’ஐயம் ஏ காம்பிளான் பாய்…’ என்னும் விளம்பர வாசகத்தை யாரும் அவ்வளவு எளிதாக மறந்திருக்க முடியாது. Kraft Heinz நிறுவனத்தின் ஒரு முக்கிய பிராண்ட்தான் காம்பிளான். கடந்த சில மாதங்களாக இந்த பிராண்ட் விற்கப்படும் என்னும் பேச்சு உலா வந்த நிலையில் அக்டோபர் 24-ம் தேதி ஜைடஸ் குழுமம் இதை வாங்கி இருக்கிறது. காம்பிளான் மட்டுமல்லாமல் குளுகான், நைசில், சம்பிரிதி நெய் ஆகிய பிராண்டுகளையும் Kraft Heinz விற்றிருக்கிறது. இதன் மதிப்பு ரூ.4,595 கோடி.

நடப்பு நிதி ஆண்டின் நான்காம் காலாண்டில் இந்த இணைப்பு முழுமையாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் ketchup, sauce and mayo ஆகிய பிராண்டிகளை கிராப்ட் ஹென்ஸ் நிறுவனம் விற்கவில்லை. டாடா குழுமம் மற்றும் கோக கோலா ஆகிய நிறுவனங்களும் காம்பிளான் பிராண்டினை வாங்குவதற்கான போட்டியில் இருந்ததாக கடந்த ஆகஸ்ட் மாதம் தகவல்கள் வெளியாகின.

image

ஏற்கெனவே ஜைடஸ் குழுமம் வசம் சுகர் ஃபிரி (Sugar Free), எவர் யூத், நியூட்டிரிலைட் ஆகிய முக்கியமான பிராண்ட்கள் உள்ளன. தற்போது கையகப்படுத்தப்பட்ட பிராண்ட்கள் இந்திய சந்தையில் 50 ஆண்டுகளாக இருப்பவை என்பது கவனிக்கத்தக்கது.

1933-ம் ஆண்டு ’குளுகோன் டி’ அறிமுகம் செய்யப்பட்டது. காம்பிளான் 1969-ம் ஆண்டு முதல் இந்திய சந்தையில் இருக்கிறது. அதேபோல நைசில் பிராண்டும் 1951-ம் ஆண்டு முதல் இந்திய சந்தையில் விற்பனையாகி வருகிறது.

விற்பதற்கு என்ன காரணம்?

`மால்ட் பேஸ்டு டிரிங்க்ஸ்’ என்னும் பிரிவில் காம்பிளான், ஹார்லிக்ஸ் ஆகியவை உள்ளன. இதில் ஹார்லிக்ஸ் பிராண்ட் மிகப்பெரிய சந்தையை வைத்திருக்கிறது. ஆனால் இந்த இரு பிராண்டுகளும் விற்பது குறித்து கடந்த சில மாதங்களாக திட்டமிட்டு வந்தன.

சில பல ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் பால் பற்றாக்குறை இருந்தது. அதனால் இது போல ஊட்டச்சத்து பானங்களை மக்கள் அதிகம் விரும்பினார்கள். தற்போது போதுமான அளவுக்கு இந்தியாவில் பால் இருப்பதால் கூடுதல் ஊட்டச்சத்து சேருவதை மக்கள் விரும்புவதில்லை. தவிர வழக்கமான ஊட்டச்சத்துகளை விட மற்ற இதர வாய்ப்புகளும் மக்களுக்கு இருக்கிறது.

இயற்கை மற்றும் ஆயுர்வேதம் சார்ந்த ஊட்டச்சத்து பானங்களை மக்கள் நாட தொடங்கினார்கள். இதன் காரணமாக ஒட்டு மொத்த மால்ட் பேஸ்டு டிரிங்க்ஸ் பிரிவின் வளர்ச்சி 13.2 சதவித வளர்ச்சியில் இருந்து (2013) 8.6 சதவீத வளர்ச்சியாக (2017) குறைந்துவிட்டது. மேலும் வரும் காலத்திலும் இந்த பிரிவின் வளர்ச்சி குறையும் என்னும் கணிப்பு வந்திருக்கிறது. இதன் காரணமாக காம்பிளான் மற்றும் ஹார்லிக்ஸ் பிராண்டுகளை விற்க சம்பந்தபட்ட நிறுவனங்கள் முடிவு செய்தன.

ஏன் காம்பிளான்?

இரண்டு பிராண்டுகளும் விற்பனைக்கு தயாராக இருக்கும் போது ஜைடஸ் நிறுவனம் ஏன் காம்பிளானை வாங்க வேண்டும் என கேள்வி எழும். இதற்குக் காரணம் ஹார்லிக்ஸ் பிராண்ட் அதிக சந்தை மதிப்பை வைத்திருக்கிறது. அதனால் இந்த பிராண்டினை வாங்குவதற்கு அதிக தொகை வழங்க வேண்டி இருக்கும். அதனால் காம்பிளானை வாங்க ஜைடஸ் முடிவெடுத்தது. தவிர நைசில், குளுகான் டி உள்ளிட்ட பிராண்டுகளை மருந்து கடைகளில் விற்க முடியும். மருத்து கடைகளில் ஜைடஸ் நிறுவனத்துக்கு ஏற்கெனவே நெட்வொர்க் இருப்பதால் காம்பிளானை வாங்க ஜைடஸ் முடிவெடுத்தது. இதுதவிர ஹென்ஸ் நிறுவனத்துக்கு 800-க்கும் மேற்பட்ட வினியோகஸ்தர்கள் இருக்கிறார்கள். இந்த நெட்வொர்க் மூலம் ஜைடஸ் பொருட்களை விற்க முடியும் என்பதும் ஒரு காரணம்.

அடுத்தது ஹார்லிக்ஸ்?

காம்பிளான் விற்பனையை தொடர்ந்து ஹார்லிக்ஸ் பிராண்ட் விற்பனை துரிதப்படுத்தப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிகின்றன. க்ளாக்ஸோ ஸ்மித்லின் (GSK) நிறுவனம் இதற்கான ஆரம்ப கட்ட வேலையை தொடங்கி இருக்கிறது. பெப்சிகோ, கோக கோலா, நெஸ்லே, கெல்லாக், ஜெனரல் மில்ஸ் மற்றும் யுனிலீவர் ஆகிய நிறுவனங்கள் ஹார்லிக்ஸ் பிராண்டினை வாங்கும் போட்டியில் இறங்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கையகப்படுத்தல் குறித்து சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் கருத்து தெரிவிக்கல்லை என்றாலும் இந்த ஆண்டு இறுதிக்குள் இதற்கான அறிவிப்பு வெளியாகலாம் என தெரிகிறது.

ஐடிசி நிறுவனமும் இந்த போட்டியில் இருந்தது. ஆனால் இந்த பிராண்டுகள் எங்களுக்கு ஏற்றது அல்ல என பின் வாங்கியது கவனிக்கத்தக்கது.

இன்னும் சில மாதங்களில் ஹார்லிக்ஸ் விற்பனை குறித்த செய்தியை நாம் படிக்கலாம்

நன்றி: யுவர்ஸ்டோரி தமிழ்