முதலீடு செய்வதற்கு நிறுவனரின் தரம் முக்கியம்

வங்கி, இன்சூரன்ஸ், மியூச்சுவல் பண்ட் என அனைத்து துறைகளிலும் 25 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் மிக்கவர் சரவணகுமார்.

தற்போது எல்ஐசி நொமுரா மியூச்சுவல் பண்ட் நிறுவனத்தில் முதன்மை முதலீட்டு அதிகாரியாக (பங்குச்சந்தை மற்றும் கடன்சந்தை) இருக்கிறார். யூடிஐ மியூச்சுவல் பண்ட், எஸ்பிஐ மியூச்சுவல் பண்ட், ஐசிஐசிஐ வங்கி, டாடா ஏஐஏ லைப் இன்சூரன்ஸ் ஆகிய நிறுவனங்களில் முக்கிய பொறுப்பு வகித்தவர்; பாளையங்கோட்டையில் பள்ளிப்படிப்பையும், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பையும் முடித்துவிட்டு சில ஆண்டுகள் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றினார். ஐஐஎம் பெங்களூருவில் நிர்வாக படிப்பு முடித்தவர். மும்பையில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து உரையாடியதிலிருந்து…

உங்களுடைய தாய் நிறுவனம் எல்ஐசி இருந்தும் கூட உங்களிடம் சிறு முதலீட் டாளர்களின் பங்கு மிகவும் குறைவு. ஏன்?

இதற்கு இரண்டு காரணங்கள் சொல்லலாம். இந்த மியூச்சுவல் பண்ட் நிறுவனம் 1987-ம் ஆண்டு தொடங்கப் பட்டது. ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த நிறுவனத்தில் முக்கிய பொறுப்பில் இருந்த பலரும் எல்ஐசி நிறுவனத்தில் இருந்து (டெபுடேஷனில்) வந்தவர்களாகவே இருந்தனர். அவர்கள் ஆயுள் காப்பீட்டுத் துறையை சேர்ந்தவர்கள். அவர்களுக்கான இந்த டெபுடேஷன் பணி மூன்று ஆண்டுகளுக்கு மட்டுமே என்பதும் அவர்களுக்கே தெரியும்.

இதனை புரிந்துகொண்ட எல்ஐசி, தற்போது சிஓஓ, சிஐஓ, சிஎம்ஓ, பண்ட் மேலாளர்கள் என பலரையும் வெளி நிறுவனங்களில் இருந்து கொண்டு வந்திருக்கிறது.

அந்த வகையில் சிஐஓ-வாக, நான் பொறுப்பேற்றதில் இருந்து பல ஏஜென்டுகளை சந்தித்திருக்கிறேன். ஆனால் அவர்கள் காப்பீட்டுக்கு போட்டி யாக மியூச்சுவல் பண்டை நினைக் கிறார்கள். தவிர இன்சூரன்ஸில் அவர் களுக்கு கமிஷன் அதிகம். அதையும் தாண்டி, மியூச்சுவல் பண்டில் சராசரி யான முதலீட்டு காலம் ஐந்து ஆண்டு களுக்கு குறைவு. ஆனால் இன்சூரன் ஸில் 20 ஆண்டு திட்டம் என்பதால் அவர்கள் காப்பீட்டு திட்டங்களில் கவனம் செலுத்துகின்றனர்.

இப்போது எங்களுடைய நெட்வொர்க்கை விரிவாக்கம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிறோம். எங்களுடைய நிறுவனத்தில் கார்ப்ப ரேஷன் வங்கி 4 சதவீத பங்குகளை வைத்திருக்கிறது. மேலும் பல வங்கி களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம். பல விநியோகஸ்தர்கள், தனியார் வங்கிகளின் வெல்த் மேனேஜ் மென்ட் நிறுவன தலைவர்களிடம் பேசி வருகிறோம். எங்களுடைய முயற்சிகள் முடிந்து இப்போது வளர்ச்சி பெற தயா ராகிக்கொண்டிருக்கிறோம். இன்னும் இரண்டு ஆண்டுகளில் ரூ.40,000 கோடிக்கும் அதிகமான சொத்துகளை இந்த நிறுவனம் கையாளும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

எல்ஐசி நொமுரா நிறுவனத்தில் இருந்து நொமுரா வெளியேறிவிட்டது. இருந் தாலும் நொமுரா என்ற பெயர் தொடர் கிறதே? நிறுவனத்தின் பெயர் மாறுகிறதா?

நிறுவனங்கள் விவகாரத்துறை, செபி உள்ளிட்ட அமைப்புகளின் அனுமதிக்காக காத்திருக்கிறோம். அதன் பிறகு எல்ஐசி மியூச்சுவல் பண்ட் என்று பெயர் மாறும். தவிர நொமுரா 5 ஆண்டு ஒப்பந்தத்தில்தான் எங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தது. ஐந்து ஆண்டு முடிந்தது. ஒப்பந்தத்தை நீட்டிக்கவில்லை. அவ்வளவுதான்.

மியூச்சுவல் பண்ட் துறையில் இணைப்புகள் நடந்து வருகிறது. பல வெளிநாட்டு நிறுவனங்கள் வெளியேறி வருகின்றன. இது பற்றி உங்கள் கருத்து என்ன? எல்ஐசி நொமுராவுக்கு ஏதேனும் நிறுவனங்களை இணைக்கும் திட்டம் இருக்கிறதா?

