக விற்க வேண்டும். இதில் எனக்கு உடன்பாடு இல்லை. நெம்பர் 2வாக இருந்தால் விளம்பரம் செய்ய முடியாது. வங்கியில் கடன் வாங்க முடியாது. ஒரு கட்டத்துக்கு மேல் பிஸினஸ் வளராது. அதனால் நான் துணிந்து விலையை ஏற்றினேன். என் ஊழியர்களிடமும் நான் மிகுந்த நம்பிக்கையில் இருப்பதாக பேசினேன். அவர்களுக்கும் நம்பிக்கை கொடுக்க அந்த வருடம் அவர்களுக்கு 40 சதவிகித ஊதிய உயர்வு அளித்தேன். மேலும் இதை சமாளிக்க ஐ.ஐ.எம். போன்ற இடங்களில் இருந்து தொழில்முறை நிர்வாகிகளை வேலைக்கு எடுத்தேன்.

இது ரிஸ்க்கான நடவடிக்கைதானே?

ரிஸ்க் என்பதையும் தாண்டி ‘கேம்ளிங்’ என்றுதான் சொல்ல வேண்டும். என்னால் நெம்பர் 2வாக இருக்க முடியாது. எனக்கு இருந்த ஒரே வழி இதுதான். அதைச் சிறப்பாக செய்வதைத் தவிர வேறு வழி இல்லை. ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும் ஒரு வருடத்துக்கு பிறகு நாங்கள் வேகமாக வளர ஆரம்பித்தோம். எம்.என்.சி. நிறுவனங்களுடனான போட்டி எப்படி இருந்தது? அவர்கள் டி.வி.களில் அதிக விளம்பரம் கொடுப்பார்கள். நாங்கள் நேரடியாக கடைகளில் டெமோ செய்தோம். அங்கேயே ஒரு குளியலறை போல அமைத்து மக்களுக்கு விளக்கம் கொடுத்தோம்.

உங்களது வளர்ச்சியை அவர்கள் எப்படி பார்த்தனர்?

பெயர் சொல்ல விரும்பவில்லை. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், சந்தையில் இருக்கும் முக்கிய நிறுவனங்கள் எங்களை இணைத்துக்கொள்ள விருப்பம் தெரிவித்தன. ஆனால், எங்கள் பிஸினஸில் எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது என்று சொல்லிவிட்டேன்.

பிரைவேட் ஈக்விட்டி மூலம் பணத்தை திரட்டி இருக்கிறீர்கள். இதற்கு பதிலாக ஐ.பி.ஓ. மூலம் பணத்தை திரட்டி இருக்கலாமே?

ஐ.பி.ஓ. மூலம் திரட்டி இருக்கலாம்தான். ஆனால் அந்த திட்டத்தை ஐந்து வருடத்துக்குப் பிறகு செயல்படுத்தலாம் என்று முடிவு செய்துவிட்டோம். பங்குச்சந்தையில் இருக்கும் பட்சத்தில் ஒவ்வொரு காலாண்டுக்கும் வளர்ச்சியை காண்பிக்க வேண்டி இருக்கும். ஆனால் இப்போதைக்கு டாப்லைன்(வருமானம்) வளர்ச்சி யில்தான் கவனம் செலுத்துகிறோம். நிலையான வருமானம் வரும்போது ஐ.பி.ஓ வருவோம்.

பேப்பர் டி.வி.யில் விளம்பரம் கொடுத்த காலம் போய் இப்போது சமூக வளைதளங்கள் வந்துவிட்டன. உங்களது தயாரிப்புகளும் அவற்றில் இருக்கின்றனவா?

பதில்: முக்கியமான சில பிராண்ட்களுக்கு சமுக வலைதளம் மூலம் புரமோஷன் கொடுத்துவருகிறோம். இன்னும் ஆறுமாதத்துக்குள் எங்களது அனைத்து பொருட்களையும் சமூகவலைதளங்கள் மூலம் மார்கெட்டிங் செய்வோம்.

பிஸினஸுக்கு டைவர்சிபிகேஷன் அவசியமா?

உங்களது பிஸினஸ் எப்படி இருக்கிறது.டைவர்சிபிகேஷன் அவசியம்தான். ஆனால் ஒரு கட்டுக்குள் இருக்க வேண்டும். ஆரம்பத்தில் நாங்கள் கொஞ்சம் கஷ்டப்பட்டோம். ஆனால் அனைத்தும் இப்போது கட்டுக்குள் இருக்கிறது.

பிரமிட் மீது ஏறும்போது நீங்கள் தனிமைபடுத்தப்படுவீர்கள். அதனால் உங்களது முடிவெடுக்கும் திறன் பாதிக்கப்படும்? நீங்கள் எப்படி முடிவெடுக்கிறீர்கள்?

எங்கள் நிறுவனத்தில் இருக்கும் ஊழியர்கள் என்னிடம் வந்து பேச முடியும். நான் அவர்களிடம் போய் பேச முடியும். இதை வைத்து முடிவுகள் எடுக்க முடியும். மேலும், ஒத்த அலைவரிசை இருக்க கூடிய, ஒரே பிஸினஸில் இல்லாத நண்பர்கள் மாதத்துக்கு ஒரு முறை சந்தித்து பேசுவோம். இது போல மூன்று, நான்கு ஊர்களில் குழுவை அமைத்திருக்கிறோம். இங்கு நாங்கள் என்ன பேசுகிறோம் என்பதை நாங்கள் வெளியே பேசுவதில்லை. அதே போல எங்களுக்கு பண உதவிகள் எதுவும் செய்துகொள்வதில்லை. இது முழுக்க முழுக்க அனுபவங்களை, அறிவுகளை பகிர்ந்துகொள்வதற்கான சந்திப்பு.

சமீபத்தில் நடந்த இன்னொவேஷன் விருதுகள் குறித்து?

ஷாசேவை அப்பா கண்டுபிடித்தபோது அதைக் காப்புரிமை செய்யாமல் விட்டுவிட்டார். கண்டுபிடிப்புகள் சந்தைக்கு வருவதற்கு முன்புதான் வாங்கவேண்டும். அவர் வாங்க வில்லை, ஒருவேளை காப்புரிமை செய்திருந்தால் 20 வருடங்களுக்கு நாங்கள் ‘மோனோபோலி’ ஆக இருந்திருப்போம். இதுபோல கண்டுபிடிப்பாளர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களை ஊக்குவிக்கதான் இந்த விருதுகள். பல சந்தர்ப்பங்களில், சந்தையில் இருக்கும் முக்கிய நிறுவனங்கள் எங்களை இணைத்துக்கொள்ள விருப்பம் தெரிவித்தன. ஆனால், எங்கள் பிஸினஸில் எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது என்று சொல்லிவிட்டேன்.

நன்றி ‘தி இந்து