நிறுவனங்கள் இணைப்பு என்பது இயக்குநர் குழு சம்பந்தபட்ட முடிவு அதுபற்றி நான் கருத்து சொல்ல முடியாது. ஒரு மியூச்சுவல் பண்ட் நிறுவனம் குறைந்தபட்சம் 15,000 கோடி ரூபாயை கையாளும் பட்சத்தில்தான் லாபம் சம்பதிக்க முடியும். லாபம் இல்லாமல் எவ்வளவு நாட்களுக்குதான் நிறுவனத்தை நடத்த முடியும். அதனால் சிறிய நிறுவனங்கள் தொடர முடியாத சூழ்நிலை உள்ளது. அதே சமயத்தில் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் இருந்து வெளியேறியதற்கு, அந்த நிறுவனங்களின் சர்வதேச பிரிவு செயல்பாடும் ஒரு காரணமாகும்.

பொதுவாக வங்கி சார்ந்த பண்ட்கள் ஓரளவு வருமானம் கொடுக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆனால் கடந்த ஒரு ஆண்டில் உங்களுடைய வங்கி சார்ந்த பண்ட் மிகவும் கடுமையாக சரிந்திருக்கிறதே?

கடந்த ஒரு ஆண்டில் மொத்த வங்கித்துறையே கடுமையாக சரிந்தது. அதைவிட எங்களுடைய பண்ட் கூடுத லாக சரிந்தது என்பதை ஒப்புக்கொள் கிறேன். பொதுத்துறை வங்கி பங்கு களின் மதிப்புகள் கவர்ச்சிகரமாக இருப் பதால் முதலீடு செய்வது என்ற முடிவை எடுத்தோம். ஆனால் எங்களுடைய முதலீட்டுக்கு பிறகு அந்த பங்குகள் சரிந்தன. கடந்த பட்ஜெட்டுக்கு பிறகு பொதுத்துறை வங்கி பங்குகள் உயர தொடங்கி இருக்கின்றன.

மியூச்சுவல் பண்ட் துறை மீது அவ்வப் போது செபி ஏதேனும் ஒரு விதிமுறையை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. இது சரி என்று நினைக்கிறீர்களா?

அமெரிக்கா, ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளின் பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையங்களின் விதிமுறையை படித்திருக்கிறேன். அவை கடுமையாக இருக்கும். இதுபோல கடுமையாக விதிமுறைகள் இருப்பதால் முதலீட் டாளர்களுக்கு நம்பிக்கை அதிகரிக்கும். அதனால் செபியின் அணுகுமுறை சரியானதே.

எந்த அடிப்படையில் ஒரு பங்கில் முதலீடு செய்கிறீர்கள்?

நான் நிறுவன முதலீட்டாளராக இருக்கலாம். ஒரு பங்கில் 50 கோடி ரூபாய் எங்களால் முதலீடு செய்ய முடியும். ஆனால் அந்த நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு 10,000 கோடி ரூபாயாக இருக்கும்பட்சத்தில் நானும் ஒரு சிறு முதலீட்டாளர்தான். நிறுவனத்தின் ஒழுங்கு மற்றும் நிறுவனரின் தரம் ஆகியவை சிறப்பாக இருந்தால் மட்டுமே சிறுமுதலீட்டாளர்களின் நலன் பாதுகாக்கப்படும். நல்ல நிறுவனர் இருக்கும் பட்சத்தில் முதலீட்டாளர்களின் பணம் வீணாகாது.

நீங்கள் பங்குச் சந்தை மற்றும் கடன் சந்தை சார்ந்த முதலீடுகளை கையாளுகிறீர்கள். பங்குச் சந்தையை எடுத்துக் கொண்டால் பல பங்குகளை பின் தொடர்ந்து வாங்க வேண்டி இருக்கும். ஆனால் கடன் சந்தையில் அவ்வளவு பளு இருக்கிறதா?

பளுவை விட கடன் சந்தையில் அதிக ரிஸ்க் இருக்கிறது. பங்குச்சந்தை முதலீடு சரியில்லை என்றால் வெளி யேறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. உதாரணத்துக்கு 100 ரூபாய்க்கு பங்குகள் வாங்கிறோம், 80 ரூபாய்க்கு கீழே செல்கிறது என்றால் விற்க முடியும். ஆனால் கடன் பத்திரங்களில் மொத்த முதலீடும் திரும்பி வராது. சமீபத்தில் பல நிறுவனங்களின் கடன் பத்திரங்களில் பிரச்சினை ஏற்பட்டதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

முதலீட்டாளர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது என்ன?

மிகவும் குறைந்தவிலையில் வாங்கி, மிகவும் அதிக விலையில் விற்பது என்பது நடக்காது. அதனால் பங்குச் சந்தை மீது நம்பிக்கை வைத்து தொடர்ந்து எஸ்ஐபி முறையில் முதலீடு செய்ய வேண்டும். இப்போது படித்தவுடனேயே இளைஞர்களுக்கு நல்ல வேலை கிடைக்கிறது என்பதால் சீக்கிரம் முதலீட்டை தொடங்குவது எதிர்காலத்துக்கு நல்லது.

நன்றி தி இந்து.